நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்போர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்' என அதிரடியாக அறிவித்துள்ளார். 'நற்பெயருக்கு களங்கம் விளைவிப்போர் மீதும், தவறு செய்யும் ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கவும் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் கொடுக்கின்றேன். மேலும், அந்த ரசிகர்கள் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுவார்கள்' எனவும் எச்சரித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a339-300x217.jpg)
முன்னதாக, ரசிகர்கள் சந்திப்பின் போது, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசிய ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 22-ஆம் தேதி சென்னை கதீட்ரல் சாலையில் தமிழ் முன்னேற்றப்படை அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், ரஜினியின் கொடும்பாவியை எரித்து, 'ரஜினி ஒரு கன்னடராக இருப்பதால், அவர் அரசியலுக்கு வரக்கூடாது. தமிழர்களின் எந்த பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுத்ததில்லை' என்று முழக்கமிட்டு, ரஜினிக்கு தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும் எதிர்ப்பைக் காட்டினார்கள். அப்போது 'கன்னட நடிகர் ரஜினிகாந்த் ஒழிக..' என்று அவர்கள் கோஷமிட்டனர். போராட்டம் நடத்திய அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, தமிழ் முன்னேற்றப் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், கொடும்பாவி எரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில் தான், ரஜினிகாந்த் இன்று அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார். அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் பொறுமை காப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், ரஜினிகாந்த் சொற்களுக்கு ரசிகர்கள் எந்தளவிற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதனை இந்த விஷயத்தில் அறிந்துவிடலாம். ஒருவேளை ரஜினிக்கு அரசியலுக்கு வரும் எண்ணமிருந்தால், இந்த சம்பவம் அவரது அரசியல் பிரவேசத்தின் அடிப்படை அம்சமாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படும் என்பதில் சந்தேமில்லை.