நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். தொடர்ந்து, ஜனவரியில் கட்சி தொடங்கப்பட இருப்பதால், தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக அறிவுசார் பிரிவில் இருந்த அர்ஜுனமூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார்.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் 40 ஆண்டுகளாக மன்ற நிர்வாகப் பணியில் அனுபவம் இருந்தும் அவர்களை விடுத்து மன்றத்திற்கு வெளியே இருந்து ரஜினி ஆதரவாளர்களாக வந்துள்ள, அர்ஜுனமூத்தியையும் தமிழருவி மணியனையும் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தலைமை நிர்வாகிகளாக அறிவித்திருப்பது ரஜினி ரசிகர்கள் மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்விகளும் விவாதங்களும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினருடன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புகொண்டு கவனித்து வரும் எழுத்தாளர் திராவிட ஜீவாவிடம் ஐ.இ.தமிழ் ரஜினியின் இந்த நடவடிக்கை குறித்து விவாதித்தோம். அவருடன் விவாதித்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகளை விடுத்து, தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக அறிவுசார் பிரிவில் இருந்த அர்ஜுனமூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்துள்ளார். அதனால், ரஜினி ரசிகர்கள் மன்றத்தில் யாரும் ஒரு அரசியல் கட்சியின் தலைமை நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு தகுதி பெறவில்லையோ?
திராவிட ஜீவா: அப்படி சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அர்ஜுன மூர்த்தியை விட தமிழருவி மணியனை விட திறமைசாலியான ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நியமிக்கப்படாததற்கு காரணம் ரஜினி தரப்பில் தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ரஜினி ரசிகர் மன்றத்துடன் எனக்கு 25 ஆண்டு தொடர்பு இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் மிக திறமைசாலிகள், பலசாலிகள், அறிவாளிகள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்ப்பதற்கான பணிகளை தலைமையில் இருந்தவர்கள். ரஜினியிடம் கொண்டு சேர்ப்பதற்கு இடையில் நின்றவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்ற கோபமும் வருத்தமும் கேள்வியும் இருக்கிறது.
ரஜினி தரப்பிலிருந்து சரியான நபர்களை பொறுப்புகளுக்கு நியமித்தால் ரஜினியின் அரசியலுக்கான மக்கள் வரவேற்பு இன்னும் கூடுதலாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ரஜினி ரசிகர்கள் என்றால் ரஜினிக்கு கட் அவுட் வைப்பவர்கள், பால் அபிஷேகம் செய்பவர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி பல துறைகளில் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். நிறைய பேர் வழக்கறிஞர்களாகம் கல்லூரி பேராசிரியர்களாக, ஐஏஎஸ் அதிகாரிகளாக, ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கிறார்கள். இப்படி பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் ஒரு வட்டத்துக்குள் சேர்க்கும்போது ரஜினி ரசிகர்கள் என்ற அடையாளத்துக்குள் வந்துவிடுவார்கள். பல ரஜினி ரசிகர்கள் பல தருணங்களில் மிகச் சிறப்பான பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். அப்படியானவர்கள் எனக்கு மட்டுமே தமிழகம் முழுவதும் ஒரு 100 - 200 பேர் தெரியும். இது தலைமைக்கு தெரியாதது சந்தேகத்திற்குரியதுதான்.
ரஜினி ரசிகர் மன்றத்தில் மிகுந்த திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் இவர்களை இன்னும் அடையாளம் காணப்படாதது ரஜினியுடைய குறைபாடுதான். இப்போது இருக்கிற பொறுப்பாளர்களை விட சிறந்த நிர்வாகிகள் எனக்குத் தெரியும். ரஜினி மன்ற தலைமை நிர்வாகி ராஜீவ் மகாலிங்கம் திறமையானவர்தான் நான் அவரை குறைத்துமதிப்பிட விரும்பவில்லை.
ரஜினி மன்றத்தில் நிறைய திறமைசாலிகள் நிர்வாகிகள் இருக்கிறார்கள். நன்றாக படித்துவிட்டு மன்றத்திற்குள் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
கேள்வி: இவர்கள் எல்லாம் மன்றத்துக்கு வெளியே இருக்கிறார்கள். மன்றத்தில் செயல்படுபவர்கள் யாரும் அப்படி இல்லையா?
திராவிட ஜீவா: வழக்கறிஞர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைய பேர் மன்றத்துக்கு வெளியே இருந்தாலும் மன்ற பணிகளுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மிகச் சிறந்த கல்லூரி பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.
