ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா? அமைச்சர்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக்!

மைக்கை பிடித்த ரஜினி, ஜெயலலிதாவை திரும்பிப் பார்த்து அவரை நோக்கி விரலை சொடுக்கி...

பொத்தாம் பொதுவாக ‘சிஸ்டம் சரியில்லை’ என்று சொன்ன ரஜினியையும், ‘தற்போதைய தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது’ என்று சொன்ன கமலையும் அதிமுக அமைச்சர்கள் காரசார பதில்களுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, அனைத்து அதிமுக தலைவர்களும் ஒரு சேர சொல்லும் ஒரு கருத்து, “அம்மா இருந்த போது ரஜினியும், கமலும் அமைதியாக இருந்தது ஏன்? அம்மா இருந்திருந்தால் இவர்கள் இப்படி பேச முடியுமா? என்பதுதான்.

அப்படி கூறுபவர்களுக்கு ஒரு சிறிய ஃபிளாஷ்பேக்… ரஜினியும் சோவும் எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்தே நெருக்கமான நண்பர்கள்தான். ஆனால் ரஜினியை அரசியல் களத்தை நோக்கி நகர்த்த சோ முற்பட்டது 1992-க்குப் பிறகுதான். அப்போது முதல்வராக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நேரம் அது. அப்போதுதான் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் நேரடியாகவே உரசல் ஏற்பட்டது. குறிப்பாக, 1995-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில்,  சிவாஜி கணேசனுக்கு ‘செவாலியே’ பட்டம் அளித்த விழாவில், ஜெயலலிதா முன்னிலையிலேயே ரஜினி அவரை விமர்சனம் செய்தார்.

‘செவாலியே’ விருது விழாவில்  பங்கேற்பதற்கு முன்பு, திரைப்படத் துறைக்காக ஜெயலலிதா ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக அளிக்கும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ‘செவாலியே’ விருது வழங்கும் விழாவில் நன்றியுரை பேச வந்தார் ரஜினி. நன்றியுரை தானே… பெரிதாக என்ன சொல்லிவிடப் போகிறார் என்று நினைத்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

மைக்கை பிடித்த ரஜினி, ஜெயலலிதாவை திரும்பிப் பார்த்து அவரை நோக்கி விரலை சொடுக்கி “நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்… நீங்க திறந்து வெச்சீங்களே… ஃபிலிம் சிட்டி… அப்பவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதைச் செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில், அவரை உட்கார வெச்சுக் கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு! தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம்.

அப்போ பண்ண தப்பை இப்போ சரிபண்ணிட்டீங்க. இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடத்த உதவி பண்ணி, வந்து கலந்துக்கிட்டு சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணாலும் தப்புன்னு சொல்வேன். அது குடிமகனோட உரிமை; அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு” என்றார்.

ரஜினியின் பேச்சுக்கு கைத்தட்டுவதா வேண்டாமா, என யோசித்து யோசித்து அனைவரும் கைத்தட்டிக் கொண்டிருந்தனர். இவை அனைத்தையும் எந்தவித சலனமுமில்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

தொடர்ந்து பேசிய ரஜினி, “திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை இலவசமாக தமிழக அரசு அளித்திருக்கிறது. திரைப்படத் துறைக்கு ஏராளமான சலுகைகளை முதல்வர் வழங்கிவிட்டார். அதனால் திரைப்படத் துறையினர் இனியும் கோரிக்கைகளை வைத்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்றார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே இந்த அளவிற்கு வேறு யாரும் அவரை விமர்சித்திருக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், இதனை நிகழ்த்திக் காட்டியவர் ரஜினிகாந்த்.

×Close
×Close