தமிழக அரசியல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரைத்துறையைச் சார்ந்தவர்களாலேயே நடத்தப்பட்டு வந்துள்ளது. அதனால், தமிழக அரசியல் களத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருக்கிறது.
சினிமா பின்னணியோடு தமிழக அரசியலில் இரு பெரும் துருவங்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அத்தகைய சினிமா பின்னணி கொண்ட தலைமைக்கான இடத்தை அடைய பல நட்சத்திர நடிகர்களும் தங்கள் விருப்பங்களைத் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடும்படியாக கனிசமான வாக்குகளைப் பெற்றார்.
கமல்ஹாசனின் நீண்ட கால நண்பரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற ரஜினியும் தான் அரசியலுக்கு வருவேன் என்பதை உறுதி செய்தார். அதோடு, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்து தனது ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில்தான், நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவருடைய கலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கமும் விஜய் டிவியும் இணைந்து உங்கள் நான் என்று கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தியது.
இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவருக்கும் இடையே உள்ள 40 ஆண்டுகால நட்பை பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் பேசிய கமல்ஹாசன், “2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும்.” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “சித்தாந்தங்கள் வேறுபட்டாலும் ரஜினிக்கும் தனக்கும் இடையேயான 43 ஆண்டு கால நட்பை கைவிடமாட்டோம்” என தெரிவித்தார்.
இதன் மூலம், தமிழக அரசியலில் ரஜினி - கமல்ஹாசன் இருவரும் இணைவார்களா என்ற விவாதம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, ஒடிஷாவில் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நண்பர் ரஜினியுடன் அவசியம் வந்தால் சேர்ந்து பயணிப்போம். தமிழகத்தின் மேம்பாட்டுக்கா சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை வந்தால் சேர்ந்து பயணிப்போம்” என்று கூறினார்.
கோவாவில் நடைபெற்று வருகிற 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிகழ்சியில் நடிகர் ரஜினிகாந்த் கோல்டன் ஜுப்ளி ஐகான் விருது பெற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களுடைய நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக் இணைவோம்” என்று கூறினார்.
ரஜினி - கமல்ஹாசன் இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக் மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படத் தயார் என்று கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினி - கமல்ஹாசன் இருவரும் மக்களின் நலனுக்காக சூழல் ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்று கூறியிருப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் கூறுகையில், “எங்கள் தலைவர் கமல்ஹாசனும் தேவை ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார். ரஜினியும்கூட முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது அந்த நேரத்தில் முடிவு செய்ய வேண்டியது என்று கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் முழுதாக ஒரு முடிவை சொல்ல முடியாது. சொல்லமாட்டார்கள். ஆனால், இப்போது அந்த கதவு திறந்திருக்கிறது.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிதல் உள்ளவர்கள். இருவரும் எதிரெதிராக படம் பண்ணாலும் ஒருவரை ஒருவர் விமர்சித்தது கிடையாது. எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவரும் அண்ணன் தம்பிகள் என்று கூறிக்கொண்டாலும் அவர்கள் இருவரும் விமர்சித்துள்ளார்கள். ஆனால், ரஜினி - கமல் அப்படி விமர்சித்துக்கொண்டதாக வரலாறு இல்லை.
இருவருடைய நட்பு நோக்கம் ஒன்றுதான் அதனால் அவர்கள் இணைவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது. மற்றபடி இருவரும் ரசனை போன்ற விஷயங்களில் வேறுபடத்தானே செய்வார்கள். மக்கள் நலன் என்று வரும்போது சித்தாந்தங்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். வேறு வேறு முகங்களுடன் ஒரே மாதிரியாக ஊழல் ஆட்சியை செய்கிற இரண்டு கட்சிகளின் ஆட்சியை அகற்றுவதற்கு இவர்கள் இணைவதுதான் ஒரே வாய்ப்பு என்றால் இவர்கள் இருவரும் இணைந்துவிடுவார்கள்.” என்று கூறினார்.
கமல்ஹாசன் பாராட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த முரளி அப்பாஸ், “அவருக்கு அரசியல் ஆர்வமும் பொது விஷயங்களில் விமர்சனமும் இருக்கிறது. இது போன்ற எண்ணம் இருக்கிற அவர் தனது மகனும் வரனும் என்று கூறியிருக்கலாம். ரஜினி - கமல் இணைந்தால் அவருகூட வந்து இணையலாம். ரஜினி - கமல் இணையும்போது ஒரு சிறிய பரவசம் ஏர்படும். அதனால், எதிர்பார்க்காத இடங்களில் இருந்து எல்லாம் ஆதரவு வரும். நிச்சயமாக 2021 தேர்தலில் அதிசயம் நடக்கும்” என்று கூறினார்.
ரஜினி - கமல் பேச்சு குறித்து, காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், “2021 ஏப்ரல் மாதம் தான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இடையில் இன்னும் 18 மாதம் இருக்கிறது. 18 மாதத்துக்குப் முன்னரே அரசியலில் யார் யாருடன் இருப்பார்கள் என்று சொல்வது என்பது யாராலும் முடியாது. எவ்வளவு தேர்ந்த அரசியல் கணிப்பாளர்களாக இருந்தாலும் கணிக்க முடியாது. கமல்ஹாசனோ ரஜினியோ இரண்டுபேரும் பத்திரிகையாளர்களை அழைத்து நாங்கள் இருவரும் சேர்ந்து செயல்படப்போகிறோம் என்று சொல்லவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்கும்போது 40 ஆண்டு கால நண்பர்கள் என்ற வகையில் வாய்ப்பு இருந்தால் செயல்படுவோம் என்று நாகரிகமாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.
இரண்டு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கரைபடியாத கரங்களுடன் வருபவர்களை மக்கள் ஆதரிக்கப்பட வேண்டும். அது வரவேற்கத்தக்கது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.” என்று கூறினார்.
தமிழக அரசியலில் ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று கூறி இருவரும் மக்கள் நலன் கருதி இணையவேண்டிய சூழல் ஏற்பட்டால் இணைவோம் என்று கூறியிருப்பது, சினிமாவில் இணைந்து நடித்த இருவரும் அரசியலிலும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். அதுவரை காத்திருப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.