பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு மறுக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்ற செயல்: ராமதாஸ்

இந்த விஷயத்தில் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக பினாமி அரசு விரும்பவில்லை என்பது தான் சிறைவிடுப்பு மறுப்புக்கு காரணமாகும்.

பேரறிவாளனை உடனடியாக சிறை விடுப்பில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்து விட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கும்படி பேரறிவாளன் விடுத்த கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பேரறிவாளன் இந்தியக் கடவுச்சீட்டு சட்டம், கம்பியில்லா தந்திச் சட்டம் ஆகிய மத்திய சட்டங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாடு தண்டனை நிறுத்தச் சட்டத்தின்படி அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று வேலூர் மண்டல சிறைத்துறைத் துணைத்தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பேரறிவாளனின் தாயார் அனுப்பிய மேல்முறையீட்டு மனு கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை நிராகரிக்க தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்கமுடியாதவை. மத்திய சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மாநில அரசுகள் சிறை விடுப்பு வழங்கியதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

மும்பை தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு புனே ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு இரு ஆண்டுகளில் 5 மாதங்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு 8 மாதங்கள் முன்பாகவே விடுதலை செய்யப்பட்டார். இராஜிவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட மற்றொரு தமிழரான ரவிச்சந்திரனுக்கு அவரது குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 4 முறை சிறை விடுப்பு வழங்கப்பட்டது. இந்த உண்மைகளையும், முன்னுதாரங்களையும் மறைத்து விட்டு பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு மறுக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்ற செயல் ஆகும்.

தண்டனைக் கைதிகளுக்கு சிறைவிடுப்பு வழங்குவது சலுகை அல்ல…. உரிமை. பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். சிறையில் அவரது நடத்தை அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

சிறையிருந்தபடியே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றிருப்பதுடன், சக கைதிகளையும் ஊக்குவித்து பட்டம் பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு சிறை விடுப்பு வழங்க அவரது நடத்தை எந்த வகையிலும் தடையாக இருக்காது.

பேரறிவாளனின் 75 வயது தந்தை ஞானசேகரன் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளார். அவரின் 69 வயது தாயார் அற்புதம் அம்மாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, பலமுறை சாலைகளில் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார்.

அவர்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில், அவர்களின் மகனாக சிறிது காலம் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் பேரறிவாளன் சிறை விடுப்பு கோரியிருக்கிறார். இதைக்கூட வழங்க மறுப்பது நியாயமற்றது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பேரறிவாளன் உட்பட ராஜிவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதனால் அவர்களை விடுதலை செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

அப்போதிருந்த மத்திய அரசு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால் அவர்களை இன்னும் விடுதலை செய்யமுடியவில்லை. ஒருவரை விடுதலை செய்யவே மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது சிறை விடுப்பில் வெளியிட அதிகாரம் இல்லை என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக பினாமி அரசு விரும்பவில்லை என்பது தான் சிறைவிடுப்பு மறுப்புக்கு காரணமாகும்.

சிறை விடுப்புக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக சிறைத்துறையும், தமிழக அரசும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய சட்டங்களின்படி விதிக்கப்பட்ட தண்டனையை பேரறிவாளன் அனுபவித்து முடித்து விட்டார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை மட்டும் தான் இப்போது அவர் அனுபவித்து வருகிறார். இப்படிப்பட்ட ஒருவரை விடுவிக்க எந்தத் தடையும் இல்லை என்பதால் பேரறிவாளனை உடனடியாக சிறை விடுப்பில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close