போருக்கு தயாராகுங்கள் என்று கூறிவிட்டு 'காலா' ஷூட்டிங்கிற்கு மும்பை சென்ற ரஜினிகாந்த், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஓரிரு மாதங்களில் முடித்து விட திட்டமிட்டு இருக்கிறாராம். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் விடுபட்ட ரசிகர்களை மீண்டும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்.
ஷூட்டிங்கிற்காக மும்பையில் இரண்டு வாரங்கள் முகாமிட்டு இருந்தபோது, கட்சி நடத்தும் நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் பதவி வகிக்கும் வட இந்திய நடிகர்கள் ஆகியோரிடம் ரஜினி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பலரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவான கருத்துக்களை கூறி உள்ளனர்.
ஜெயலலிதா மரணம், உடல் நலக் குறைவால் கருணாநிதி அரசியல் பணிகளில் ஈடுபட முடியாதது போன்றவை தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
1975-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி 'அபூர்வ ராகங்கள்' படத்தில் தான் முதன்முதலில் ரஜினி அறிமுகமானார். கேட்டை திறந்து கொண்டு வருவது போன்ற முதல் காட்சி அன்றுதான் படமாக்கப்பட்டது. அதுபோல் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ‘2.0’, ‘காலா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருப்பதால், அந்த முடிவை தள்ளிவைத்து, தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரசிகர்கள் மாநாட்டை நடத்தி அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை அன்றைய தினம் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினியை நேரடியாக சந்தித்து பேசியிருக்கும் நடிகை கஸ்தூரி, "ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இப்போது எதுவும் நான் சொல்ல முடியாது. ஆனால், ரஜினியின் அரசியல் வருகை மிக முக்கியமான ஒன்றாகும்" என்றார்.