‘இவ்வளவு வெளிப்படையாக ரஜினி சந்திக்கமாட்டார்’! – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன்! பின்னணி என்ன?

தனது அரசியல் மூவ் குறித்த செய்திகள் வெளியாவதை ரஜினி ரசிக்க மாட்டார்

தேர்தல் நெருங்கினாலே, கட்சித் தலைவர்களின் சாதாரண சந்திப்பு கூட ஊடகங்களால் அசாதாரணமாக்கப்படுவது வழக்கம். அதில் தவறும் கிடையாது. தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுக்களைவிட, தலைவர்களுக்கு வேறு முக்கிய விவாதம் இருக்கப் போவதில்லை. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் திருநாவுக்கரசர் நீக்கப்பட்ட காரணம் குறித்து லீக்கான பல விஷயங்களில், ‘அமெரிக்காவின் ரஜினியை திருநாவுக்கரசர் சந்தித்தார்’ என்ற காரணமும் ஒன்று!. அந்தளவிற்கு, சாதாரண சந்திப்புகள் கூட  முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அப்படியொரு சந்திப்பு தான் ரஜினி – திருநாவுக்கரசர் – திருமாவளவன் இடையே இன்று நிகழ்ந்துள்ளது. இவர்கள் மூவரையும் ஒரே புள்ளியில் இணைத்தது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம்.

ஆம்! விரைவில் நடைபெறவுள்ள சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை கொடுக்க அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் வீட்டிற்கு ரஜினிகாந்த் இன்று காலை சென்றார். அப்போது அங்கே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இருந்திருக்கிறார்.

இருவரையும் சந்தித்த ரஜினி, சுமார் அரைமணி நேரம் வரை பேசியதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இது திட்டமிடப்பட்ட சந்திப்பு இல்லை என்றும், அவரது மகள் திருமணத்திற்கு அழைக்கவே ரஜினி வந்ததாகவும் கூறினார். மேலும், நடப்பு அரசியல் குறித்தும், நிலவரம் குறித்தும் ரஜினியிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம், அண்மையில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கலந்துகொண்டதற்காக திருநாவுக்கரசருக்கு நன்றி தெரிவிக்க திருமாவளவன் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், திருமாவளவன் – ரஜினி சந்திப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது இல்லை என்றும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, ‘ரஜினியைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரம் தொடர்பாக திருநாவுக்கரசரையும், திருமாவளவனையும் சந்திக்க நினைத்தால், இவ்வளவு வெளிப்படையாக, புகைப்படங்கள் வெளியாகும் சகிதம் சந்திக்கமாட்டார். அவர்களை தனியாக அழைத்து பேசி இருப்பார். தவிர, தனது அரசியல் மூவ் குறித்த செய்திகள் வெளியாவதை ரஜினி ரசிக்க மாட்டார். எனவே, இது திட்டமிடப்பட்ட சந்திப்பாக இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

எது எப்படியோ… கமல்ஹாசனை அனுசரித்து, ரஜினியை விமர்சிக்கும் திமுகவின் கூட்டணியின் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த திருநாவுக்கரசரையும், திமுகவின் தோழமை கட்சியாக இருக்கும் விசிகவின்  திருமாவளவனையும் ரஜினியை சந்தித்து இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajini met thirunavukkarsar thirumavalavan

Next Story
‘டாஸ்மாக் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கலாமா?’ – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com