ரஜினியின் அரசியல் குறித்து தினமும் விவாதித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இதுபோல உலகத்தில் எந்த நடிகர்களுக்கும் இந்த வாய்ப்பு அமைந்திருக்காது. சென்னையில் ஆல்பர்ட் தியேட்டரில் ரஜினி ரசிகர் மன்றம் எண்பதுகளில் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே இன்றும் தினமும் மாலையில் ரஜினி ரசிகர்கள் கூட்டம் கூடி விவாதிப்பார்கள்.
கேள்வி: ஆனாலும் கட்சி தொடங்குவதற்கு முன்பு கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் மன்றத்திற்கு வெளியே இருப்பவர்களை அறிவிப்பது சரியானதா
திராவிட ஜீவா: இது தவறுதான். மன்ற நிர்வாகிகள் இதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். பொதுமக்கள் பார்வையில் அல்லது மன்றத்தின் பார்வையில் நிச்சயமாக இது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை.
ரஜினி நிச்சயமாக தேர்தலில் பணத்தை தவிர்ப்பார். ரஜினி என்கிற அத்தியாயத்திலும் நிச்சயமாக பணம் எடுபடாது. ரஜினியின் தாக்கம் மிகப் பெரிய தாக்கமாக இருக்கும். ஆனாலும், ஒரே ஒரு பின்னடைவாக நான் கருதுவது என்னவென்றால் தமிழகத்தினுடைய கள யதார்த்தத்தை மீறி ரஜினி அரசியல் செய்யும் போது பின்னடைவு ஏற்படும் என்று கருதுகிறேன். அதேநேரத்தில், ரஜினிகாந்த்தை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. விஜயகாந்த், கமல்ஹாசன் என மற்ற நடிகர்களைப் போல அவரை எடை போட்டு விட முடியாது. இவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார. ஆனால் அவர் வெற்றி பெறுவாரா வெற்றிபெற மாட்டாரா என்ற அடிப்படைக்குள் நான் போக விரும்பவில்லை.
ஆனால், ரஜினிகாந்த் சாதாரணமாக வந்தார் சென்றார் என்று இருக்காது பாதிப்பை ஏற்படுத்துவார் பணம் நிச்சயமாக ரஜினிகாந்திடம் தாக்கத்தை ஏற்படுத்தாது அதே நேரத்தில் கள எதார்த்தத்தை புரிந்து ஒன்றும் தமிழகத்தினுடைய அரசியல் கள யதார்த்தத்தை புரிந்து கொண்டோம் செயல்பட்டால் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: மறைந்த ஜெயலலிதா அவர்கள் தேர்தல் முடிவுகளை மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று கூறினார். ஆனால், ரஜினி தான் வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வியடைந்தால் மக்களின் தோல்வி என்று கூறியுள்ளார். இதைப் பற்றி உங்களுடைய கருத்து.
திராவிட ஜீவா: அந்த வார்த்தை தவறான வார்த்தை தான். ஏனென்றால் அவருடைய தோல்விக்கு மக்கள் மீது பழி போட முடியாது. என்ன காரணம் என்றால் என்னை பொருத்தவரை மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களிக்கிறார்கள். மக்கள் மீது பழி போடுவது என்பது அவருடைய இயலாமைத்தான் காட்டுகிறது என்பேன். அவர் தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கருதுவதாக நினைக்கிறேன். ஏனென்றால் தமிழக அரசியலில் ரஜினிகாந்த்துக்கு இருக்கிற பாதை மிகவும் கரடு முரடானது. இது முற்றிலும் வித்தியாசமான பாதை. ரஜினிகாந்த் திராவிட அரசியலுக்கு மாற்றான அரசியலை முன்னெடுக்கிறார். அவருக்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவுதான். திராவிட அரசியலுக்கு எதிரான மாற்று அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்கக் கூடாது என்பது எனது கருத்து அல்ல. ஆனால், அவர் முன்னெடுக்க முயற்சி செய்கிறார். அது முதல் முறையாகவே வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்குரியது தான். அந்தவகையில் பார்க்கும்போது இது ஒரு பின்னடைவுதான்.
மக்கள் மனநிலை உடனடியாக அவ்வளவு எளிதாக மாறி விடக்கூடியது இல்லை. கடந்த 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நிறைய பலன் இருக்கிறது. ஆனாலும் திராவிட கட்சிகளின் முழுமையான ஆட்சி பொற்கால ஆட்சி என்று நான் சொல்ல விரும்பவில்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கிடைத்த பலன்கள் அதிகம் அந்த பலன்களை தூக்கி எறிந்துவிட்டு ஒரு மாற்று சித்தாந்த அரசியலுக்கு மக்கள் வழி விடுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. அந்த அடிப்படையில் ரஜினிகாந்த் இந்த கருத்தை சொல்லி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: பாஜக முன்பைவிட தற்போது பல இடங்களில் கிளைகளை தொடங்கி தெரிய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் பாஜகவினர் பலரும் ரஜினிக்கு ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.
