சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரியில் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட இருப்பதாக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் இன்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்கிற விவாதம், கடந்த 20 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இதற்கு நேரடியாக எந்தப் பதிலையும் கூறாமல், கைகளை மேலே காட்டியே காலம் கடத்தினார் ரஜினிகாந்த். அவ்வப்போது தனது படத்தின் புரமோஷனுக்கு இந்த விவாதங்களை ரஜினி பயன்படுத்திக் கொண்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.
ரஜினியை துரத்திய இந்த அரசியலில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு புதிய திருப்பம் உருவானது. அரசியலுக்கு வருவது குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாக வெளிப்படையாக ரஜினி அறிவித்தார். தேர்தல் நெருங்குகிற நேரத்தில் வரவிருப்பதாகவும் சூசகமாக ( ‘போர் வரட்டும், பார்க்கலாம்’) தெரிவித்தார் அவர். ஓரிரு முறை ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்து இது குறித்து ஆலோசித்தார் அவர்.
ரஜினிகாந்த் இதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தபோதே கமல்ஹாசன் விறுவிறுவென தனது ட்விட்டர் பதிவுகள் மூலமாக அரசியல் அரங்கேற்றத்தை நடத்திவிட்டார். அவரும் விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறியிருக்கிறார். கமல்ஹாசன் அரசியலில் காட்டும் வேகத்தால், ரஜினிகாந்த் சற்றே பின்வாங்குவதாக ஒரு பேச்சு எழுந்தது.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கே இதனால் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் தர்மபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ், ‘வருகிற ஜனவரியில் ரஜினி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார். தமிழக மக்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நிச்சயம் மக்களுக்கு ரஜினி நல்லது செய்வார்’ என்றார் சத்யநாராயணா.
ரஜினிகாந்த் வருவாரா, மாட்டாரா? என குழம்பிக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு சத்யநாராயணாவின் அறிவிப்பு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.