ரஜினியின் அரசியல் 'ஆட்டம்' ஆரம்பம்!

அரசியலில் வெற்றிப் பெற தனது செல்வாக்கு மட்டும் போதாது என்பதை ரஜினி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்

பெங்களூருவில் உள்ள ஏஜென்சி ஒன்று, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது. அந்த ஏஜென்சி தற்போது தமிழகத்தில் உள்ள வாக்கு வடிவங்கள் பற்றியும், ரஜினி மக்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது. கடந்த வாரம் மீட்டிங்கின் போது, ரஜினி தனது நண்பர்களையும் நலம் விரும்பிகளையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரஜினி சொந்தமாக கட்சி ஆரம்பிக்கப்போவது பற்றியும், 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போது பிஜேபியுடன் இணைப்பு பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிஜேபி சார்பில் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ரஜினிக்கு மிக நெருக்கமானவர்கள் தெரிவிக்கையில், ரஜினி தனது சொந்த கட்சியை ஆரம்பிக்க உதவுவதாக பிஜேபி கூறியுள்ளது என்றார். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது ஆலோசகர்கள், மற்ற கட்சிகளில் உள்ள முக்கியமான தலைவர்களை தங்கள் பக்கம் திரட்டி வருகின்றனர். அதில் குறிப்பாக, ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கும் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளனர். ஏற்கனவே, பாண்டியராஜன் பன்னீர் அணியில் அதிருப்தியுடன் தான் உள்ளாராம். இதுபோன்று பல கட்சிகளின் முகங்கள், ரஜினி பக்கம் அவரது ஆலோசகர்களால் ஈர்க்கப்படுகிறதாம்.

அதேபோல், இருமுறை எம்பியாக இருந்தவரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ் ஜகத்ரட்சகனும், ரஜினியின் இந்த லிஸ்டில் உள்ளாராம். மேலும், சென்னையைச் சேர்ந்த அஇஅதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கராத்தே தியாகராஜனும் ரஜினியின் தனிக்கட்சியில் இணைய உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கராத்தே தியாகராஜனிடம் பேசிய போது, தான் காங்கிரஸ் கட்சியில் நல்ல நிலையில் இருந்தாலும், ரஜினிகாந்தின் தனிக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில், “எனக்கு ரஜினியை கடந்த 30 வருடங்களாக தெரியும். அவரது ரசிகர் மன்றங்களுடன் நான் நெருங்கிய தொடர்பில் உள்ளேன்” என்றார். ரஜினிகாந்தின் வட்டாரத்தில் உள்ள முக்கிய நபர் ஒரு கூறும்போது, “ரஜினி டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். துக்ளக் ஆசிரியர் எஸ் குருமூர்த்தி தான் ரஜினிக்கு வழிகாட்டியாக உள்ளார்” என்றார்.

மேற்கூறிய தலைவர்களை தங்கள் வட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தேமுதிகவின் விஜயகாந்த் போல, தங்களின் வாக்குவங்கி 10 சதவீதமாக இருக்கும் என ரஜினிகாந்தின் அணி நினைக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா என விவாதிக்கப்பட்டு இருந்த போதே, கடந்த 2005-ல் விஜயகாந்த கட்சி ஆரம்பித்து, 2006 தேர்தலின் போது, 8 சதவிகித வாக்கு வங்கினை பெற்றார். அதன்பின், 2009 லோக் சபா தேர்தலின் போது, விஜயகாந்தின் வாக்கு வங்கி 10 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால், 2014 லோக் சபா தேர்தலில், அவரது வாக்கு வங்கி 5 சதவிகிதமாக சரிந்தது.

இந்நிலையில், ரஜினிக்கு நெருக்கமான ஒருவர், ஒவ்வொரு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றங்களுடம் ஆலோசனை நடத்திய பின் அளித்த பேட்டியில், “அரசியலில் வெற்றிப் பெற தனது செல்வாக்கு மட்டும் போதாது என்பதை ரஜினி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். ஏனெனில், அவரது பெரும்பாலான ரசிகர்கள் நடுத்தர வயதுடையவர்களாகவும், அல்லது 50களில் இருக்கும் வயதுடையவர்களாக உள்ளனர். அதேசமயம், முஸ்லீம்களும், இளைஞர்களும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால், தங்களுக்கு நல்லதல்ல என்று நினைப்பதையம் ரஜினி கருத்தில் கொண்டுள்ளார். எது எப்படியோ, ஜெயலலிதாவிற்கு பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினி மிகுந்த ஆர்வமாக உள்ளார்” எனவும் கூறியுள்ளார்.

மேலும், பாஜக விஷயத்தில் ரஜினி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவார் என தான் நம்புவதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணியை பற்றிய ஊகம் மோடியுடனான ரஜினியின் நட்பால் ஏற்பட்டது. ரஜினி காங்கிரஸின் ப.சிதம்பரத்துடனும் நெருக்கமாக உள்ளார். இதற்கிடையில், ரஜினியின் புதிய படமான ‘காலா’ ஷூட்டிங் இந்த வாரம் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த புதிய ஊகமும் கிளம்பியுள்ளது. இது அவரது அரசியல் நுழைவிற்கான தொடக்கமாக இருக்கலாம்.

×Close
×Close