'கோட்டையே டார்கெட்' - ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி!

தஞ்சை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ரஜினிகணேசனிடம் பேசினோம்

எதிர்பார்த்தது போலவே, மக்களவை தேர்தலில் இருந்து பின்வாங்கி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், இதற்கான முடிவை ரஜினி மட்டும் எடுக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று 2017 டிசம்பர் மாதம் ரஜினி அறிவித்ததில் இருந்தே, எப்போது கட்சி தொடங்குவார்?, எப்போது கொள்கை அறிவிப்பார்?, எப்போது தேர்தல் அரசியலுக்கு வருவார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால், அவரது அரசியல் அறிவிப்புக்கு பின்னரே, தனது சினிமா ரேஸை டாப் கியருக்கு மாற்றினார். காலா, 2.0, பேட்ட என்று அவரது திரைப் பயண வேகம் 80’ஸ் ரஜினியின் வேகத்திற்கு டஃப் கொடுத்து வருகிறது. அடுத்ததாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கவுள்ளது. அதன் பிறகும் 2 படங்களில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, திரையுலகத்தில் தனது கடைசி படமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அரசியல் அறிவிப்பு ஒருபுறம், வரிசையாக படங்கள் ஒருபுறம் என்று பரபரக்கும் ரஜினியை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ‘இவர் இன்னமும் சினிமாவில் நடித்து வருகிறார், இனிமேல் எங்கு அரசியலுக்கு வரப் போகிறார்?’ என்ற அயற்சி மக்களிடையே இருப்பதும் உண்மை தான்.

ஆனால், தனது நிலை என்னவென்பதில் ரஜினி தெளிவாக இருக்கிறார் என்பதே இன்றைய அவரது தேர்தல் குறித்த அறிவிப்பு மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

ரஜினியைப் பொறுத்தவரை, தனது ‘சூப்பர்ஸ்டார்’ பிம்பம் அரசியலில் மிகச் சரியாக, மிகச் சரியான நேரத்தில் ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறார். அதன் சாயம் வெளுத்துப் போவதை அவர் விரும்பவில்லை. அதாவது, 2021 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக கட்சித் தொடங்கி, சூட்டோடு சூடாக களத்தில் இறங்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதைவிடுத்து, இப்போதே கட்சி ஆரம்பித்து, அதனால் ஏற்படும் பல நடைமுறை சிக்கல்களை (மற்ற கட்சிகளை எதிர்க்க வேண்டும், மற்ற கட்சித் தலைவர்களை விமர்சிக்க வேண்டும் உள்ளிட்ட பல) சந்திக்க வேண்டும் என்று ரஜினி நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அந்த பிசுபிசுத்து போகும் நிலையை எட்டிவிடக் கூடாது என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார்.

இதன் நீட்சியே இன்றைய ரஜினியின் அறிவிப்பு.

போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் இன்று நடத்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து, தஞ்சை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ரஜினிகணேசனிடம் பேசினோம்.

அவர் கூறுகையில், “மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம். நேராக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறிய, எங்களது கருத்தைத் தான் தலைவர் இன்று அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட இரு மாவட்டச் செயலாளர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் ஒருசேர இந்த கருத்தை தலைவரிடம் தெரிவித்தோம். அதை தலைவரும் ஏற்றுக் கொண்டார். அந்த இரு மாவட்டச் செயலாளர்கள் மட்டும் மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறினர். ஆனால், பெரும்பான்மையானோரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதுமட்டுமில்ல… தமிழகத்தின் தலையாய பிரச்சனையான தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு செயல்படும் தேசிய கட்சிக்கே முக்கியத்துவம் அளித்து மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தலைவரிடம் தெரிவித்தோம். அதன்படியே, தலைவரும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது தலைவரின் அறிக்கையே அல்ல… எங்களது கோரிக்கை” என்று நம்மிடம் விவரித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு வரும் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா, ஏற்படுத்தாதா என்பதைவிட,  சட்டமன்ற தேர்தலை நோக்கிய தனது அணுகுமுறையை இன்று மீண்டும் தெளிவுப்படுத்தி இருக்கிறார் என்பதே உண்மை. பெரும்பான்மையான நிர்வாகிகளும் அதே வேவ்லெந்தில் இருப்பதே இங்கு ஆச்சர்யம் கொள்ளச் செய்யும் விஷயம்!.

மேலும் படிக்க – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close