Rajini kanth Press Meet High Lights: ஆர்ப்பாட்டத்துடன் துவங்கிய ரஜினிகாந்தின் முதல் செய்தியாளர்கள் சந்திப்பு, சிலருக்கு உற்சாகத்தையும், சிலருக்கு வருத்தங்களையும், பலருக்கு மீம் கன்டென்ட்களையும் கொடுத்திருக்கிறது. அவர் என்ன பேசினார், எப்படி பேசினார் என்பதையெல்லாம் சமூக வலைத்தளங்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஊடகங்கள் லைவாக காட்டிவிட்டன.
ஆனால், நிகழ்ச்சி தொடங்கும் முன்பு, ரஜினியின் வருகை போது, நிகழ்ச்சி முடிந்த போது என்று லீலா பேலன்ஸ் ஹோட்டல் சந்தித்த சூழல்களை இங்கே வரிகளாகவும், கட்சிகளாகவும் பார்க்கலாம்.
காலை 7 மணியில் இருந்தே தேசிய, மாநில காட்சி ஊடகங்கள் நிகழ்ச்சி நடைபெறவிருந்த ஹோட்டலை ஆக்கிரமித்துவிட்டன.
நிகழ்ச்சி தொடங்கவிருந்தது காலை 10:30 மணிக்கு. ஆனால், ஊடகங்கள் வரத் தொடங்கியது காலை 7 மணியில் இருந்து....!
கொரோனா தொற்று இந்தியாவையும் அச்சுறுத்திக் கொண்டிருக்க, அதுக்கு ரஜினி என்று தெரியுமா, மீடியா என்று தெரியுமா, ஸ்டார் ஹோட்டல் என்று தெரியுமா... ஆகையால், கட்டாயம் ஹோட்டல் என்ட்ரியிலேயே கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதி கிடைத்தது.
ஹோட்டலில் நுழைந்த பிறகு, பிரஸ் மீட் நடைபெறவிருந்த அறைக்கு வெளியே சுமார் 250 கிலோ வெயிட்டில் ஜிம் பாய்ஸ் வரிசையாக நின்றுக் கொண்டிருக்க, வேறு எங்கேயோ மாறி வந்துவிட்டோமே என்று நமக்கே சந்தேகம் வந்துவிட்டது.
அறைக்கு வெளியே, செய்தியாளர்கள் உட்பட எவராக இருந்தாலும், கையொப்பமிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிறகு, ஒரு கார்டு ஒன்று கொடுக்கப்பட, நாம் அப்பாவியாய் கொடுத்தவர் முகத்தை பார்க்க, 'இதுதான் சார் பாஸ்' என்றனர்.
அந்த பாஸை காட்டிய பிறகு தான், ஜிம் பாய்ஸ் அவர்களது உடல்களுக்கு இடையில் புகுந்து செல்ல நம்மை அனுமதித்தனர்.
இனி தான் மேட்டரே....
காலை 9 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்குள் நுழைந்தவர் துக்ளக் ரமேஷ். உள்ளே வந்ததில் இருந்து ஒரு நொடி கூட அமராத ரமேஷ், அரங்கை சுற்றி சுற்றி வந்து, அனைத்து ஏற்பாடுகளும் சரியாக நடந்திருக்கிறதா என்று ஆராய்ந்ததை பார்த்த பிறகு, விழா ஏற்பாடுக்கான காரணகர்த்தா யார் என்பதை ஆடியன்ஸ் ஆப்ஷனுக்கு விட்டுவிடுகிறோம்!.
அனிருத்தின் தந்தையும், ரஜினியின் உறவினருமான ரவி ராகவேந்த்ரா அரங்குக்குள் வந்து சப்தம் போடாமல் ஓர் ஓரமாக நின்று கொண்டு, அங்கு நிலவும் சூழலை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது. ஹலோ சார் சொன்னாலும், ஸ்மைல் தான் பதில். அப்போதும் அவரது கண்கள் வட்டமடித்தே கொண்டிருந்தன.
டைம்ஸ் நவ், மிரர் நவ், ரிபப்ளிக், ஏஎஐ, பிபிசி, ஆஜ் தக்... என்று இந்தியாவில் இருக்கும் அத்தனை தேசிய ஊடகங்களின் கேமராக்களும் ரஜினியின் இந்த முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் இடம் பெற்றிருந்தன.
அரங்கின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காட்சி ஊடகங்கள் ஆக்கிரமித்து லைவ் செய்து கொண்டிருக்க, சரியாக 10.20 மணிக்கு, அத்தனை மூலைகளையும் க்ளீயர் செய்த நிர்வாகிகள், 10.25 மணிக்கு தலைவர் வர்றார் என்று அறிவிக்க, அதுவரை நிலவிய இலகுவான சூழல் பதட்டமடைந்தது.
