ச. மார்ட்டின் ஜெயராஜ் - ராமநாதபுரம் மாவட்டம்
Ramanathapuram: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் என பலரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். அவர்களுடன் களத்தில் சினிமா நட்சத்திரங்களும், திரைப் பிரபலங்களும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் எதிரணி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்தும், தாக்கியும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பா. ஜெயபெருமாள் தனது எதிரணி வேட்பாளர்களை கலாய்த்து தள்ளியுள்ளார்.
தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வரும் அ.தி.மு.க வேட்பாளர் பா.ஜெயபெருமாள், இன்று பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி, வளநாடு, செங்கற்படை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதியில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, செங்கற்படையில் மக்கள் மத்தியில் பேசிய ஜெயபெருமாள், எதிரணி வேட்பாளர்களான நவாஸ் கனி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கலாய்த்து தள்ளினார். மேலும், ஆளும் தி.மு.க தாக்கியும் பேசினார்.
அ.தி.மு.க வேட்பாளர் பா. ஜெயபெருமாள் பேசுகையில், "நான் ஒரு சாதாரண விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்களைப் போல் கிராமத்தில் வசிப்பவன். நான் உங்களில் ஒருவன். உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களையே சுற்றிச் சுற்றி வருபவன். ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனியை (தி.மு.க கூட்டணி ஐ.யூ.எம்.எல்) நான் போகிற இடமெல்லாம் மக்கள், 'கண்டா வரச் சொல்லுங்க' என்கிறார்கள். அவர் இந்த 5 வருடத்தில் மக்களை சந்தித்ததே இல்லை, எந்த நன்மையும் செய்தது இல்லை.
இதேபோல், இன்னொருவர் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தான் ஓ.பி.எஸ் (ஓ.பன்னீர் செல்வம் - பா.ஜ.க ஆதாரவு, சுயேட்சை சின்னத்தில் போட்டி). அவர் வெற்றி பெற்றால் தேனிக்கு போய் விடுவார். அவரை உங்களால் பார்க்கவே முடியாது. ஆனால், நான் அப்படியல்ல. நீங்கள் என்னை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நான் செய்து தருவேன்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த பகுதி மக்களுக்கும் சரி, தமிழ்நாட்டுக்கும் சரி எந்தவொரு நன்மையும் செய்யவில்லை. அவர்கள் பொய்களை அவிழ்த்துவிட்டு வெற்றி பெறத் தான் பார்ப்பார்கள்." என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“