scorecardresearch

ரஜினி – ஆர்.எம். வீரப்பன் சந்திப்பு! ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்!

இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த உணவுத்துறையை பறித்தார்

ரஜினி – ஆர்.எம். வீரப்பன் சந்திப்பு! ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்!

ரசிகர்கள் உடனான இரண்டாம் கட்ட சந்திப்பின் போது, ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தனிக்கட்சித் தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று அறிவித்தார் ரஜினிகாந்த்.

இதைத் தொடர்ந்து, தனி வெப்சைட், கலைஞர் கருணாநிதியுடன் சந்திப்பு என தினம் ஒரு ப்ளாஷ் நியூஸை வழங்கி வருகிறார் ரஜினி.

இந்தச் சூழ்நிலையில், இன்று மதியம் ரஜினிகாந்த் வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழக தலைவருமான ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து ஆசி பெற்றார்.

தனது வீட்டுக்கு வந்த ரஜினியை ஆர்.எம்.வீரப்பன் வரவேற்று அழைத்துச் சென்றார். அவருக்கு ரஜினி பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து அரசியல் நிலவரம் தொடர்பாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது ரஜினிக்கு ஆர்.எம்.வீரப்பன் ஆசி வழங்கியதுடன் சில ஆலோசனைகளையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ரஜினியின் மூன்றுமுகம், தங்கமகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாட்ஷா ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன் தான்.

14.7.95ல் நடைபெற்ற பாட்ஷா வெற்றி விழாவின் போது மேடையில், அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், “தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருகிறது. கடும் நடவடிக்கை எடுத்து, இதை உடனடியாக நிறுத்த வேண்டும் . இல்லையேல், தமிழகம் சுடுகாடாகிவிடும்” என கடுமையாக ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த உணவுத்துறையை பறித்துக் கொண்டார். சில நாட்கள் கழித்து, அமைச்சர் பதவியில் இருந்து ஆர்.எம்.வீ நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், இன்று ரஜினிகாந்த் அவரை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rajini met rm veerappan

Best of Express