மரங்களை வெட்டாமல் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும்: ராமதாஸ்

சாலையோர மரங்களுக்கு அப்பால் விரிவாக்கம் செய்தால் சாலையின் மையத்தில் மரங்கள் வந்து விடும். இதனால் அவற்றில் பயணம் செய்வதே மகிழ்ச்சியான அனுபவமாக மாறும்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலான மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு இடங்களில் சாலையோர மரங்களை வெட்டி வீழ்த்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மரங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அரசே வெட்டத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை மட்டுமே முழு அளவிலான போக்குவரத்து நடைபெறுகிறது. கடலூர் முதல் கன்னியாகுமரி வரையிலான பாதை இன்னும் முழுமையாக அமைக்கப்படாததாலும், பல இடங்களில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதாலும் இதைப் பயன்படுத்த வாகன ஓட்டிகள் தயங்குகின்றனர். இது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால் சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி, காரைக்கால், நாகூர், வேதாரண்யம், மல்லிப்பட்டினம், ராமநாதபுரம், ஏர்வாடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 சுற்றுலா தலங்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் பயணிகள் எளிதாக செல்ல முடியும். மேலும், சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக குமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு ஏற்படும். கடற்கரைச் சாலை பயணத்தை சுற்றுலாபயணிகள் விரும்புவார்கள் என்பதால் இச்சாலையின் பயன்பாடு அதிகரிக்கும்.

ஆனால், இந்த சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற போதிய நிதியில்லாமல் தமிழக அரசு தடுமாறி வருகிறது. இந்த சாலையை மத்திய அரசிடம் ஒப்படைத்தால் அதை ரூ.10,000 கோடி செலவில் மேம்படுத்தத் தயாராக இருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனாலும், இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவது குறித்தும், விரிவுப்படுத்துவது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், கடலூருக்கு அப்பால் காரைக்கால், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கிழக்குக் கடற்கரைச் சாலையை விரிவுபடுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாலை விரிவாக்கப்பணிகளுக்காக இந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்த நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள மரங்கள் நன்கு வளர்ந்து சாலைகளை சோலைகளாக்கும் அளவுக்கு நிழல் தருகின்றன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அந்த மரங்கள் வெட்டப்பட்டால் அந்த சாலைக்கு உள்ள இயற்கை அழகே குலைந்து விடும்.

தமிழகச் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சாலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். சாலைகள் விரிவுபடுத்தப்பட்டால் தான் தொழில் வளர்ச்சியும், சுற்றுலா வளர்ச்சியும் சாத்தியமாகும். ஆனால், அதற்காக மரங்களை வெட்டி வீழ்த்துவது முறையல்ல. மரங்களை வெட்டாமல் சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்து, வேறு வழியில்லாவிட்டால் தான் மரங்களை வெட்ட வேண்டும். அப்போதும் கூட ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து பராமரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மலைவலப் பாதையை விரிவுப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தபோது, நிழல் தரும் மரங்களை வெட்டக்கூடாது என்று தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பசுமைத் தீர்ப்பாயங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சாலைகளை அகலப்படுத்துவதாகக் கூறி மரங்களை வெட்டநெடுஞ்சாலைத்துறை முயல்வதை இயற்கையை நேசிப்பவர்களால் ஏற்க முடியாது.

கிழக்குக் கடற்கரைச் சாலையை மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டு தான் விரிவுபடுத்த வேண்டும் என்று கட்டாயமில்லை. சாலையின் ஓரங்களில் தேவைக்கும் அதிகமாக நிலம் இருப்பதால், சாலையோர மரங்களுக்கு அப்பால் விரிவாக்கம் செய்தால் விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மையத்தில் மரங்கள் வந்து விடும். இதனால் சாலைகள் அழகானவையாக மாறுவதுடன் அவற்றில் பயணம் செய்வதே மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என்பதை நெடுஞ்சாலைத் துறை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 10 ஆண்டுகளில் சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. தமிழகம் இன்று எதிர்கொண்டு வரும் வறட்சிக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் மரங்கள் வெட்டப்பட்டது முக்கியக் காரணமாகும். இதை உணர்ந்து சாலையோர மரங்களை வெட்டாமல் கிழக்குக் கடற்கரைச் சாலையை விரிவுபடுத்த தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close