விவசாயத்தின் வளர்ச்சியில் திராவிட ஆட்சியாளர்களுக்கு விருப்பமில்லை: ராமதாஸ்

ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ஜலயாக்னம் திட்டத்தின் மூலமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. மத்தியப் பிரதேசத்தில் பாசனப்பரப்பு வியக்கத்தக்க வகையில் விரிவடைந்திருக்கிறது....

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் வேளாண் விளைநிலங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் வேளாண் விளைநிலங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இதேநிலை நீடித்தால் இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் விவசாயம் முழுமையாக அழிந்து விடும் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் உண்மையாகும்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை இது உணர்த்துகிறது. இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு நிதியுதவியுடன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Madras Institute of Development Studies) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடந்த ஆய்வின் முடிவுகள் இப்போது தான் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

1971 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகளில் தமிழகத்தின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் வேளாண் விளைநிலங்களின் பரப்பளவு 6601 சதுர கிலோ மீட்டரில் இருந்து 4806 கிலோமீட்டராக, அதாவது 27 விழுக்காட்டிற்கும் கூடுதலாகக் குறைந்திருக்கிறது.

அதேநேரத்தில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பில்லாத தரிசி நிலங்களின் பரப்பளவு 13.16 மடங்கு அதிகரித்திருக்கிறது. 1971-ஆம் ஆண்டில் தரிசு நிலங்களின் பரப்பளவு 70.32 சதுர கி.மீ. மட்டுமே. இது கடந்த 2014-ஆம் ஆண்டில் 926 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

அதேபோல், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கக்கூடிய மாங்குரோவ் காடுகளின் பரப்பளவு 6.76 சதுர கிலோமீட்டரில் இருந்து 14 மடங்கு அதிகரித்து 100 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. மாங்குரோவ் காடுகள் அதிகரிப்பதென்பது பொதுவாக நம்பப்படுவதைப் போன்று மகிழ்ச்சியான ஒன்றல்ல. மாறாக, விளைநிலங்களில் உப்பு நீர் புகுந்து உவர் நிலமாக மாறுவதன் அடையாளம் தான் என்றும், இது விவசாயத்துக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

காடுகளின் பரப்பளவும், சதுப்பு நிலங்களின் பரப்பளவும் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. இவை அனைத்துக்கும் காரணம் பாசனப் பரப்புகள் அதிகரிக்கப்படாததும், வளமான பகுதிகளில் மனித ஆக்கிரமிப்புகள் கட்டுப்படுத்தப்படாததும் தான்.வேளாண் விளைநிலங்களின் பரப்பளவு 27% குறைந்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயமாகும்.

காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பாசனப்பரப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. அதற்குக் காராணம் கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம்,காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் போன்ற பாசனத் திட்டங்களை செயல்படுத்தியது தான்.

ஆனால், காமராஜர் காலத்திற்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஒரு பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதன்விளைவு தான் தமிழகத்தின் பாசனப் பரப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, காமராசர் ஆட்சிக்காலம் வரை காவிரிப் பிரச்சினையோ, முல்லைப் பெரியாறு சிக்கலோ, பாலாற்று அணை விவகாரமோ எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காமராசர் ஆட்சியின் இறுதியில் கருவாக்கப்பட்டு, பக்தவச்சலம் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவினாசி-அத்திக்கடவு பாசனத் திட்டம் 50 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை. 2008-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாமிரபரணி- நம்பியாறு – கருமேணியாறு இணைப்புத் திட்டம், காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதிலிருந்தே விவசாயத்தின் வளர்ச்சியில் திராவிட ஆட்சியாளர்களுக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகும்.

ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ஜலயாக்னம் திட்டத்தின் மூலமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. மத்தியப் பிரதேசத்தில் பாசனப்பரப்பு வியக்கத்தக்க வகையில் விரிவடைந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்திருப்பது 1971 முதல் 2014 வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்வதவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.

வேளாண் வளர்ச்சியின் மூலமாகத் தான் தமிழகம் நீடித்த, நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. அதனால் தான் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம்.

ஆனால், மக்களின் தீர்ப்பு வேறாக இருந்தது. விவசாயத்தை ஒழித்துக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சியினரால் விலைக்கு வாங்கப்பட்ட மக்கள் அவர்களிடமே மீண்டும் ஆட்சியைப் ஒப்படைத்தனர். ஆனால், இப்போது தமிழக மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அது வெகு விரைவில் ஆட்சி மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தப்போவது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close