தமிழ்நாட்டு அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த கேலிக்கூத்து அரசியலுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலில் மிக முக்கியத் திருப்பங்களுக்கு வித்திட்ட தமிழகத்தில் இன்று அரசியல் படும்பாடு தமிழக மக்களை தலைகுனிய வைத்திருக்கிறது. இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல் அநாகரிக அரசியலுக்கு அனைத்து வழியிலும் ஆளுநர் துணைபோவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் எப்படியாவது, யார் காலில் விழுந்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அணிக்கும், எடப்பாடி அரசை எவ்வழியிலாவது கவிழ்த்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தினகரன் அணிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
ஜெயலலிதாவால் அமைக்கப்ட்ட ஆட்சியின் எஞ்சிய பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகளை அனுபவித்து முயன்றவரை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் இரு தரப்பினரின் நோக்கம் ஆகும். இதற்கான போட்டியில் தான் இரு அணியினரும் முட்டி மோதிக்கொள்கின்றனர். இதை ஒரு கட்சியில் உள்ள இரு பிரிவினருக்கு இடையே நடக்கும் மோதல் என்று கடந்து சென்று விட முடியாது. இவர்களுக்கு இடையிலான மோதலில் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுவதால் இதற்கு முடிவுகட்ட வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த மாதம் 22-ம் தேதி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் அளிக்கின்றனர். அதை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்மன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆணையிட்டிருந்தால் தமிழக அரசியல் இவ்வளவு தரம் தாழ்ந்திருக்காது.
ஆனால், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவைத் திரும்பப்பெற்று 24 நாட்கள் ஆகியும் அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மாளிகைக்கு வருபவர்கள் அனைவரிடத்திலும் மனு வாங்கிக் கொண்டு அனுப்பும் சடங்கை மட்டும் ஆளுநர் செய்து கொண்டிருப்பது தான் தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்று விட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்களும் தொகுதி மக்களை சந்தித்து குறைகேட்கச் செல்லாமல் புதுச்சேரி, கர்நாடகம் என உல்லாசச் சுற்றுலா சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் நாள் தவறாமல் நடக்கும் கொலை, கொள்ளைகளை கட்டுப்படுத்தாத தமிழக காவல்துறை கர்நாடகத்துக்கு காவலர்களை அனுப்பி, சோதனை என்ற பெயரில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை பேரம் பேசி விலைக்கு வாங்கும் செயலில் ஈடுபடுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பனை விசாரணை என்ற பெயரில் மிரட்டி வழிக்கு கொண்டு வர துடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசை ஆதரிக்க மறுக்கும் அதிருப்தி உறுப்பினர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையிலடைக்கப் போவதாக காவல்துறை மிரட்டுவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருக்கிறார். அணி மாறினால் ரூ.20 கோடி வரை கொடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
பழனியப்பனும், செந்தில்பாலாஜியும் கொள்கைக் குன்றுகள் என்றோ, எந்த ஊழலும் செய்யாத உத்தமர்கள் என்றோ, சமூகத்திற்கு சேவை செய்வதற்கு மட்டுமே அவர்கள் உருவெடுத்திருப்பதாகவோ கூறமுடியாது. அவர்கள் குற்றம் செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால், இத்தனை நாள் அமைதியாக இருந்து விட்டு, இப்போது அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்யப்போவதாக மிரட்டுவதை நியாயப்படுத்த முடியாது.
கூவத்தூரில் இரு வாரங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த போது, அதற்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்த காவல்துறை, இப்போது மட்டும் இவ்வளவு வேகமாக பாயும் மர்மம் என்ன? ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நடத்தப்படும் சித்து விளையாட்டுகள் இவை என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
இத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம் ஆளுநரின் மவுனம் தான். கடந்த 24 நாட்களில் எடப்பாடியின் பெரும்பான்மை குறித்து ஆளுநர் தெரிவித்ததாக முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த சிக்கல் குறித்து ஆளுநர் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் கூறவில்லை. இதன்மூலம் குதிரை பேரத்தை ஆளுநர் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த கேலிக்கூத்து அரசியலுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடி அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.