ஓசையில்லாமல் ஊடுருவும் ரஜினி மன்றம்... கலக்கத்தில் கழகங்கள்!

Rajinikanth Latest News: ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் இந்த உதவிகள் தொடர்பான செய்திகள் சமீப நாட்களாக பகிரப்படுவதில்லை.

தி.மு.க.வினர் எப்போதுமே புத்திசாலிகள்! களத்தை கூர்மையாக கவனிப்பவர்கள்! அப்படி களத்தில் நேரடித் தொடர்பில் இருக்கும் திமுக பகுதிக் கழக நிர்வாகி ஒருவர் கூறிய தகவல், ஆச்சர்யமானது!

‘ஒன்றிணைவோம் வா திட்டம் மூலமாக எங்கள் கட்சியில் தூங்கிக் கொண்டிருந்த மாவட்டச் செயலாளர்கள் பலரை எங்கள் தளபதி மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டிருக்கிறார். எந்தப் புயல், மழை- வெள்ளத்திற்கும் வெளியே வராத சில சீனியர் நிர்வாகிகளையும், கறாராக உதவி செய்ய களத்திற்கு அனுப்பி வைக்கிறது, பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ டீம்! அந்த வகையில் ஆளும் கட்சியை நாங்கள் களத்தில் முந்திவிட்டோம்.

ஆனால் ஓசையில்லாமல் இன்னொருவர் எங்களுடன் களத்தில் டஃப் பைட் கொடுக்கிறார். சந்தேகமே இல்லாமல், அது ரஜினியேதான். எங்களில் பலர் அவரை காமெடியாக கேலி செய்து, தவிர்த்துவிட நினைக்கிறோம். கள நிலவரம் அதுவல்ல. எந்த விளம்பரமும் இல்லாமல், எங்களைவிட அதிகமாகவே ரஜினி ரசிகர்கள் களத்தில் உதவி செய்வதை கண்ணால் பார்க்கிறோம். ரஜினியை சீரியஸாக எடுத்துக் கொண்டு நாங்கள் பணியாற்ற வேண்டிய நேரம் இது என்பதற்காக இதைச் சொல்கிறேன்’ என்றார் அந்த திமுக பிரமுகர்!

திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில்…

அவரே கடந்த இரண்டு, மூன்று நாட்களில் மட்டும் ரஜினி ரசிகர்கள் செய்த உதவிகளை தனது குறிப்புகளைப் புரட்டி பட்டியலிட்டார்…

* ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற சார்பில் ராமேஸ்வரம் வருகிற நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களுக்கு தினமும் இரவு உணவு வழங்குகிறார்கள். 15 நாட்களாக இது நடக்கிறது.

* வேலூர் மாவட்ட RMM சார்பில் நேற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், நலிந்த குடும்பங்கள் என 400 நபர்களுக்கு 5000 கிலோ நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

* நீலகிரி மாவட்ட ர‌ஜினி மக்கள் மன்றம் சார்பில் கோத்தகிரியில் தூய்மைப்பணியாளர்கள், முதியோர்கள் என சுமார் 300 பேருக்கு மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டு, சந்தையில் 400 பேருக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.

* திருப்பூர் மாநகர ர‌ஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் திருப்பூர் 24-வது வார்டு சாமுண்டிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு கோடை கால வெயிலை தணிக்கும் வகையில் தொடர்ந்து 300 குடும்பங்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டது.

* சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அஸ்தம்பட்டி பகுதி 5,7,12 கோட்டங்களில் படையப்பாநகர், ஹவுசிங்யூனிட் ஜான்சன்பேட்டை பகுதியில் உள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

* திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பாக்கம் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு தலா 3 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

* குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

* திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தொடர்ந்து 31-வது நாளாக ஸ்ரீரங்கம் கங்காரு கருணை இல்லம், கிருஷ் பார்வையற்றோர் இல்லம் & தங்கும் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர் 250 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

* தென்சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆலந்தூர் தெற்கு பகுதி 160,161,162,163 வட்டங்களில் உள்ள 70 நபர்களுக்கு தலா 5 கிலோஅரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

* வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில்
கொளத்தூர் 66வது வட்டத்தில் கார்ப்பரேஷன் ஊழியர்கள், K5, K9 காவல்துறையினர், ஆதரவற்றோர், முதியவர்கள் 300 பேருக்கு மதிய உணவாக பிரியாணி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

இப்படி மாநிலம் முழுவதும் பட்டியல் நீள்கிறது.

