Advertisment

தமிழக ஆட்சியாளர்களுக்கும், சேகர் ரெட்டிக்கும் இடையிலான தொடர்பு உலகமறிந்த ரகசியம்: ராமதாஸ்

சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramadoss, TTV Dinakaran, AIADMK,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, Ramadoss, PMK

சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மணல் கொள்ளை சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரிடமிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கைநீட்டி பணம் வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர், அமைச்சர்களின் பெயர்!!!

மணல் கொள்ளை சேகர் ரெட்டியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் தற்போதைய  தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நடந்த பேரங்கள் குறித்தும் தொடர்புகள் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரூ.300 கோடி கையூட்டு

சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோருக்கும் சேகர் ரெட்டி பெருமளவில் பணம் கொடுத்ததற்காக குறிப்புகள் அந்த குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கின்றன.  அந்த குறிப்பேட்டில் உள்ள கணக்குகளின்படி மட்டும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டவை

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதற்காக அவர்கள் மூலம் சாதித்த  பலன்கள் குறித்தும், பெற்ற ஒப்பந்தங்கள் குறித்தும் குறிப்பேட்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் தான் தலைமைச் செயலாளர் இராமமோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் இல்லங்களில் வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

பணம் வாங்கினார்களா?

ரெட்டியின் குறிப்பேட்டில் பெயர் இடம்பெற்றிருந்த 4 பேரிடம் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் முன்னாள் தலைமைச் செயலாளர் இராமமோகன்ராவ் தவிர மீதமுள்ள மூவரும் சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டிருப்பதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்

சேகர் ரெட்டியின் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ள வருமானவரித்துறை அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்காணிப்புப் பிரிவைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்  என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஐயங்களை ஏற்படுத்துகிறது

தமிழக அரசின் கண்காணிப்பு ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பவர் கிரிஜா வைத்தியநாதன் தான் என்பதால், அவர் தான் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் உதவியாளர்கள் மீதான குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஆனால், வருமானவரித்துறையிடமிருந்து கடிதம் வந்து பல நாட்கள் ஆகியும் எந்த விசாரணைக்கு ஆணையிடப்படாதது ஐயங்களை ஏற்படுத்துகிறது.

உலகமறிந்த ரகசியம்

தமிழக ஆட்சியாளர்களுக்கும், சேகர் ரெட்டிக்கும் இடையிலான தொடர்பு உலகமறிந்த ரகசியம் தான். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் 197 வேட்பாளர்களுக்கு தலா ரூ.4 கோடி வீதம் சேகர் ரெட்டி வழங்கியதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ரூ.570 கோடி கண்டெய்னர் பண மர்மம் மறைக்கப்பட்டதைப் போன்றே, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வலிமையான உறவு காரணமாக சேகர் ரெட்டி பணம் கொடுத்த விவகாரமும் மறைக்கப்பட்டது.

ஊரறிந்த உண்மை

பணம் மதிப்பிழத்தல் விவகாரம் காரணமாக நாடு முழுவதும் புதிய ரூபாய் தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில், சேகர் ரெட்டி இல்லத்தில்  ரூ.24 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் தாள்கள் உட்பட மொத்தம் ரூ.170 கோடி ரொக்கமாக கைப்பற்ற விவகாரமும் ஊரறிந்த உண்மை தான். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி பணத்தை அள்ளி வீசியதும், அதற்கு பதிலாக மணல் அள்ளும் ஒப்பந்தம்  உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பெற்றதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.

தலைமைச் செயலாளர் தயங்குவது ஏன்?

அவ்வாறு இருக்கும் போது சேகர்ரெட்டியிடமிருந்து அமைச்சர்கள் பணம் பெற்றது குறித்து விசாரிக்க தலைமைச்செயலாளர் தயங்குவது ஏன்? என்பது தெரியவில்லை.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிகவும் நேர்மையான அதிகாரி. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் வருமானவரித்துறையே ஆதாரங்களை அளித்து விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்ட பிறகும் அதுபற்றி விசாரணை நடத்தாமல் தாமதிப்பது சரியல்ல. எனவே, சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Pmk Ramadoss Girija Vaidyanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment