Rajinikanth Latest News: ரஜினிகாந்த் மக்கள் மன்றம், அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது. ரஜினி மன்றத்தின் முன்னாள் தலைவர் சத்யநாராயணா மீண்டும் பொறுப்புக்கு வருவார் என தெரிகிறது. தற்போதைய மாவட்டச் செயலாளர்களில் பெரும்பான்மையினர் மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக சென்னையில் இன்று (12/03/2020) ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பிற்கும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அவர் தனது புதுக் கட்சி அறிவிப்பை ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் புதிய கட்சியின் மாநாடு இருக்கும் என மன்றத்தினர் கூறுகின்றனர்.
கடந்த 5-ம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சென்னைக்கு அழைத்தார் ரஜினிகாந்த். சென்னையில் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம். என்ன ஏமாற்றம் என்பதை இப்போது கூறமாட்டேன்’ என குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில், ஒரு வார இடைவெளியில் மீண்டும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை மாலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தலைமை மன்றம் சார்பில் போன் போட்டு, வியாழக்கிழமை (மார்ச் 12) காலை 8 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த 5-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். அதாவது, ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் இன்னும் மன்றத்தை பொதுமக்களுடன் தொடர்புபடுத்தும் வேலையை சரிவர செய்யவில்லை என்பதே ரஜினிகாந்தின் மதிப்பீடு. அதையே தனக்கு ஏமாற்றம் என கடந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, மாநிலம் முழுவதும் 68,000 பூத்களுக்கும் தலா 20 பேர் அடங்கிய கமிட்டி அமைக்க ரஜினி உத்தரவிட்டிருந்தார். அந்தப் பணிகளும் திருப்திகரமாக நிறைவு பெறவில்லை. இந்தப் பணிகளை செய்யாத மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக மாற்ற ரஜினி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முடிவு, வியாழக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும்.
தமிழகத்தில் வருவாய் மாவட்டங்கள் அடிப்படையிலேயே, ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு இன்னும் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. எனவே மொத்தம் 32 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 20 பேர் வரை ரஜினியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது.
தவிர, லைக்கா நிறுவனப் பொறுப்பில் இருந்த ராஜூ மகாலிங்கம் மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவரிடம் எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. அதிகாரபூர்வமாக அவரை நீக்கவும் இல்லை. மன்றப் பொறுப்பாளராக இருந்து சுதாகரே அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்கிறார்.
வியாழக்கிழமைக் கூட்டத்தில் மன்றத்தின் மாநில நிர்வாகிகளையும் முறையாக அறிவித்து, மன்றப் பணிகளை ரஜினிகாந்த் முடுக்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஜினி மன்றத் தலைமைப் பொறுப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சத்யநாராயணா, மீண்டும் மன்றப் பொறுப்புக்கு வருவார் என தெரிகிறது.
ரஜினி மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் முதல் ஒன்றிய, கிளை மன்ற நிர்வாகிகள் வரை அனைவரும் சத்யநாராயணாவுக்கு அத்துப்படி! எனவே அவரால்தான் மன்றத்தை கட்டுப்பாடாகவும், 1990-களில் இருந்ததுபோல துடிப்பாகவும் வழிநடத்த முடியும் என ரஜினிகாந்த் கருதுவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே வியாழக்கிழமையே ரஜினிகாந்த் தனது புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் பறக்கின்றன. ஆனால், மன்ற நிர்வாகிகள் தரப்பில் நாம் பேசியபோது அதை மறுக்கிறார்கள். ஏப்ரலில் கட்சி அறிவிப்பு, செப்டம்பரில் மாநாடு என்பதே தலைவரின் திட்டம் என்கிறார்கள் அவர்கள்.
மன்றத்தில் பொறுப்பில் இருப்பவர்கள், கட்சிப் பொறுப்புக்கு வரக்கூடாது என்பதிலும் ரஜினி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை கூட்டத்தில் அவற்றை உறுதி செய்து, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பேலஸில் பத்திரிகையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி தாமாக முன்வந்து பத்திரிகையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.