ராஜீவ் கொலை கைதி நளினி பரோல் கோரி மேலும் ஒரு மனு

பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்று, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையைக் காண பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தனக்கு பரோல் கோரி மேலும் ஒரு மனுவை அளித்துள்ளார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 7 பேரில் மூவருக்கு மரண தண்டனையும், மற்ற நால்வருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜீவ் , ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை கடந்த 2014-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பின்னர், இவர்களை விடுதலை செய்யக் கோரி பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. அந்த போராட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அவர்களது விடுதலையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

இந்நிலையில், “26 ஆண்டுகள் சிறை வாழ்க்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு விடுதலை கிடைக்காது என்பதால் சிறையில் உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடைய அனுமதி வழங்க வேண்டும்” என சிறைத் துறை உயர் அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த கடிதத்துக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, திட்டமிட்டபடி கடந்த 18-ம் தேதியன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை உணவு ஏதும் அருந்தாமல் தண்ணீர் மட்டுமே அவர் அருந்தி வருவதால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சிறை அதிகாரிகள் மற்றும் சிறைச் சாலை மனநல ஆலோசகர்கள் அவரிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். எனினும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதனிடையே, தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக முருகனின் மனைவி நளினி 30 நாள் பரோல் கோரி மேலும் ஒரு மனுவை அளித்துள்ளார். தனது மகள் திருமணத்தை நடத்த ஆறு மாதம் பரோல் கோரி ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒரு மனுவை நளினி தாக்கல் செய்துள்ளார். அதேபோல், தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள ஒருநாள் பரோலில் நளினி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியே வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, சிறையில் இருந்த பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்று, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையைக் காண பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து, அவர் தற்போது 30 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். எனவே, நளினிக்கும் பரோல் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close