திராவிட ஜீவா: தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கான வாய்ப்பு எப்போதும் அறவே கிடையாது. ஆனால், மத்தியில் ஆளுகின்ற கட்சி வலிமையாக இருக்கின்ற கட்சி அவரைத் தேடி செல்வது இயல்புதான். விளம்பரத்திற்காகவும் தேர்தலுக்காகவும் அந்தக் கட்சி இறங்கி வருவது சாதாரணம் தான். அதனால், அவர்கள் கிராமத்தில் கிளைகளைப் பரப்பி விட்டார்கள் என்பது நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய விவாதம் அல்ல. அதே நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் சில பேர் பாஜக ஆதரவாளர்கள் ஆக மாறி இருப்பது உண்மைதான். இதற்கு பின்னாடி மிகப்பெரிய ஒரு சாதி இருக்கிறது. ரஜினிகாந்த் ஒரு பாஜக ஆதரவாளர், இந்து ஆதரவாளர், ஆன்மீக அரசியல் பேசுவதால் அவரை ஒரு ஆதரவாளர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.
பாஜகவினர் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ரஜினியை பயன்படுத்திக் கொள்வதற்கு ரஜினி ஆதரவாளரகளாக மாறுகிறார்கள்.
கேள்வி: இதற்கு ரஜினி ரசிகர்கள் எப்படி எதிர்வினையாற்றுவர்கள்?
இதற்கு ரஜினியின் ரசிகர்கள் பெரிதாக ஒன்றும் எதிர்வினையாற்ற முடியாது. பொதுவாக கட்சியை ரஜினி சர்வாதிகார மனநிலையுடன்தான் கொண்டுசெல்ல விரும்புகிறார். அவருடைய ஆரம்பகால பேச்சு முதல் இன்றைய பேச்சுகள் வரை பார்த்தால், நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அதிமுகவில் ஜெயலலிதா எந்த மனநிலையில் தொண்டர்களை வைத்து கொண்டிருந்தார்களோ அதே மனநிலைதான் ரஜினிகாந்த் இருக்கிறார்.
ரஜினியின் பல்வேறு பேச்சுகளை பார்த்தீர்களென்றால் சர்வாதிகாரம் தேவை, தலைமை கட்டுப்பாடு தேவை, இதுபோன்ற வார்த்தைகளில் பயன்படுத்துவதனால் தொண்டர்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளிவிட்டார். அதனால்தான், அங்கு நிர்வாகிகள் மத்தியில் எந்த சலசலப்பும் எழுவதில்லை. இது வாக்காளர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரியும்.” என்று கூறினார்.
தென் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியபோது, அவர்கள் அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளரகவும் அறிவித்ததில் மன்ற உயர் மட்ட நிர்வாகிகள் இடையே எந்த அதிருப்தியும் இல்லை. அவர்கள் ரஜினியின் முடிவு எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர். ஆனால், கீழ் மட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியி அதிருப்தி இருப்பதாகவும் அதை அவர்கள் பேசி சரி செய்துவிடுவார்கள் என்றுகூறினார்கள்.
மேலும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரஜினிகாந்த் கட்சி அறிவித்தால் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் அறிவிக்கப்படும். அதிலும், மன்ற நிர்வாகிகளுக்கும் வெளியே இருந்து வருகிறவர்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் இருக்கும். கட்சி அறிவித்த பிறகு தற்போதைய அறிவிப்பில்கூட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன்ற நிர்வாகிகள் ரஜினிகாந்த் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம். அவர் வழிகாட்டுகிறபடி நாங்கள் செயல்படுவோம். இது எதுவும் அவராக முடிவு எடுப்பதில்லை. மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் அவர் இந்த முடிவுகளை எடுக்கிறார். தலைமை நிர்வாகிகள் யார் வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால், அனைவரும் ரஜினியின் முடிவுக்குதான் கட்டுப்படுவார்கள். மன்ற நிர்வாகம் என்பது வேறு, அரசியல் கட்சி என்பது வேறு. அதனை ரஜினி ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால், தான் வெளியே இருந்து அரசியல் அனுபவங்களுடன் வரும் நல்லவர்களை ரஜினி வரவேற்கிறார். ரசிகர்களும் இது தெரியும். தேர்தலில் ரஜினி அலையின் முன்பு திராவிடக் கட்சிகளின் பணம் எடுபடாது. சில கட்சிகள் இப்போது கூட்டணி பேசுவதாகக் கூறுகிறார்கள். தேர்தலில் ரஜினியின் கட்சி வெற்றி பெறும்” என்று மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.