அமெரிக்காவில் சிகிச்சை முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நாளை (ஜூலை 12) தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். அரசியலுக்கு வருவதாகச் சொன்ன நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்று நோய் மற்றும் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பிறகு, தனது ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர், 2017ம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இதையடுத்து, சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் ரஜினி சொன்னதெல்லாம் ஊடகங்களில் விவாதமானது. சமூக ஊடகங்களில் வைரலானது. ரஜினி தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். பின்னர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் என்று தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 4 லட்சம் பேர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கொரோனா தொற்று பரவல் இருந்த சூழ்நிலையிலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக உறுதியாகக் கூறினார். ஆனால், டிசம்பர், 2017ல் அரசியலுக்கு வருவேன் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக, 2020ல் அதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்தில் அரசியல் கட்சி தொடங்கவில்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் தனது உடல்நிலை காரணமாகவும் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். மேலும், தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையும் தெரிவித்தார். இதனால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் 1996ம் ஆண்டு அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதற்குப் பிறகு, பாபா படம் ரீலிசானபோது ஏற்பட்ட பிரச்னையின் போது அவர் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது. ரசிகர்களும் அவ்வப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து வந்தனர். ஆனால், கடைசியாக, நடிகர் ரஜினிகாந்த் அவரே அரசியலுக்கு வருவேன், அரசியல் கட்சி தொடங்குவேன் என்று கூறியிருந்த நிலையில், பின்னர் முடிவை மாற்றிக்கொண்டு அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.
ரஜினி அரசியல் பிரவேசம் நடக்காததால் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் திமுக போன்ற கட்சிகளில் இணைந்தனர். அப்போது, ரஜினிகாந்த் ரசிகர்கள் விருப்பப்படும் கட்சியில் இணையலாம். ஆனால், அதற்கு முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தி நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்திற்காக ஹைதராபாத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கைவிடப்பட்டது. கொரோனா பரிசோதனையில் ரஜினிக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. ஆனால், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததால் அவர் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தார். சரியான பிறகு வீடு திரும்பினார்.
இதையடுத்து, அண்ணாத்த திரைப்படத்தில் தனது பகுதியை நடித்துக் கொடுத்தார். பின்னர், சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் புகழ்பெற்ற மையோ மருத்துவமனையில், சிறுநீரக செயல்பாடு தொடர்பான பரிசோதனையும் சிகிச்சையும் பெற்ற பிறகு சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு மாவட்ட நிர்வாகியை சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.
அண்மையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திப்பதாக அறிவிப்பு வெளியானது.
ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்த பிறகு, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால், ரஜினியின் திட்டம் என்ன? மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி என்ன பேசப்போகிறார் என்று இந்த சந்திப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது அவர் கூறியதாவது: மாவட்ட செயலளார்களை சந்திக்கும்போது, அவர் ஏன் அரசியலில் ஈடும்படும் முடிவை கைவிட்டார் என்பது தொடர்பாக விளக்கம் அளிப்பார். இன்னொரு விஷயம் அவருடைய உடல்நிலை பற்றி கூறுவார். மக்கள் மன்றம் நடத்துகிறார்களா இல்லையா என்று கேட்பார் என்று கூறினார்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மாவட்ட செயலாளர் ஒருவர் கூறியதாவது: “மாவட்ட செயலாளர்கள் நிறைய பேர் கோடி கணக்கில் செலவு செய்திருக்கிறார்கள். நிறைய பேர் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார்கள். 3 வருஷமா எந்த வேலைக்கும் போகாமல் மக்கள் மன்றத்தை வலுப்படுத்துவது உறுப்பினர்கள் சேர்ப்பது என்று இருந்துவிட்டார்கள். இந்த கொரோனா வேறு வந்துவிட்டது. அதனால், அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிறைய ஒன்றிய செயலாளர்கள் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டார்கள்.
நாங்கள் ரஜினிகாந்த் மன்றம் ஆரம்பிக்கும்போது 19 மாவட்டங்கள்தான். அப்போது நாங்கள் ரஜினியின் ஸ்டைலைப் பார்த்துதான் மன்றத்துக்கு வந்தோம். அவர் அரசியலுக்கு வருவார் வரமாட்டார் என்று நினைத்து வரவில்லை.
அவருக்கு ஜெயலலிதாவுடன் நெரடியாக மோதல் வரும்போது அப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போது திமுக தமாகாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பிறகு, பாபா படத்துக்கு பிரச்னை செய்தார்கள்.. அப்போதும் இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்தது. இந்த முறை அவராகத்தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
இந்த சந்திப்பில், ரஜினி மக்கள் மன்றத்தில் சில அறிவாளிகள் இருப்பார்கள். அவர்கள் ரஜினி மக்கள் மன்றம் செயல்படட்டும் என்பார்கள். சிலர் ரஜினி ரசிகர் மன்றமாகவே செயல்படட்டும் என்பார்கள். ஆனால், இனிமேல் யாரும் அரசியல் பற்றி பேசமாட்டார்கள்.
அதே நேரத்தில், ரஜினி இந்த சந்திப்பில் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பொருத்துதான் எங்கள் கேள்விகள் இருக்கும். அவர் அமெரிக்காவில் இருந்தபோது, ரஜினி மக்கள் மன்ற புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருக பாண்டியனை சந்தித்துள்ளார். அதற்குப்பிறகுதான் இந்த சந்திப்பு நடக்கிறது. பெரும்பாலும் அவர் இந்த சந்திப்பில் ஏன் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிட்டேன் என்று விளக்கம் அளிப்பார். அவர் விளக்கம் அளித்தாலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நிறைய பேர் அரசியல் கட்சிக்கு போய்விட்டார்கள். ரஜினி மக்கள் மன்றமாகவோ அல்லது ரசிகர் மன்றமாகவோ செயல்படும். அதை கலைக்கமாட்டார்கள். ஏனென்றால், படம் ஓடாது இல்லையா?” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.