சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய மன்றத்தினரை எச்சரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், '30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கையில், "ரஜினி மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு என் ஒப்புதலுடனே அறிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்களின் சந்திப்பின் போது, 'பதவி, பணத்துக்காக என்னுடன் அரசியலில் ஈடுபட நினைப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள்' என்று நான் சொல்லி இருந்தேன்.
நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழகத்தில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். அப்படி இல்லாமல், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்?
முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். அரசியல் எல்லாம் அப்புறம் தான். கட்சிக்காக செலவு செய்யுங்கள் என்று யாரிடமும் நான் சொன்னதில்லை. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக செலவு செய்தேன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.
30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது. மக்களுக்கும் பொறுப்புகள் வழங்கி அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மன்றத்தில் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத் தான் மன்றத்தில் இருந்து நீக்கி வைத்துள்ளோம். நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம் அருகில் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை.
ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. மன்றத்திற்காக உண்மையாக உழைப்பவர்களை நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது" என்று ரஜினி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.