சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின் போது ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் உரையாற்றிய ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து குறிப்பால் உணர்த்தினார்.
இது குறித்து நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் போது, 'ரஜினியை ஒரு நடிகராக கொண்டாடுகிறேன். அவர் எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிக்கட்டும். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கட்டும். ஆனால் அரசியல் என்பது அவரது மனநிலைக்கு ஒத்துவராது. அரசியல் தவிர வேறு எந்த விஷயம் செய்தாலும் ரஜினியை நான் வரவேற்கிறேன்.
முதல்வராகும் தகுதி மண் சார்ந்தவருக்கே உள்ளது. நடிகர் ரஜினி முதல்வராக வேண்டாம். எம்ஜிஆர் தமிழன் இல்லாத போதும் ஏற்றுக்கொண்டோமே என்ற கேள்வி எழும். நமது மக்கள் எம்.ஜி.ஆரை மலையாளியாகப் பார்க்கவில்லை. அது நம் மக்களின் பெருந்தன்மை. ஆனால், இந்த மண்ணை இங்கேயே பிறந்து வளர்ந்த எங்கள் அளவுக்கு ரஜினியால் நேசிக்க முடியாது.
தமிழர்களாகிய தங்களுக்கு வரலாறு, மொழி, பண்பாடு தெரியும், இந்த மண்ணிண் பழம்பெரும் வாழ்க்கை முறைகளை நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். எங்கள் மக்களுக்கும் என் தாய், தந்தை, சகோதரிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்த்து பார்த்து செய்ய இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனால் மட்டுமே முடியும்’ என்றார், சீமான்