அதிமுக- பாஜக திடீர் நெருக்கம்: பின்னணியில் ரஜினி

அதிமுக- பாஜக இடையே நிலவிய இடைவெளியையும் ரஜினி பயன்படுத்த ஆரம்பித்ததாக தகவல்கள் வந்தன.

அதிமுக- பாஜக இடையே நிலவிய இடைவெளியையும் ரஜினி பயன்படுத்த ஆரம்பித்ததாக தகவல்கள் வந்தன.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth alliance, aiadmk, bjp, ரஜினிகாந்த், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதாக் கூட்டணி

Rajinikanth alliance, aiadmk, bjp, ரஜினிகாந்த், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதாக் கூட்டணி

ரஜினியை மையமாக வைத்து அரசியல் ஆட்டம் தமிழ்நாட்டில் விறுவிறுப்பு அடைகிறது. இதன் பின்னணியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

Advertisment

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செப்டம்பர் 25-ம் தேதி வெளியிட்ட ஒரு ட்வீட், அரசியல் பார்வையாளர்களை உற்று நோக்க வைத்தது. அந்த வாசகம் இதோ...

‘‘அண்ணே.... பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?’’

‘‘இல்லப்பா.... அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்’’

Advertisment
Advertisements

தமிழ்நாட்டில் பலரும் பிரசாந்த் கிஷோரை சுற்றி வருவதை இப்படி நையாண்டி செய்திருந்தார் டாக்டர் ராமதாஸ். ‘அன்புமணிக்கு வியூகம் வகுப்பாளரை நியமித்து, நீங்க புரமோட் பண்ணலையா?’ என இதற்கு எழுந்த எதிர்வினை ஒருபக்கம்! எனினும் மும்பையில் நடிகர் ரஜினிகாந்தும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து உரையாடியதாக கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இப்படி ‘ட்வீட்’டியிருந்தார் ராமதாஸ்.

சட்டமன்றத் தேர்தலில் அரசியலுக்கு வருவதை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட ரஜினிகாந்த், அதற்கான ஆலோசனைகளின் ஒரு கட்டமாகவே பிரசாந்த் கிஷோரை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் கிஷோர் முன்வைத்த முக்கிய ஆலோசனை, ‘தமிழக அரசியலில் கூட்டணி இல்லாமல் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது’ என்பதுதானாம்.

ரஜினிகாந்தைப் பொறுத்தவரை, இயல்பாகவே தன்னை வலதுசாரி ஆதரவாளராக வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் தேசியம், திராவிடம் என்கிற எல்லைகளைத் தாண்டி, தேசிய- தெய்வீக உணர்வுள்ள வாக்காளர்களே அவரது குறி! காங்கிரஸுடன் கை கோர்ப்பது குறித்து ரஜினி சிந்திக்க முடியவில்லை. காரணம், காங்கிரஸ்- திமுக அணியில் இது தேனிலவுக் காலமாக தெரிகிறது. அதேசமயம், கொள்கை கோட்பாடுகள் அடிப்படையிலும், நடைமுறை சாத்தியங்கள் அடிப்படையிலும் ரஜினிக்கு இருக்கிற ஆப்ஷன், பாஜக.தான்.

பாஜக தமிழகத்தில் தன்னை பெரும் சக்தியாக நிரூபிக்கவில்லை. ஆனால் தேமுதிக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவற்றை ஒரு அணியில் இணைப்பதில் பாஜக.வின் பங்கை புறம் தள்ள முடியாது. இந்த அடிப்படையில் பாஜக.வுடன் அணி சேர்வதற்கான ஆயத்தப் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கியதாக கூறுகிறார்கள்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக.வின் பிரசாரத்தை அதிமுக அதிகம் பயன்படுத்தவில்லை. இதனால் அதிமுக- பாஜக இடையே நிலவிய இடைவெளியையும் ரஜினி பயன்படுத்த ஆரம்பித்ததாக தகவல்கள் வந்தன.

ரஜினி- பாஜக இடையிலான ‘மூவ்’களை அதிமுக தரப்பும் சரியாக மோப்பம் பிடித்தது. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறுகிறார்கள். அதன் எதிரொலிதான், அமைச்சர் ஜெயகுமார் நேரடியாக கமலாலயம் சென்று, பாஜக.வை கூல் செய்தது!

ரஜினியின் முயற்சியை அதிமுக முறியடித்திருக்கிறது என்று இதை கூறலாம். அல்லது, மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக.வை கைவிட முடியாத கட்டாயத்தில் அதிமுக இதை செய்திருப்பதாகவும் சொல்ல முடியும். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவிகித இடங்களை அதிமுக அணியில் பாஜக எதிர்பார்க்கிறதாம். குறிப்பாக சென்னை மேயர் பதவியை பாஜக குறி வைத்திருக்கிறது.

அதிமுக.வில் அமைச்சர் ஜெயகுமார், தனது மகனை சென்னை மேயர் தேர்தலில் நிறுத்த விரும்புகிறார். பாஜக.வின் விருப்பத்தை ஜெயகுமார் தெரிந்து கொள்ளும் விதமாகத்தான் அவரையே கமலாலயத்திற்கு அதிமுக தலைமை அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறார்கள்.

எப்படியோ ரஜினியை மையமாக வைத்து அதிமுக- பாஜக இடையிலான அரசியல் நகர்கிறது. இதில் அடுத்தடுத்த காட்சிகளைப் பொறுத்து, க்ளைமாக்ஸ் இருக்கும்.

 

Bjp Rajinikanth Aiadmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: