மதுவை விற்று தான் நிர்வாகம் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழக அரசு : ராமதாஸ் சாடல்

மது விற்பனை மீதான தமிழக அரசின் இந்த மோகம் தான் தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர மீதமுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுவுக்கு எதிராக தமிழகத்தில் வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாக்குமரி வரை மதுக்கடைகளுக்கு எதிராக மகளிர் போர்க்கோலம் பூண்டிருக்கும் நிலையில், அவர்களின் போராட்டங்களுக்கு தமிழக அரசு மதிப்பளிக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய தடையாகவும், அச்சுறுத்தலாகவும் மது உருவெடுத்திருக்கிறது. ஆனால், மதுவின் தீமைகளை தொலைநோக்கில் பார்க்காமல் அதனால் கிடைக்கும் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு குறுகிய நோக்கத்துடன் தமிழக பினாமி அரசு செயல்பட்டு வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 90 ஆயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அத்தீர்ப்பின்படி தமிழகத்தில் மட்டும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. அப்போதே மூடப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்ட கடைகளாக இருக்கட்டும்; மீதமுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்தலாம் என அரசுக்கு பா.ம.க. ஆலோசனை வழங்கியது.

ஆனால், மதுவை விற்று தான் நிர்வாகம் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள தமிழக அரசு, இந்த யோசனையை ஏற்காமல் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக அதையொட்டியுள்ள கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

மது விற்பனை மீதான தமிழக அரசின் இந்த மோகம் தான் தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஆகும். குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பதால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்துள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்பதற்காக வீராங்கணைகளாக மாறி போராடி வருகின்றனர்.

திருப்பூர் சாமளாபுரம், சிவகாசி கவிதா நகர், வேலூர் மாவட்டம் அழிஞ்சிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது தாக்குதல், கைது நடவடிக்கை உள்ளிட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பெண்கள் மது அரக்கனுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கடந்த இரு நாட்களாக கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தமிழகத்திற்கு ஓர் உண்மையை உணர்த்தியுள்ளன. தமிழக அரசு எத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டாலும், அதற்கெல்லாம் தாங்கள் அஞ்சப்போவதில்லை; குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூடும் வரை ஓய மாட்டோம் என்பது தான் தமிழக அரசுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் அவர்கள் சொல்ல விரும்பும் செய்தியாகும்.

மதுவுக்கு எதிராக தனி மனிதனாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராகவும் கடந்த 35 ஆண்டுகளாக போராடி வருகிறேன். அந்த அடிப்படையில் தமிழகத்தில் மதுவுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் அறப்போராட்டங்களைப் பார்க்கும் போது, பல ஆண்டுகளுக்கு முன் வைத்த மரம் வளர்ந்து பழங்களைத் தரும்போது, மரத்தை வைத்த உழவன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைவானோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்.

மதுக்கடைகளை திறக்கும் விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அறிவுரை வழங்கியுள்ளன. கிராமசபைக் கூட்டத்தில் மதுக்கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அப்பகுதியில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதேபோல், திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அதை மதித்து மதுக்கடைகளை மூடுவது குறித்து 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசு மதிக்கவில்லை. மதுவுக்கு எதிராக தாய்மார்கள் கிளர்ந்தெழுந்து போராடி வரும் நிலையில், அவர்களின் உணர்வுகளை மதித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மூடப்பட்ட 3321 மதுக்கடைகளும் இனி திறக்கப்படாது என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர மீதமுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

×Close
×Close