அதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்தபோதும், அதிமுக.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜக.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்தபோதும், அதிமுக.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜக.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக எம்.பி. ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து திரும்பியிருப்பது, அந்தக் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்ய அலைகளை உருவாக்கி இருக்கிறது. மாநிலங்களவை எம்.பி.யான விஜயகுமார்தான் அவர்!
Advertisment
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், விஜயகுமார் எம்.பி. இவருக்கு கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ஒருங்கே கொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ்- ஓபிஎஸ் என அணிகள் பிரிந்தபோது, இவர் இபிஎஸ் அணியில் நீடித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவரான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மீண்டும் கட்சிக்குள் வலுப்பெற்றதும், விஜயகுமாருக்கு அவருடன் ஒத்துப் போகவில்லை. அதன்பிறகு விஜயகுமாரிடம் இருந்த மா.செ. பதவி பறிக்கப்பட்டு, ஓபிஎஸ் ஆதரவாளராக இயங்கிய அசோகனிடம் வழங்கப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் விஜயகுமார் அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு 15 நிமிட நேரம் அப்பாய்ன்மென்ட் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் 45 நிமிடங்களுக்கு சந்திப்பு நீண்டதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
Advertisment
Advertisements
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியை உலகின் 8-வது அதிசயமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது விஜயகுமார் எம்.பி.யின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டிருக்கிறது. ‘கன்னியாகுமரியில் தியானம் செய்த நரேந்திரனின் (விவேகானந்தர்) சக்தி உங்களுக்கும் இருக்கிறது. எனவே உங்களால்தான் அது சாத்தியம்’ என்றும் விஜயகுமார் சொல்ல, மோடி சிரித்துக் கொண்டாராம்.
தவிர, அரசியல் குறித்த பேச்சுகளும் இடம் பெற்றதாக கூறுகிறார்கள். விஜயகுமார் எம்.பி. அதிமுக.வில் பெரிய தலைவர் இல்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வட்டத்தில் தொடர்புடைய முக்கிய நபராக அவர் இருந்தார். அதனால்தான் கன்னியாகுமரி மாவட்ட அரசியலுடன் தொடர்பே இல்லாத அவருக்கு மாவட்டச் செயலாளர், எம்.பி. என இரட்டைப் பதவிகளை ஒரே நேரத்தில் ஜெயலலிதா வழங்கினார். அவரோடு மோடி நீண்ட நேரம் பேசியிருப்பது, அதிமுக முகாமை வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
ஜெயலலிதா இருந்தவரை, அதிமுக பிரமுகர்கள் யாரும் இப்படி தனியாகச் சென்று வேறு தலைவர்களை சந்திக்கும் நடைமுறை இருக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மைத்ரேயன் மட்டும் அவ்வப்போது பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்தார். இப்போது அவர் எம்.பி. இல்லாததால் அதிகம் டெல்லி செல்வதில்லை.
அதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்தபோதும், அதிமுக.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜக.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் விஜயகுமார் எம்.பி.யின் இந்த சந்திப்புக்கான சூட்சுமம் விரைவில் வெளியாகலாம். இது குறித்து விஜயகுமார் எம்.பி.யிடம் கேட்க முயன்றபோது, அவர் கருத்து கூறுவதை தவிர்த்தார்.
அதிமுக- பாஜக கூட்டணிக்குள் இழையோடும் மர்மங்களில் இதுவும் ஒன்று!