Advertisment

எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK, Ramadoss, Minister, Income tax department, Tasmac,

தமிழ் நாட்டில் அதிமுக அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர். கடந்த 5 மாதங்களில் மூன்று முதலமைச்சர்களையும், ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்களையும் பார்த்த இந்த அரசு, ஒராண்டைக் கவிழாமல் கடந்திருக்கிறது என்பதைத் தவிர இந்தக் கொண்டாட்டத்திற்கு வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

Advertisment

பதவி ஏற்ற ஒராண்டு காலத்திற்குள் எந்த அரசாவது இவ்வளவு வெறுப்பையும், கோபத்தையும் மக்களிடம் சந்தித்திருக்குமா? என்ற வினாவுக்கு, ' இல்லை' என்று மிகவும் எளிதாக பதிலளித்து விடலாம். அந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கும் , கோபத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஆளாகியிருக்கிறது. பொதுவாக எந்த அரசும் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற முடியாது. எனினும், ஒப்பீட்டளவில் அதிக நல்லத் திட்டங்களை ஓர் அரசு செயல்படுத்தும் போது அது மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாக மாறும்.

ஆனால், கடந்த ஓராண்டை 3 முதலமைச்சர்களின் உதவியுடன் நிறைவு செய்துள்ள இந்த அரசு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுவது, ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளியாகிவிடாமல் தடுப்பது ஆகியவற்றைத் தவிர வேறு எந்தப் பணியும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்படுவது வழக்கமானது தான். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஆனால், எடப்பாடி தலைமையிலான பினாமி ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்ப்பது மட்டும் தான் முழு நேரப்பணியாக நடைபெற்று வருகிறது.

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்ட போதும் கூட தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 1984-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு முறை 2007-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை படிக்க முடிந்தது.  ஆனால், நீட் என்ற பெயரில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது அதைத் தடுத்து முறியடிக்க அதிமுக அரசு தவறிவிட்டது.

இந்திய அரசியலில் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் என பல்வேறு படிநிலைகள் உருவாக்கப்பட்டிருப்பதன் காரணமே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதும், மக்களுக்கான தேவைகளை அந்தந்த நிலைகளில் உள்ள நிர்வாக அமைப்புகள் தான் சரியாக செய்ய முடியும் என்பதும் தான்.

மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாததால் தான் 50 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களைத் திரட்டி மாநில சுயாட்சிக்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் குரல் கொடுத்தார். அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுக, இந்த முழக்கங்களை வலியுறுத்தி குரல் கொடுக்காமல், தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 1921-ஆம் ஆண்டிலிருந்து கணக்கில் கொண்டால் 1991-96 காலத்திலான ஜெயலலிதா அரசு தான் மக்களின் அதிகபட்ச கோபத்திற்கு ஆளாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர். ஊழலில் திளைக்கும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment