மலைபோல் குவிந்து கிடக்கும் கடனை குறைப்பதற்கு வழி என்ன? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.79,861 கடன் இருக்கும்.

2016-17ஆம் ஆண்டில் மட்டுமின்றி, 2017-18 ஆம் ஆண்டிலும் தமிழகம் தான் வருவாய் பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மைக்கு இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து இன்னொரு சான்று கிடைத்திருக்கிறது. தென் மாநிலங்களில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்பது தான் அந்த சான்று ஆகும். இந்தியாவில் அதிக கடன்சுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில் அதை அரசு கட்டுப்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தான் அதிகம்
“மாநிலங்களின் நிதிநிலை: 2016-17 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு” என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய 5 தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில் தமிழகத்தில் தான் வருவாய்ப் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரு மடங்கு அதிகம்
2016-17 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை சுமார் 70% அதிகரித்து ரூ.15,850 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும். தமிழகத்தின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவகையில் வருவாயைப் பெருக்க முடியாமல் தமிழகம் தடுமாறி வருகிறது என்பதையே ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பிற மாநிலங்கள்
பிற தென் மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திரத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.4,870 கோடியாகவும், தெலுங்கானாவின் வருவாய் பற்றாக்குறை ரூ.3,720 கோடியாகவும் உள்ளன. கேரள மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை சற்று அதிகமாக ரூ.13,070 கோடியாக உள்ளது. அதேநேரத்தில் கர்நாடகத்தில் வருவாய் பற்றாக்குறை இல்லை என்பதுடன், ரூ.520 கோடி உபரி வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது. 2016-17ஆம் ஆண்டில் மட்டுமின்றி, 2017-18 ஆம் ஆண்டிலும் தமிழகம் தான் வருவாய் பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ளது.

ரூ.50,000 கோடியை தாண்டும்!
நடப்பாண்டில் இது ரூ.15,930 கோடியாகும். நடப்பு நிதியாண்டின் இறுதியில் இது ரூ.20,000 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் பற்றாக்குறையில் மட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறையிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.41,977 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் இது ரூ.50,000 கோடியை தாண்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நிதித்துறையில் தமிழகம் தோல்வி
இதை சமாளிக்க வேண்டுமானால், தமிழக அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தின் வருவாய் இயல்பான அளவை விட குறைந்து வருகிறது. 2007-08 முதல் 2012-13 வரையிலான 5 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சி 2013-14 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டிருந்தால் 2017-18 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டின் வரி வருமானம் ரூ.99,590 கோடி மட்டுமே. ஆக, தமிழகத்தின் வருவாய் இயல்பைவிட ரூ.66,000 கோடி குறைந்துள்ளது. நிதித்துறையில் தமிழகத்தின் தோல்விக்கு இதுதான் உதாரணமாகும்.

ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.79,861 கடன்
நடப்பாண்டின் இறுதியில் தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.3,14,366 கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இத்துடன் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையையும் கணக்கில் கொண்டால் நடப்பாண்டில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.5.75 லட்சம் கோடியாக இருக்கும். அதாவது தமிழகத்தில் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.79,861 கடன் இருக்கும். தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, கடன் சுமை வளர்ச்சியில் தான் தமிழகத்தை முன்னணிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

போக்குவரத்து நிர்வாகம்
போக்குவரத்து தொழிலாளர்களிடமிருந்து வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.5,000 கோடியை அவற்றுக்குரிய கணக்குகளில் செலுத்தாமல் போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் செலவழித்து விட்டன. அதுமட்டுமின்றி கடந்த 6 ஆண்டுகளாக போக்குவரத்துக்கழகங்களில் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்கள் எதையும் வழங்காத வகையில் ரூ.1,700 கோடி கடன் சேர்ந்திருக்கிறது.

விரைவில் ரூ.10 லட்சம் கோடியை கடக்கும் நிலை
மற்றொருபுறம் புதிய மின்திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லாததால் மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்சாரக் கழகத்திடமிருந்து தமிழக அரசு ரூ.85,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது. இவற்றையும் கணக்கில் சேர்த்தால் தமிழகத்தின் கடன்சுமை விரைவில் ரூ.10 லட்சம் கோடியை கடந்து விடும். ஆனால், தங்களின் வருவாயை அதிகரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள் அரசின் வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதேநிலை நீடித்தால் தமிழகத்தை திவாலான மாநிலம் என்று அறிவிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.

செயல்திட்டங்கள் என்னென்ன?
எனவே, தமிழக ஆட்சியாளர்கள் வீண் வேலைகளில் ஈடுபடுவதை விடுத்து, தமிழகத்தின் வருவாயை அதிகரித்து மலைபோல் குவிந்து கிடக்கும் கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான செயல்திட்டங்கள் என்னென்ன? என்பதை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close