மிகச் சரியாக காலை 10.30 மணிக்கு, திடீரென்று பொங்கும் சுனாமியைப் போல சட சடவென்று அரங்குக்குள், பாதுகாவலர்கள் புடைசூழ நுழைந்தார் ரஜினிகாந்த்.
'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று 2017 டிசம்பர் 31ம் தேதி 'முதன் முறையாக' அவர் அறிவித்த போது, அணிந்திருந்த அதே பளீர் வெள்ளை நிற குர்தா, பைஜாமா தான் இன்றும் அவரது காஸ்டியூம். அவர் சொல்கிறார் 'எனக்கு வயது 71 ஆகப் போகிறது' என்று. ஆனால், அவரது நடையின் வேகம் இருக்கே. அப்பப்பா!!
மேடையேறியதும், சட்டென்று மைக்கைப் பிடித்தவர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் பேசத் தொடங்கிவிட்டார். சாரி... சாரி... தன் மனதில் உள்ளதை கொட்டத் தொடங்கிவிட்டார்.
அவரது உரையின் முன்னுரையாக அமைந்த விஷயம் தான் ஹைலைட் ரகம். "நான் 25 வருஷமா அரசியலுக்கு வர்றேன்னா சொல்லிக்கிட்டு இருக்கேன்? டிசம்.31, 2017 தான் முதன் முதலாக எனது அரசியல் வருகையை அறிவித்தேன். ஸோ, இனிமேலாவது 'அப்போதிலிருந்து சொல்லிக்கிட்டு இருக்கார்' என்று கூறுவதை விட்டுவிடுவீர்கள் என்று நம்புகிறேன்" என அவர் சொன்ன போது, சிலருக்கு உறுத்தியிருக்கலாம்.
ரஜினி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கூட, துக்ளக் ரமேஷ் உட்காரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அறையில் இரு பிரிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இரு பிரிவுக்கு நடுவில், ரஜினிக்கு நேராக நின்று கொண்டு, அவர் அரங்கை கண்காணிக்க, நாம் அவரை சைடு கண்ணில் கண்காணிக்க, அது அப்படியே கண்டினியூ ஆக.... நிலைமையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
ஒருபக்கம் ரஜினி பேசிக் கொண்டிருக்க, மறுபுறம் கதவுகளை அடைக்கப்பட்ட அரங்குக்கு வெளியே குவிந்த ரசிகர்கள், கதவையை தட்டிய விதம், பத்திரிக்கையாளர்களின் தலையை அப்படியே வாசலின் பக்கம் திருப்பின. நாம் முன்பே அடையாளப்படுத்திய 250 கிலோ ஜிம் பாய்ஸுக்கும், ரஜினியின் ரசிகர்களுக்கும்(?) ஏற்பட்ட தள்ளுமுள்ளு, உள்ளே இருந்த அமைதியை சற்றே குலைத்தது.
இதையும் ரமேஷ் கவனித்துக் கொண்டிருக்க, ரஜினியின் பார்வை மட்டும் கதவின் பக்கம் திரும்பவே இல்லை. அவரது கவனம் எந்த இடத்திலும் சிதறவே இல்லை. ஒரு நொடி கூட அவர் தனது பேச்சை நிறுத்தவில்லை.
தனது உரையின் இடையே ஒரேயொருமுறை மட்டும் குறும்படம் ஒன்றை போட்டுக் காண்பித்தார். அதாங்க, அவர் 2017ல் ரசிகர்கள் சந்திப்பின் போது பேசிய வீடியோ.
இடது பக்கம் திரும்பி, 'அந்த வீடியோவை போடுங்கள்' என்று கூறிய ரஜினி, 5 வினாடிகள் கூட காத்திருக்கவில்லை... 'என்னாச்சு!!' என்று ஒரு கோப வார்த்தையை வீசினார் பாருங்கள்... 30, 35 ஆண்டுகளுக்கு முந்தைய 'ஆங்ரி யங் மேன்' ரஜினியை, 'ஆங்ரி ஓல்ட் மேன்'-ஆக ஒரு நொடி நாம் காண நேரிட்டது.
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசிய ரஜினி, இறுதியில் 'கேள்விகளை எடுத்துக்க முடியாது, அப்பறம் நான் பேசுனது dilute ஆகிடும்' என்று சொல்லி யார் பற்றியும், எதைப் பற்றியும் சிந்திக்காமல் விறு விறுவென அறையை விட்டு வெளியேறினார்.
அறைக்கு வெளியே அவருக்கென காத்திருந்த ரசிகர்கள் ஆராவாரம் செய்ய, கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, அதே 250 கிலோ நபர்களால் பத்திரமாக லிப்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் ரஜினிகாந்த்.
ஆனால், அவரது அரசியல் வாழ்க்கையும், அவரது அரசியல் கட்சியும் லிப்ட் ஆகுமா என்பது, அவர் மேலே கை காட்டும் ஆண்டவனுக்கே வெளிச்சம்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.