நீட் தேர்வு போல நீதிபதி போட்டித் தேர்வு... மத்திய அரசை விளாசும் ராமதாஸ்

அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கத் துடிப்பது முறையல்ல. இதை ஒருபோதும் மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.

நீதிபதி பணிக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 5000-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப தேசிய அளவில் பொதுத் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் நுழையும் மத்திய அரசின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.

மாநில அரசுக்கு ஆணை

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை மாநில அளவிலிருந்து மாற்றி தேசிய அளவுக்கு கொண்டு வரும் திட்டம் தொடர்பாக மத்திய நீதித்துறை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா உச்சநீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் இந்த திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் தங்களின் பதிலை ஜூன்30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.

மத்திய அரசின் நோக்கம்

மத்திய அரசின் இத்திட்டம் இன்னும் யோசனை அளவில் தான் இருக்கிறது என்ற போதிலும், அதை சட்டமாக்க மத்திய அரசு அனைத்து வழிகளிலும் முயலும்; மாநில அரசுகள் விழிப்புடன் இல்லாவிட்டால் மத்திய அரசு இதை சாத்தியமாக்கும்.

நீட் தேர்வு போல நீதிபதி போட்டித் தேர்வு

அதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாகத் தான் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. அதுவும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் வடிவத்திலேயே நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வையும் நடத்த மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.

நீதி வழங்கும் முறை சிதைக்கப்படும்

நீதிபதி பணிக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். தமிழகத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியாத வட இந்தியர்கள் தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டால், நீதி வழங்கும் முறையே சிதைக்கப்பட்டு விடும்.

தமிழே தெரியாதவர்கள் அதிக மதிப்பெண்

அண்மையில் அஞ்சலகப் பணியாளர் நியமனத்திற்கு நடந்த தேசிய அளவிலான தேர்வில், தமிழே தெரியாத வட இந்திய மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெற்றதாகக் கூறி தமிழகத்தில் நியமிக்கப்பட்டனர். அதேபோல் இப்போதும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்து வட இந்தியர்கள் தமிழக நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

தீய நோக்கம் கொண்ட முயற்சி

இதற்கெல்லாம் மேலாக நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் பணியிடங்களை பொதுப்போட்டித் தேர்வின் மூலம் நிரப்ப மத்திய அரசு துடிப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயமாக இது விரைவாக நீதி வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை அல்ல; மாறாக கீழமை நீதிமன்றங்களையும் தங்களின் அதிகார வரம்புக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தீய நோக்கம் கொண்ட முயற்சியாகவே தோன்றுகிறது.

அதிகார அத்துமீறல்

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3 கோடி வழக்குகள் தேங்கிக் கிடப்பது உண்மை தான். பல மாநிலங்களில் கீழமை நீதிமன்ற நீதிபதி பணிகள் காலியாக இருப்பதும் உண்மை தான். மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் உண்மையாகவே அக்கறை இருந்தால் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பலாம். மாறாக நாங்களே நிரப்புகிறோம் என்பது அதிகார அத்துமீறலாகும்.

கொலிஜியம்

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. கீழமை நீதிபதிகளையாவது போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொலிஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகள் குழுவால் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மட்டும் தான் மத்திய அரசின் பணியாகும்.

காலம் தாழ்த்திய மத்திய அரசு

இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தாக்கூருடன் இருந்த தனிப்பட்ட பகை காரணமாக, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலுக்கு ஓராண்டாக ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு, கீழமை நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து கவலைப்படுவது முரண்பாடு ஆகும்.

மாநில அரசு அனுமதிக்கக் கூடாது

கீழமை நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை மத்திய அரசு வழங்கினாலும் கூட, நீதிமன்றங்களை நிர்வகிப்பது, கீழமை நீதிபதிகளை நியமிப்பது ஆகியவை இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கத் துடிப்பது முறையல்ல. இதை ஒருபோதும் மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.

தடுத்து நிறுத்த வேண்டும்

கூடாரத்துக்குள் தலையை நுழைக்க ஒட்டகத்தை அனுமதித்தால் அது ஒட்டுமொத்த கூடாரத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதைப் போல, தொடக்கத்தில் சில விஷயங்களில் தலையை நுழைத்த மத்திய அரசு இப்போது மாநில அரசுகளின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் பறிக்கத் துடிக்கிறது. அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் செயல்பட்டு அதிகாரப் பறிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

×Close
×Close