திருப்பூர்

இந்தப் பட்டியலில் உள்ள உதவிகள் அளவில் சிறியதாகத் தோன்றலாம். மாநிலம் முழுக்க ஒன்றிய அளவில் இந்த உதவிகளை ரஜினி மக்கள் மன்றத்தினர் முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வசதியே இல்லாவிட்டாலும், ஒரு ஊரில் 50 பேருக்கு கபசுரக் குடிநீரை வழங்கும் பணியையாவது ரஜினி மன்றத்தினர் செய்கிறார்கள்.

இந்த உதவிகளையொட்டி மன்ற மாநில நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் இரு கட்டளைகளைப் போட்டிருக்கிறார்.

ஒன்று, இந்த உதவிகளை விளம்பரப்படுத்தக் கூடாது.

மற்றொன்று, உதவி பெறுகிறவர்களின் போட்டோக்களை வெளியிடக்கூடாது. (பெரும்பாலும் உதவி பெறுகிறவரின் முகத்தை மறைத்து, மன்றத்தினர் சிலர் படங்களை வெளியிடுகிறார்கள். கீழ்மட்ட மன்ற நிர்வாகிகள் சிலருக்கு இந்தத் தகவல் சரியாக போய்ச் சேராததால், படங்களை வெளியிடவும் செய்கிறார்கள்)

ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் இந்த உதவிகள் தொடர்பான செய்திகள் சமீப நாட்களாக பகிரப்படுவதில்லை. சில தினங்களுக்கு முன்பு வரை மன்றத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த உதவிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்த சவுந்தர்யா ரஜினிகாந்தும், இப்போது அதை நிறுத்திவிட்டார்.

அதிமுக.வைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் சிலர் தங்கள் தொகுதியை தக்கவைக்க தொகுதியில் லட்சம் பேரை குறிவைத்து உதவிகள் வழங்கி வருவது நிஜம். திமுக.வினரோ எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் ‘ஐபேக்’ டீம் கொடுக்கும் அஸைன்மெண்ட் அடிப்படையில் உதவிகளை செய்கிறார்கள். ஆனால் அப்படி எந்தத் தூண்டுதலோ, விளம்பரமோ, ரஜினியிடம் இருந்து நேரடி அறிக்கையோ இல்லாமல் களத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் ரஜினி மன்றத்தினரே!

இதெல்லாம், அரசியல் ரீதியாக ரஜினியை மாபெரும் சக்தியாக சித்தரிக்க சொல்லப்படுபவை அல்ல. அதைத் தேர்தல் களம்தான் தீர்மானிக்கும். ஆனால், இதர அரசியல் கட்சிகளைவிட, குக்கிராமங்கள் வரை ஒரு 10 பேரையாவது அழைத்து சிறுசிறு உதவிகளை ரஜினி ரசிகர்கள் தன்னியல்பாக செய்வதும், ரஜினி அதைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளாததும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

களப்பணியாற்றும் ரஜினி மன்றத்தினருக்கு ஒரே குறை இருந்தது. டாஸ்மாக் விவகாரம் சூடு பிடித்த நிலையில் அது பற்றித் தலைவர் கருத்து கூறவில்லையே என்பதுதான் அந்தக் குறை! அதையும், ரஜினியின் பிரபலமான வசனம் கூறுவது போல, ‘லேட்டஸ்ட்’டாக பேசிவிட்டார்.

டாஸ்மாக் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதிமுக.வும் திமுக.வும் ஆட்சியில் இருந்து மதுக் கடைகளை திறந்துவிட்டக் கட்சிகள்தான். சாராய ஆலைகளின் உரிமையாளர்களாக இந்தக் கட்சிகளுக்கு நெருக்கமான பிரபல பிரமுகர்கள் இருந்து வந்திருப்பதும் பெரிய ரகசியம் அல்ல. எனவே லேட்டாகப் பேசினாலும், அதிமுக, திமுக.வை விட தங்கள் தலைவரின் குரலுக்குத்தான் இதில் மரியாதை என ரஜினி மன்றத்தினர் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஓராண்டு வரை தள்ளிப் போகும் என்கிற பேச்சும் பாஜக வட்டாரத்தில் அடிபடுகிறது. ஓராண்டு ஆளுனர் ஆட்சி அமலானால், அதிமுக- திமுக செயல்பாடுகள் இன்னும் சுணக்கமாகலாம். அப்படியொரு சூழலைப் பயன்படுத்த ரஜினிகாந்த் தயாராவதாகத் தெரிகிறது.

கழகத் தலைமைகள் இதை கவனித்தனவா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close