உள்ளாட்சித் தேர்தல் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்த்து உயர் நீதிமன்ற ஆணைப்படி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிக்கையை வரும் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஓரளவு வரவேற்கத்தக்கதாகும்.
உண்மையில் கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த போது, அதை எதிர்த்து பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அவ்வாறு வழக்கு தொடரப்பட்டதன் முக்கிய நோக்கமே 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தொகுதிகளை மறுவரையரை செய்து அதனடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான்.
அவ்வாறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், அதன்பின் ஓராண்டு ஆகியும் தொகுதி மறுவரையறை செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் இப்போது தொகுதி மறுவரையறை செய்யப்படாத நிலையிலேயே தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையான மனநிறைவளிக்கவில்லை என்றாலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில் அவற்றுக்கு உயிரூட்ட வேண்டும் என்ற அளவில் இத்தீர்ப்பை வரவேற்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆளுங்கட்சிக்கு மட்டும் அவகாசம் கொடுத்து விட்டு, எதிர்க்கட்சிகளுக்கு அவகாசமே தராமல், மனுத் தாக்கலுக்கு முந்தைய நாளில் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதை மாநிலத் தேர்தல் ஆணையம் வழக்கமாகக் கொண்டிருந்தது.
உதாரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 17,19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கும் என்பதை செப்டம்பர் 25-ம் தேதி மாலை 6.30 மணிக்கு தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், இம்முறை அவ்வாறு கடைசி நிமிடத்தில் அறிவிப்பு வெளியாவதைத் தடுக்க, தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கிடைக்கும்.
செப்டம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே உள்ளாட்சி தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். கடைசி நிமிடம் வரை இழுத்தடித்து தாமதப்படுத்தக்கூடாது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்த்து உயர் நீதிமன்ற ஆணைப்படி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கடந்த தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தல் என்றால் ஆளுங்கட்சிக்கு சாதகமான விதிமீறல்களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. பல இடங்களில் பாமக வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்ற போதிலும், அவர்களைவிட குறைந்த வாக்குகளைப் பெற்ற ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதுகுறித்த புகார்களுக்கு செவிமடுக்க மறுத்த தேர்தல் அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதி பெற்றுக் கொள்ளும்படி கூறிவிட்டனர். வரும் தேர்தலில் முறைகேடுகளும், வன்முறைகளும் தடுக்கப்பட வேண்டும்; உள்ளாட்சித் தேர்தல் மிகவும் நேர்மையாக நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வளைந்து கொடுக்க நிர்பந்திக்கப்படுவார்கள். எனவே, உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலைமை வாக்குப்பதிவு அதிகாரியாக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
2 ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரியை பார்வையாளராக நியமிக்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் மத்திய துணை ராணுவப் படைகளை அதிக எண்ணிக்கையில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.