Advertisment

கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை; இலங்கை அதிபருக்கு சாந்தன் கோரிக்கை

இலங்கையில் என் மீது எந்த வழக்கும் இல்லை. தயவு செய்து எனது உணர்வுகளையும், சிரமத்தையும் கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும்.

author-image
abhisudha
New Update
Trichy

Santhan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திர ராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன்.

கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.

இலங்கையில் என் மீது எந்த வழக்கும் இல்லை. தயவு செய்து எனது உணர்வுகளையும், சிரமத்தையும் கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும்.

மேற்கண்டவாறு ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இலங்கை அதிபருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு தற்போது அவரது தாயாருடன் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment