Advertisment

சீரழிவுக்கு வழி வகுக்கும் நிதி ஆயோக் அமைப்பை கலைக்க வேண்டும்: ராமதாஸ்

பள்ளி ஆசிரியர் பணிக்கு ரூ.15 - ரூ.25 லட்சம் வரை. பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு ரூ.35 - ரூ.60 லட்சம் வரை என விலை

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramadoss,

மத்தியில் திட்ட ஆணையம் இருந்த வரை புதிய அரசு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது போன்ற ஆக்கப்பூர்வ யோசனைகளை செய்து வந்தது. ஆனால், நிதி ஆயோக் அமைப்போ எதிர்மறையான யோசனைகளை வழங்கி வருகிறது. சீரழிவுக்கு வழி வகுக்கும் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சிறப்பாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்திருக்கிறது. தலைவலிக்குத் தீர்வு தலையை வெட்டுவது தான் என்பது போன்ற அபத்தமானத் தீர்வை நிதி ஆயோக் அமைப்பு முன்வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்

மத்திய திட்ட ஆணையத்திற்கு பதிலாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், ‘மூன்று ஆண்டுகளுக்கான செயல்திட்டம்’ என்ற தலைப்பில் பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது. அந்த ஆவணத்தில் தான் சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்; அவ்வாறு ஒப்படைக்கப்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

இதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. இந்தியாவில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாறாக தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2010-14 காலத்தில் 13,000 அரசு பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடி குறைவு

ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடி குறைந்துள்ளது. அதேநேரத்தில் தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்கு வராதது, வகுப்பில் கற்பித்தலுக்கு குறைந்த நேரமே செலவழிக்கப்படுவது, தரமற்றக் கல்வி ஆகியவையே அரசு பள்ளிகளின் இத்தகைய நிலைக்குக் காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சரியானது ஆனால் ஆபத்தானது

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து விட்டது என்பதையோ, அதற்காக நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ள காரணங்கள் அனைத்தும் சரியானவை என்பதையோ யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதற்கான தீர்வாக நிதி ஆயோக் முன்வைத்துள்ள யோசனைகள் தான் மிகவும் ஆபத்தானவை.

தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கி ஓடுவதற்கு ஒப்பானது

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து விட்டது என்றால், அதை மேம்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது அரசின் பணியாகும். மாறாக, அந்த பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்பது தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கி ஓடுவதற்கு ஒப்பானதாகும். இது ஆரோக்கியமான பரிந்துரை கிடையாது.

அபத்தத்தின் உச்சம்.

தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகள் தலை சிறந்த விஞ்ஞானிகளையும், கல்வியாளர்களையும், சமூக சீர்திருத்தவாதிகளையும் உருவாக்கியிருக்கிறது. அத்தகைய சாதனைகளை படைப்பது இப்போதும் சாத்தியமானது தான். ஆனால், இப்போது அத்தகைய சாதனைகள் படைக்கப்படாமல், கல்வித் தரம் சீரழிந்து வருகிறது என்றால் அதற்கான சீர்திருத்தம் மேலிருந்து தொடங்க வேண்டுமே தவிர, பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதிலிருந்து தொடங்கக் கூடாது. அவ்வாறு செய்வது அபத்தத்தின் உச்சம்.

ஆசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கப்படுவதற்கு தகுதித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என ஏராளமான வழிமுறைகள் வந்து விட்டன. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன் இத்தகைய வழிமுறைகள் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் இருந்த காலத்தில், உள்ளாட்சிகளின் தலைவர்களாக இருப்பவர்கள் அந்த ஊரில் உள்ள படித்த சமூகப் பொறுப்புள்ள இளைஞர்களை அழைத்து ஆசிரியர்களாக நியமித்தனர்.

இன்றைய நிலையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்

அவர்களின் தேர்வுகள் ஒருபோதும் சோடை போனதில்லை. காரணம்... உள்ளாட்சித் தலைவரும், ஊர்ப்பெரியவர்களும் தங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணடித்து விடக் கூடாது என்று ஆசிரியர்கள் கருதியதும், தங்கள் பகுதியின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று விரும்பியதும் தான். ஆனால், இன்றைய நிலைமை அப்படியாக இருக்கிறது... சிந்தித்து பாருங்கள்.

பணம் வாங்கிக் கொண்டு பணி நியமனம்

பள்ளி ஆசிரியர் பணிக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை. பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை என விலை வைத்து நியமனங்கள் செய்யப்படும் போது அரசு கல்வி நிறுவனங்களில் தரம் எங்கிருந்து கிடைக்கும். ஆசிரியர்களை விருப்பம் போல இட மாற்றம் செய்தால், ஊரக பள்ளிகளில் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் தான் காலியிடங்களின் அடிப்படையில் இடமாற்றம் செய்வதற்கான பொதுக்கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதை கடைபிடிக்காமல் தலா ரூ.5 லட்சம் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால், பணம் கொடுத்து பணி வாங்கியவரும், இடமாற்றம் வாங்கியவரும் எப்படி பாடம் நடத்துவர்?

அமைச்சர்கள் அடித்தக் கொள்ளை

ஆசிரியர்கள் இடமாற்றத்தில் அமைச்சர்கள் அடித்தக் கொள்ளையால் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும், இராமநாதபுரம் போன்ற தென் மாவட்ட பள்ளிகளிலும் 60% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வளர்ந்த மாவட்டங்களின் பள்ளிகளில் 100% ஆசிரியர்கள் உள்ளனர்.

கல்வியில் வடமாவட்டங்கள் கடைசியில் இருப்பதற்கு காரணம் இது தான். அரசின் சமூகநலத் திட்டங்கள் அனைத்துக்கும் பயனாளிகளை அடையாளம் காணும் பணியில் தொடங்கி வாக்காளர் கணக்கெடுப்பு நடத்துவது வரை அனைத்துப் பணிகளுக்கும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதும் அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு இன்னொரு காரணமாகும்.

அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட தேவை

இந்த சீரழிவுகளைக் களைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்தால் அத்துறையின் அமைச்சர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்; செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிபந்தனை விதித்தால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் நிச்சயமாக உயரும். இதை விடுத்து அரசு பள்ளிகளை தனியார்மயமாக்கத் துடிப்பது முறையல்ல.

நிதி ஆயோக்கை கலைக்க வேண்டும்

மத்தியில் திட்ட ஆணையம் இருந்த வரை புதிய அரசு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது போன்ற ஆக்கப்பூர்வ யோசனைகளை செய்து வந்தது. ஆனால், நிதி ஆயோக் அமைப்போ எதிர்மறையான யோசனைகளை வழங்கி வருகிறது. சீரழிவுக்கு வழி வகுக்கும் அந்த அமைப்பை கலைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Pmk Ramadoss Niti Aayog
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment