ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு : ‘தனிக் கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’

ரஜினியின் முகத்தை காண காலையிலேயே அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு பெரும் கூட்டம் திரண்டது. போலீஸ் பாதுகாப்பும் பலமாக போடப்பட்டது.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இன்று வெளியானது. அவரது அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். ரஜினியின் அரசியல் பிரவேச LIVE UPDATES இங்கு…

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது, அவரது ரசிகர்களின் கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு! காலா படப்பிடிப்புகளை முடித்த ரஜினிகாந்த், ஏற்கனவே விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் போட்டோ எடுக்கும் படலத்தை கடந்த 26-ம் தேதி முதல் நடத்தினார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதை இந்த போட்டோ படலத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று (இன்று) கூறிவிடுவதாக அறிவித்தார். இதனால் ஆண்டின் இறுதி நாளான இன்று ஏக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளானது.

ரஜினியின் அறிவிப்பைக் கொண்டாட தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்தபடி இருந்தார்கள்.  வழக்கமாக டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும். இந்த ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி காலையிலேயே ரஜினியிடம் இருந்து அரசியல் அறிவிப்பு வந்துவிட்டால், அந்த நிமிடமே பட்டாசுகளை வெடித்து அதிர வைக்க தயாராக இருந்தார்கள் ரசிகர்கள்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச LIVE UPDATES

பகல் 12.15 : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘இரு பெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. இதை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை’ என்றார். எனினும், ‘ரஜினியின் அறிவிப்பு குறித்து முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்’ என்றார் அவர்.

ரஜினிகாந்தை மெச்சும் அதிமுக நிர்வாகி : ‘மீண்டும் போயஸ் கார்டனில் தமிழக அரசியல்’ என புகழாரம் – என்ற கட்டுரைக்கு க்ளிக் செய்யவும்…

பகல் 11.30 : ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

பகல் 11.15 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘ரஜினியின் அரசியல் அறிவிப்பால் திமுக.வுக்கு சாதகமோ, பாதகமோ இல்லை. அதைப் பற்றி கவலைப்படவில்லை. திமுக தனது கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் பயணத்தை மேற்கொள்ளும்’ என கூறினார்.

பகல் 11.15 : ‘ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மீக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூளமாக இடதுசாரிகளுடனும் சேராமல், பாஜக.வுடனும் சேராமல் தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்தபிறகே ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும்’ என்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.

காலை 10.30 : ரஜினியின் நண்பரும், சக நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ என குறிப்பிட்டார்.

 காலை 9.35 : பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன, ‘நாங்களும் இங்குள்ள ஆட்சிகளின் சீர்கேடுகளையே சுட்டிக்காட்டி வருகிறோம். எனவே ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறோம்.’ என்றார்.

காலை 9.30 : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘கடந்த ஓராண்டு ஆட்சியின் சீர்கேடுகள்தான் நான் அரசியலுக்கு வரக் காரணம் என ரஜினி கூறியிருக்கிறார். மற்ற கட்சிகளும் இதையே கூறி வருகிறோம். சட்டமன்றத் தேர்தல் வருகிற வரை அரசியல் பேச வேண்டாம் என கூறியிருக்கிறார். எனவே அவரது கொள்கைகள் அப்போதுதான் தெரியும். அப்போதுதான் அது பற்றி கருத்து கூற முடியும்’ என்றார் முத்தரசன்.

காலை 9.10 :  பதிவு செய்யாத மன்றங்களை ஒருங்கிணைக்கணும். மக்களை நம்முடன் இணைக்கணும். ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திப்போம். அதுவரை நாம் அரசியல் பேச வேண்டாம். நாம் இன்னும் குளத்தில் இறங்க வேண்டாம். நமக்கு நீந்தத் தெரியும். தேவையான நேரத்தில் நீந்துவோம். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியை ஆரம்பிப்போம். நம்மால் எதுவும் செய்ய முடியலைன்னா 3 ஆண்டுகளில் ரிசைன் பண்ணுவோம். வருகிற சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகப் போரில் நம்ம படையும் இருக்கும்- ரஜினி பேச்சு

காலை 9.10 : ஆண்டவன் அருளும், மக்கள் நம்பிக்கையும் இருந்தால்தான் நாம் நினைப்பது நடக்கும். எனக்கு தேவை தொண்டர்கள் இல்லை. காவலர்கள் வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதை கண்காணிக்கிற காவலர்கள் தேவை. அவர்களை கண்காணிக்கிற பிரஜை நான். : ரஜினி

காலை 9.05 : அரசியல் கெட்டுப் போயிருக்கு. ஜனநாயகம் தலை குனிஞ்சு போயிருக்கு. பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கிறாங்க. இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யலைன்னா, நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன் ரஜினி

காலை 9.05 : இது காலத்தின் கட்டளை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நமக்கு அவகாசம் இல்லை – ரஜினி

காலை 9.00 : ‘நான் எல்லாவற்றுக்கும் தயாராயிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி’ – ரஜினி (அதன்பிறகு அவரை பேசவே விடாமல் மண்டபம் அதிரும் வகையில் நீண்ட நேரம் கைத்தட்டல்)

காலை 8.55 : ரொம்ப பில்டப் ஆயிட்டுதுல்ல… நான் கொடுக்கலைங்க… தானா ஆயிடுச்சு… அரசியலை பார்த்து பயப்படலைங்க… இந்த மீடியாவை பார்த்துதான் பயம்! தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது மைக்கை போடுறாங்க. நான் ஏதாவது சொன்னால் டிபேட் ஆகிடுது. முந்தாநாள் மைக்கை போட்டு, ‘உங்க கொள்கை என்ன?’ என கேட்டாங்க. தலை சுத்திடுச்சு – ரஜினிகாந்த் பேச்சு

காலை 8.50 : ராகவேந்திரா மண்டபம் வந்து சேர்ந்தார். பேசத் தொடங்கினார்.

காலை 8.30 : ரஜினிகாந்த் தனது இல்லத்தில் இருந்து கோடம்பாக்கம் மண்டபத்திற்கு கிளம்பினார். நிருபர்கள் அவரை வழிமறித்து கேட்டபோது, ‘10 நிமிடங்கள் பொறுங்கள். எல்லாவற்றையும் சொல்கிறேன்’ என கூறிவிட்டு சென்றார்.

காலை 8.15 : ரஜினியின் முகத்தை காண காலையிலேயே அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு பெரும் கூட்டம் திரண்டது. போலீஸ் பாதுகாப்பும் பலமாக போடப்பட்டது.

காலை 8.00 : வழக்கமாக காலை 8 மணிக்கே போயஸ் கார்டனில் இருந்து கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு கிளம்பிவிடும் ரஜினிகாந்த், இன்று கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டார். வீட்டில் காலையிலேயே சற்று பதற்றமாக காணப்பட்ட அவர், பின்னர் தியானத்தில் ஆழ்ந்ததாக தகவல் கூறப்பட்டது.

ரஜினிக்கு ஏன் இந்த ‘மாஸ்’ தெரியுமா? பவரான 15 ‘பாயின்ட்’கள்

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close