இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்பப்பெறச் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ள நிலையில், இதை தமிழக அரசு கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
மீனவர்களின் போராட்டத்திற்கு முதன்மைக் காரணம் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் மீனவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை, படகுகளுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது தான்.
இலங்கை அரசின் இந்த சட்டத்தால் நாகை மாவட்டம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரையுள்ள, வங்கக்கடலில் மீன்பிடிக்கும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இப்போராட்டத்தை இராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் கடைபிடிக்கப்படும் பொதுவான விதிகள் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதிக்கு பொருந்தாது. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியதாகும்.
கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தான் ஆழ்கடல் வரும்; அங்கு தான் அதிக அளவில் மீன் கிடைக்கும். நாகை முதல் இராமேஸ்வரம் வரையிலான பல இடங்களில் இத்தகைய ஆழ்கடல் பகுதி என்பது இலங்கை எல்லையில் தான் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக கூறுவதே அபத்தம்.
குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும் எல்லைகளால் பறிக்க முடியாது. இதை பன்னாட்டு நீதிமன்றங்கள் பல முறை உறுதி செய்திருக்கின்றன.
இத்தகைய சூழலில், தமிழக மீனவர்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப் பார்க்கும் செயலாகும். இதை இந்தியா கண்டிக்காமல் வேடிக்கைப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பதை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக அமையும். இதுகுறித்து இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்துள்ளன. இந்த சிக்கலுக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இலங்கை அரசு தன்னிச்சையாக இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருப்பது முறையல்ல. இந்த சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்கப்படும்.
மற்றொருபுறம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை நேற்று கைது செய்திருக்கிறது. இவர்களையும் சேர்த்து இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களின் எண்ணிக்கை 53 ஆகவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளின் எண்ணிக்கை 144 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
இவற்றை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம்போல மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் பிரச்சினையை கை கழுவி விடுவதை முதலமைச்சர் வழக்கமாக வைத்துள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் இதுவரை 13 முறை பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், பயன் இல்லை.
தங்களின் கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள மீனவர்கள் அடுத்தக்கட்டமாக வரும் 14-ஆம் தேதி தீக்குளிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறுவதற்குள் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.
அத்துடன் இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடுமையான அரசியல் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.