ச. மார்ட்டின் ஜெயராஜ் - ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக பயிரப்படும் தானியமாக 'முண்டு மிளகாய்' எனப்படும் 'குண்டு மிளகாய்' உள்ளது. 'வானம் பார்த்த பூமி' என்று கூறப்படும் இங்கு விளையும் மிளகாயின் தனிச்சிறப்பே அதன் காரம் தான். தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு முண்டு மிளகாய் ஏற்றுமதியாகி வருகிறது. உலக அளவில் நல்ல சந்தை வாய்ப்பும் உள்ளது.
இப்படியாக தனிச்சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதற்காக, ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும் விண்ணப்பிக்கப்பட்டது. ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு அதிக வரவேற்பு உள்ளதை கண்டறிந்து, அதற்கு புவிசார் குறியீடு அளிக்க நறுமண பொருட்கள் வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், நீண்ட முயற்சிக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
'காரம் கம்மி, சாந்து அதிகம்': தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பேட்டி
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சௌ. நாகராஜனை நேரில் சந்தித்து கேட்டறிந்தோம். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்திலே மிளகாய் அதிகம் விளையும் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது. இந்த ஆண்டு சுமார் 15, 500 ஹெக்டேர் மிளகாய் பயிரட்டப்பட்டுள்ளது. இதில் சம்பா ரகம் 2,000 ஹெக்டேரிலும், மீதமுள்ள 13, 500 ஹெக்டேரில் குண்டு மிளகாய் என்று சொல்லப்படுகின்ற முண்டு மிளகாய் பயிரட்டப்பட்டுள்ளது.
இந்த 'ராமநாதபுரம் முண்டு' மானாவாரியாக வரக்கூடியது. சம்பா இரவையில் வரக்கூடியது. முண்டு மிளகாய்க்கு என தனித்துவம் உண்டு. ரொம்பவும் காரம் இல்லாமல், சாந்து அதிகம் இருக்கும். இதனால், அவை மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் இருக்கும் மக்களாலும் அதிகம் நுகரப்படுகிறது.
முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதற்காக, ராமநாதபுரம் முண்டு மிளகாய் உற்பத்தியாளர்கள் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தார்கள். மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை கடந்த 21.10.2022-ல் புவி சார் குறீயீடு வழங்குவதற்கான ஆட்சேபம் ஏதாவது இருந்தால் தெரிவிக்கலாம் என தனது துறை மூலம் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. அதற்கான காலம், கடந்த பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததால், புவிசார் குறீயீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புவிசார் குறீயீடு வழங்குவதன் நன்மை என்னவென்றால், நமக்கு தரமான பொருள் கிடைக்கிறது என்ற நம்பகத்தன்மை வரும். இதனால், உற்பத்தியாளர்களுக்கு நல்ல மார்க்கெட் கிடைக்கும். இந்த புவிசார் குறீயீட்டை 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்போது, நாம் அதன் பாரம்பரித்தை காத்து மீண்டும் புவிசார் குறீயீடு கிடைக்க செய்ய வேண்டும்." என்று அவர் கூறினார்.
விவசாயிகள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் முண்டு மிளகாய் சாகுபடி பரப்பு இன்னும் அதிகமாகும் என்றும், வெளியூர், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புவிசார் குறியீடு என்றால் என்ன?
இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் 1999-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பொருளின் பிறப்பிடத்தை அறியவும் இந்த குறியீடு உதவும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை, வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ, போலியாகவோ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும். அந்த வகையில், தமிழகத்தின் காஞ்சீபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மதுரை மல்லிகை பூ, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தற்போது, ராமநாதபுரம் முண்டு மிளகாய் மற்றும் வேலூர் இலவம்பாடி முள் கத்திரிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.