அடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும்: ராமதாஸ்

ஊதியக் குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது காலம் கடத்தும் செயல்

ஊதியக் குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது காலம் கடத்தும் செயல்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramadoss,

வரும் 7-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ள தொடர் வேலைநிறுத்தத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வரும் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளனர். போராட்டம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதைத் தவிர்க்க தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்; அதுவரை 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; ஒப்பந்த பணி முறையை ஒழித்து விட்டு அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகும்.

இவற்றில் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற முடியாதவை அல்ல. அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது சாத்தியமும் இல்லை. எனினும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரு முறை போராட்டமும், அடையாள வேலை நிறுத்தமும் நடத்தினர். ஆனாலும் ஆட்சியாளர்களின் காதுகளில் கோரிக்கைகள் விழவில்லை.

Advertisment
Advertisements

இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்றைக்காவது ஒரு நாள் இந்த கோரிக்கைகளை 01.01.2016 முதல் பின் தேதியிட்டு நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். எனவே, இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதோ அல்லது 20% இடைக்காலத் தீர்ப்பு வழங்குவதோ தான் தமிழக அரசு முன் உள்ள சிறந்த வாய்ப்பு ஆகும். ஆனால், அதை செயல்படுத்த அரசு தயங்குவது ஏன்? என்பது தெரியவில்லை.

ஊதியக் குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவதெல்லாம் காலம் கடத்தும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது குறித்தெல்லாம் ஒரே வாரத்தில் முடிவெடுத்து செயல்படுத்திவிட முடியும். ஆனால், இதை செய்யாமல் காலந்தாழ்த்துவதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனில் அக்கறை இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு நிரூபித்திருக்கிறது.

பினாமி அரசுக்கு ஆபத்து என்றவுடன் கொள்ளைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் அழைத்து பேசுவதற்கும், ஊழல் வழக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அடிக்கடி டெல்லிக்கு காவடி எடுப்பதற்கும் நேரம் உள்ள ஆட்சியாளர்களுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லையா.... அரசு ஊழியர்களுடன் பேச மனம் இல்லையா?

சென்னையில் போராட்டம் நடத்த வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஆங்காங்கே கைது செய்து அச்சுறுத்தியதைப் போல இப்போதும் அடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும். 2003-ஆம் ஆண்டில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட முதலமைச்சர் இறுதியில் தோல்வியடைந்ததை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 11-ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இடையில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களை தேர்வுக்காக தயார்படுத்துவதற்காக ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆனால், தேர்வுக்கு ஒரு வேலை நாள் முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்படும். மேல்நிலை வகுப்புகளின் மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்காகவும், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்காகவும் படிக்க வேண்டியுள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அதேபோல், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தமும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றி அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான தீர்வை எட்டுவதன் மூலம் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ள தொடர் வேலைநிறுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Pmk Ramadoss 7th Pay Commission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: