‘ரஜினி மக்கள் மன்றம்’ : இதுதான் ரஜினிகாந்த் கட்சியின் பெயரா?

கட்சியின் பெயரிலேயே ரஜினியின் பெயர் இடம்பெறலாம் எனவும், கட்சிக் கொடியில் பாபா முத்திரை இடம்பெறலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என்று இருந்தது, தற்போது ரஜினி மக்கள் மன்றம் எனப் பெயர் மாறியிருக்கிறது.

வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக பல படங்களில் நடித்து மக்கள் மனதில் ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தவர் ரஜினிகாந்த். தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி மலேசியா, சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுவதும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரஜினி அரசியலில் குதிப்பார் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி அரசியல் பயண அறிவிப்பை வெளியிட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை பதிவுபெற்ற ரசிகர் மன்றங்கள் மட்டுமின்றி, பதிவுபெறாத மன்றங்கள், ரசிகர்களை இணைக்கும் வகையில் இணையதளம் மற்றும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்ற மேடையில் இருந்த தாமரையுடன் கூடிய பாபா முத்திரை, இந்த இணையதளத்தில் இடம்பெற்றதால், அவர் பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று செய்தி பரவியது. எனவே, தாமரையை நீக்கிவிட்டு பாபா முத்திரை மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது. அத்துடன், ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

இன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என அழைக்கப்பட்டு வந்த ரஜினியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, கட்சியின் பெயரிலேயே ரஜினியின் பெயர் இடம்பெறலாம் எனவும், கட்சிக் கொடியில் பாபா முத்திரை இடம்பெறலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close