ரஜினிகாந்த் தனது ரசிகர்களை வரும் 15ம் தேதி சந்திக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். நீண்ட காலமாக அவர் ரசிகர்களை சந்திக்காமல் இருந்ததால், இந்த சந்திப்புக்கு மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் இருந்தனர்.
ரசிகர் மன்ற தலைவராக இருந்த சத்தியநாராயணா நீண்ட இடைவெளிக்கு பின்னர், ராகவேந்திரா மண்டபம் வந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ரசிகர்களை சந்திக்க கொடுத்த அனுமதி அட்டையை சிலர் விலைக்கு விற்றதாக புகார் ரஜினியிடமே வந்தது. எல்லா ரசிகர்களுடனும் தனித்தனியாக போட்டோ எடுக்க வசதியாக சந்திப்பை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் ரஜினி ரசிகர்களை சந்திக்கிறார். ஒவ்வொரு நாளும் மூன்று மாவட்டங்கள் என 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை முதல்கட்டமாக சந்திக்க திட்டமிட்டுள்ளார். முதல் நாளில் கரூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 250 ரசிகர்களை சந்திப்பதோடு, அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
மீதமுள்ள மாவட்ட ரசிகர்களை வேறு ஒரு தேதியில் சந்திப்பார் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் ரஜினி பேச வாய்ப்பு இல்லை என்று ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரஜினியை அரசியலுக்கு அழைக்க இருப்பதாக ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.