ஊழலின் அடையாளமாக திகழும் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கக் கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டு கூறை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை குவித்தார் என்பதைத் தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க...

ஊழலின் அடையாளமாக திகழும் ஜெயலலிதாவுக்கு மக்களின் வரிப்பணத்தில் நினைவு மண்டபம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவத்துள்ளார்.

இத தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மறைந்த சில நாட்களில் சட்டமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மெரினாக் கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

எனினும் அந்த நேரத்தில் ஜெயலலிதா எந்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் அப்போது எதிர்ப்பு எழவில்லை. அதன்பின்னர் வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த ஊழலில் ஜெயலலிதாவுக்கு உள்ள பங்கு குறித்து விரிவாக விளக்கியிருந்த உச்சநீதிமன்றம், தீர்ப்பளிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கவில்லை. எனினும் அவர் குற்றவாளி தான்.

அந்த அடிப்படையில் தான் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும்; அரசு திட்டங்களுக்கு சூட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பெயரை நீக்கிவிட்டு, அவற்றை அரசுத் திட்டங்கள் என்ற பெயரிலேயே செயல்படுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாமக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. இத்தகைய சூழலில் ஊழலின் அடையாளமாக திகழும் ஜெயலலிதாவுக்கு மக்களின் வரிப்பணத்தில் நினைவு மண்டபம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் போது ஜெயலலிதா இறந்து விட்டதால் தான் அவரை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கவில்லை. இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறை தான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவித்து ரூ.100 கோடி அபராதம் செலுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கும். ஜெயலலிதாவும் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருந்திருப்பார்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடுமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ‘‘சொத்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஒரே முகவரியில் வசித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் வேறு தொடர்புகள் இல்லை என்று கூறமுடியாது. இன்னும் கேட்டால் ஊழல் செய்து தாம் குவித்த சொத்துக்களை பகிர்ந்தளித்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவர்களை ஜெயலலிதா தமது போயஸ் தோட்டத்தில் தங்க வைத்திருந்தார்’’ என்று நீதிபதி சந்திரகோஷ் கூறியிருக்கிறார்.

ஊழல்கள் மூலம் சொத்துக்குவித்த வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை விட ஜெயலலிதா தான் முதன்மைக் குற்றவாளி என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் எதுவும் இருக்க முடியாது.

இதற்கெல்லாம் மேலாக நினைவு மண்டபம் எனப்படுவது பொதுவாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும், தியாகத் திருவிளக்காகவும் விளங்கியவர்களை போற்றுவதற்காக அமைக்கப்படுவது ஆகும். சிறந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் பார்க்கும் போது, அந்த தலைவர்களைப் போல நாமும் வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகத் தான் நினைவிடங்கள் அமைக்கப்படுகின்றன.

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் பட்சத்தில் அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள என்ன இருக்கும்? தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டு கூறை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை குவித்தார் என்பதைத் தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும். வருங்காலத் தலைமுறையினருக்கு அந்த பாவம் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதி அமிதவா ராய், ‘‘உயிர்க்கொல்லி தீமையான ஊழலின் பிடியிலிருந்து குடிமக்கள் சமுதாயத்தை மீட்க வேண்டும். நமது முன்னோர் மற்றும் இந்திய விடுதலைக்காக போராடிய தியாக சீலர்களால் கனவு காணப்பட்ட நிலையான, நியாயமான, உன்னதமான சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இப்புனித பணியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.

சாதாரண குடிமகனுக்கான இந்த அழைப்பு தமிழக அரசுக்கும் பொருந்தும். எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதை தவிர்ப்பதற்காக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close