இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வாய்ப்புகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்பில் கிராமப்புற, ஏழை மாணவர்கள் மட்டுமின்றி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் அதிக அளவில் சேர்ந்து விடக்கூடாது என்பதற்கேற்றவாறு மத்திய அரசு காய் நகர்த்துவதாகத் தெரிகிறது.
இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வாய்ப்புகளை பறிக்கும் வகையிலும், உயர்வகுப்பினருக்கு சாதகமாகவும் அனைத்திந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை விதி உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி.
நாடு முழுவதும் உள்ள 470 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 65,170 இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் 15 விழுக்காட்டு இடங்கள் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படும் 9775 இடங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யும்.
இந்த மாணவர் சேர்க்கை மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படியே நடைபெறும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மீதமுள்ள 50.5% இடங்கள் பொது ஒதுக்கீடாக கருதப்பட்டு தகுதி அடிப்படையில் நிரப்பட வேண்டும். கடந்த ஆண்டு வரை இந்த முறையில் தான் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பட்டு வந்தன.
இந்த முறையில் 50.50% பொதுப்பிரிவு இடங்கள் பொது தரவரிசையின் அடிப்படையில் அனைத்துப் பிரிவினரையும் கொண்டு நிரப்பட வேண்டும். மீதமுள்ள இடங்கள் அந்தந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரால் நிரப்பட வேண்டும்.
ஆனால், இம்முறை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 49.50% இடங்களுக்கான கலந்தாய்வும், பொதுப்பிரிவினருக்கான 50.50% இடங்களுக்கான இட ஒதுக்கீடும் தனித்தனியாக நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரச் செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இட ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே அந்தந்த பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படும்; அதிக மதிப்பெண் எடுத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குக் கூட பொதுப்பிரிவில் வாய்ப்பளிக்கப்படாது என்றும், பொதுப்பிரிவிலுள்ள 50.50% இடங்களும் உயர்சாதியினர் மற்றும் கிரிமீலேயர்கள் எனப்படும் பொருளாதார அடிப்படையில் மேம்பட்டவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு வசதியாக அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் அனைத்திந்திய தர வரிசையுடன், இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கான தரவரிசையும் வழங்கப்பட்டிருக்கிறது. இது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
இதனால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் உயர்வகுப்பினருக்கு தாரை வார்க்கப்படும் ஆபத்து உள்ளது. இதை புரியும்படி சொல்ல வேண்டுமானால் மொத்தமுள்ள 9775 இடங்களில் 4936 இடங்கள் பொதுப்பிரிவுக்கானவை ஆகும். முதல் 4936 இடங்களில் 3000 இடங்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பிடித்திருப்பதாக வைத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராக கருதப்பட்டு அந்தப் பிரிவில் அவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் தொடர்பு கிடையாது. தரவரிசையில் 4936-க்கும் கீழ் உள்ளவர்களைக் கொண்டு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கான இடங்கள் நிரப்பப்படும். ஆனால், இப்போது தரவரிசையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதலிடத்தைப் பிடித்திருந்தால் கூட, அவரைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் அரசு சேர்த்து விடும்.
இத்தகைய அணுகுமுறையால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் திட்டமிட்டு உயர்வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு விடும். இந்தியாவில் தழைத்தோங்கியுள்ள சமூகநீதியை இதைவிடக் கொடூரமாக கொலை செய்யமுடியாது.
சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான இந்த நடைமுறை கைவிடப்பட வேண்டும். பொதுப் பிரிவுக்கான இடங்களை தகுதி அடிப்படையில் அனைத்துப் பிரிவினரையும் கொண்டு நிரப்பி, அதன் பின்னர் இட ஒதுக்கீட்டு பிரிவு இடங்களை அந்தந்தப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.