Advertisment

தொடர்ந்து 3வது முறை குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த கலெக்டர்: வெளிநடப்பு செய்த ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாத நிலையில், விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து புறக்கணித்தனர்.

author-image
Martin Jeyaraj
New Update
Ramanathapuram: TN Farmers Associations boycott agriculture grievances meeting Tamil News

Tamil Nadu Farmers Association boycott the agriculture grievances meeting held in Ramanathapuram Tamil News (Express Photo: S. Martin Jeyaraj)

ச. மார்ட்டின் ஜெயராஜ் - ராமநாதபுரம் மாவட்டம்

Advertisment

Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அவ்வகையில், மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நிலம் எடுப்பு) எம்.இராஜசேகர் தலைமையேற்றார். முன்னதாக, இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

publive-image


இந்தக் கூட்டத்தில் நெற்பயிருக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் பற்றி கேட்க விவசாயிகள் காத்திருந்த நிலையில், குறை தீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கிய போது, மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், வேதனையும் ஏமாற்றமும் அடைந்த விவசாயிகள், 'மாவட்ட ஆட்சியர் இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது' என்று கோரிக்கை விடுத்தனர்.

publive-image

Express Photo: S. Martin Jeyaraj 

ஆனால், கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருந்து எழுந்து வெளிநடப்பு செய்து புறக்கணித்தனர். மேலும், கூட்டம் நடந்த அரங்கில் இருந்து வெளியேறி 'கூட்ட புறக்கணிப்பு' முழக்கங்களை எழுப்பினர். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயிகள், குறை தீர்க்கும் கூட்டத்தை தாங்கள் வெளிநடப்பு செய்து புறக்கணித்த காரணத்தை கூறினர்.

publive-image
Express Photo: S. Martin Jeyaraj 

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மாவட்ட விவசாய சங்க செயலாளர் மயில்வாகனம், " ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தை, தொடர்ந்து இரண்டு மாதங்களாக புறக்கணிக்கும் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு வராமல் இருந்தார். அவர் இன்று வருவார், விவசாயிகளுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் வறட்சி நிவாரணம் இன்சூரன்ஸ் தொடர்பாக சொல்லுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இன்றும் அவர் வராததால், விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் மற்றும் வெளிநடப்பு செய்கிறோம்.

publive-image
தமிழ்நாடு மாவட்ட விவசாய சங்க செயலாளர் மயில்வாகனம் (Express Photo: S. Martin Jeyaraj )

மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. அதனால், வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரத்து 500 வழங்குவதாக கூறியதால் அதை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம். குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். அது குறித்து இன்று அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்." என்று கூறினார்.

publive-image
Express Photo: S. Martin Jeyaraj 

தொடர்ந்து இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வைகை பாசன விவசாய சங்கத்தைச் சேர்ந்த எம்.எஸ்.கே பாக்கியநாதன், "ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து பாதிக்கப்பட்ட விவாசயிகளுக்கு, கடந்த ஜனவரி மாதமே சம்பா பருவத்திற்கான பயிர் இழப்பீட்டு தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து தமிழக சிறப்பு செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம். வேளாண்துறை அமைச்சரிடமும் மனு அளித்துள்ளோம். முதல்வரிடம் நேரடி காணொளி காட்சி வழியாக பேசியுள்ளோம்.

publive-image
தமிழக வைகை பாசன விவசாய சங்க எம்.எஸ்.கே பாக்கியநாதன் (Express Photo: S. Martin Jeyaraj)

ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இதுவரைக்கும் தமிழக அரசு மற்ற மாவட்டங்களுக்கு வழங்கியதைப் போல ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 'பாரபட்சமாக' வழங்கப்படவே இல்லை. மக்கள் நீதி கேட்டு வீதியில் இறங்கியும் போராடி விட்டோம், நெடும் பயணமும் மேற்கொண்டு விட்டோம். ஆனால், மாவட்ட ஆட்சியர் இன்றைய குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரவில்லை. அதனால், மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகள் சார்பாக இந்தக் கூட்டத்தை வெளிநடப்பு செய்கிறோம்." என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Farmers Farmers Protest Farmer Protest Tamilnadu Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment