‘ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் என்று காத்திருக்கிறோம்’ என விஷால் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார் விஷால். அப்போது, “நானும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளேன். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன். வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் வீட்டுக்கு சென்றேன். அப்போது திடீரென எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக செய்தி வந்தது. அந்த சூழ்நிலைதான் என்னை அரசியலுக்கு வரத் தூண்டியிருக்கிறது.
நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். என்னை இந்த முடிவுக்குத் தள்ளியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றங்கள் இருக்கும். அந்தத் தேர்தல், தலைகீழான மாற்றங்களை ஏற்படுத்தும். அதை இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
நான் அரசியல்வாதியாகப் பேசவில்லை. மக்களின் பிரதிநிதியாகத்தான் இதைப் பேசுகிறேன். இத்தனை வருடங்களாக நாட்டிலும், அரசியலிலும் நடந்த விஷயங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை என்பதை உணர்ந்து இருக்கிறேன்.
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருகிறார்களே... இவர்களில் யார் சிறப்பாக செயல்படுவார்? என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் இருவரும் தங்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை. வெளியிட்ட பிறகுதான் அதுபற்றி சொல்ல முடியும்.
ரஜினிகாந்த் வேறு கட்சியுடன் கூட்டு சேர்வாரா? யாருடன் கூட்டணி அமைப்பார்? என்பதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்துக்கு இதுதான் முதல் அரசியல்படி. இன்னும் நிறைய அவர் பேசுவார் என்று காத்திருக்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்” என்று பேசினார் விஷால்.