Advertisment

பொறியியல் சேர்க்கை: தமிழக அரசின் தவறான முடிவு... ஓரிடம் கூட வீணாகக் கூடாது: ராமதாஸ்

அண்ணா பல்கலையில் ஒரு பொறியாளரை உருவாக்குவதற்காக ரூ.25 லட்சம் வரிப்பணம் செலவாகிறது. 1800 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் ரூ.450 கோடி வரிப்பணம் வீண்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramadoss, PMK, NEET Exam, Bank exam

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு செய்த அபத்தங்கள் மற்றும் குளறுபடிகளால் பொறியியல், கால்நடை அறிவியல், வேளாண் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் யாருக்கும் பயன்படாமல் காலியாக கிடக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு செய்த அபத்தங்கள் மற்றும் குளறுபடிகளால் பொறியியல், கால்நடை அறிவியல், வேளாண் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் யாருக்கும் பயன்படாமல் காலியாக கிடக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு இதை உறுதி செய்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தி முடித்த பிறகு தான் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். இது தான் காலம்காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையாகும். ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் மீது மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காததால் மருத்துவக் கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பதை இதுவரை கணிக்க முடியவில்லை.

இதனால் பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளை பயிலத் திட்டமிட்டுள்ள மாணவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில், விளைவுகளை சிந்தித்துப் பார்க்காமல் அப்படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதுதான் இப்போது பலரின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சிக்கலாக மாறியுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா? நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா? என்பது தெரியாததால், அனைத்து மாணவர்களும் குறைந்தபட்ச கல்வி வாய்ப்பை உறுதி செய்து கொள்வதற்காக பொறியியல், கால்நடை அறிவியல், வேளாண் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடந்தாலும், அதில் சேரும் மாணவர்களில் 99 விழுக்காட்டினர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏற்கனவே சேர்ந்தவர்களாகத் தான் இருப்பர். அதனால் மருத்துவக் கலந்தாய்வு நிறைவடையும் போது, முன்னணி பொறியியல் கல்லூரிகளில் 2000 இடங்களும், கால்நடை அறிவியல் மற்றும் வேளாண்மை அறிவியல் படிப்புகளில் 1000 இடங்களும் காலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தையும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்புவது தான் சரியானதாக இருக்கும்.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எவரேனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் அதனால் ஏற்படும் காலியிடங்கள் நிரப்பப்படாது; அவை காலியாகவே இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தனியார் கல்லூரிகளில் இவ்வாறு ஏற்படும் காலியிடங்களை கல்லூரி நிர்வாகங்கள் நிரப்பிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான அறிவிப்பு ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதும் கூட.

மருத்துவப் படிப்பில் சேரும் பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளை பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் படிப்பவர்களாகத் தான் இருப்பார்கள். உதாரணமாக பொறியியல் மாணவர்கள் 2000 பேர் மருத்துவப் படிப்பில் சேருவதாக வைத்துக் கொண்டால், அவர்கள் 1800 பேர் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்களாக இருப்பர்.

மீதமுள்ளவர்கள் புகழ்பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களாக இருப்பர். தமிழக அரசின் முடிவால் அண்ணா பல்கலைக்கழகத்திலும், பிற அரசு பொறியியல் கல்லூரிகளிலும் 1800 இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகும்.

அண்ணா பல்கலையில் ஒரு பொறியாளரை உருவாக்குவதற்காக ரூ.25 லட்சம் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. 1800 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் ரூ.450 கோடி வரிப்பணம் வீணாகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் இடங்கள் காலியானால் அதை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்புவது தான் முறை. அதை விடுத்து காலியிடங்களை அப்படியே வீணாக்குவது முறையல்ல.

வேளாண்மை கல்லூரிகளின் சிக்கல் வித்தியாசமானது. முதல் கட்ட கலந்தாய்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் விலகும் போது ஏற்படும் காலியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.

ஆனால், அதில் அதிக மதிப்பெண் எடுத்து தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்க முடியாது. மாறாக அவர்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்து, இதுவரை எந்த கல்லூரியிலும் சேராதவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு அரசு கல்லூரிகளில் சேர்ந்து இலவசமாக படிப்பார்கள். ஆனால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களோ தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிக்க வேண்டும். இது எந்த வகையான சமூக நீதி?

இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம் மருத்துவப் படிப்புக்கு முன்பாக மற்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தியது தான். இது தவறான அணுகுமுறை; இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்று 23.06.2017 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன்.அதை தமிழக அரசு பொருட்படுத்தாதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகும்.

தமிழக அரசின் தவறான முடிவால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் காலியிடங்களை அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இது மிகவும் நீண்ட நடைமுறை என்றாலும் தவிர்க்க முடியாததாகும். எனவே, ஒரு மாணவர் சேர்க்கை இடம் கூட வீணாகாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Anna University Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment