scorecardresearch

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

மத்திய அமைச்சசர் பொன். ராதாகிருஷ்ணன் நினைத்திருந்தால் அவர் பதவியேற்றதில் இருந்து ஓராண்டிற்குள் இந்த பணிகளை முடித்திருக்கலாம்.

ramadoss. PMK, Ramadoss,Karnadaka, Tamilnadu Government, Private sector job,

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மத்திய – மாநில அரசுகளின் செயல்படாத தன்மைக்கு உதாரணம் கூற வேண்டுமெனில் திண்டிவனம் & கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளைத் தான் குறிப்பிட வேண்டும். அந்த அளவுக்கு இச்சாலைத் திட்டப் பணி கன்னித்தீவு கதை போன்று இழுத்துக் கொண்டே செல்கிறது.

திண்டிவனம் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருகிறேன். எண்ணற்ற போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தியிருக்கிறோம். கடந்த 2015-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், தீவனூர், நாட்டார்மங்கலம், செஞ்சி, ஆலம்பூண்டி, கடலாடிக்குளம் கூட்டுச்சாலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, கோளாப்பாடி, எரையூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், ஜெகதேவி, கிருஷ்ணகிரி ஆகிய 16 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

திண்டிவனத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு நானே தலைமையேற்றேன். அதன்பின்னர் 29.06.2015 அன்று இதுகுறித்த வழக்கை விசாரித்த செஞ்சி நீதிமன்றம், இச்சாலையில் திண்டிவனம் & திருவண்ணாமலை இடையே வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்தது. ஆனால், அதன்பிறகும் இத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மத்திய அரசு நிர்ணயித்த இலக்குப்படி இப்பணிகள் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிந்திருக்க வேண்டும். இது புதுச்சேரி – கிருஷ்ணகிரியை இணைக்கும் 66-ம் எண் தேசிய நெடுஞ்சாலையின் ஓர் அங்கமாகும். இதில் புதுச்சேரி – திண்டிவனம் இடையிலான பணிகள் 2010-ம் ஆண்டுக்கு முன்பே நிறைவடைந்து விட்டன.

திண்டிவனம் -கிருஷ்ணகிரி இடையிலான 170 கி.மீ நீள சாலையின் அகலத்தை 7 மீட்டரிலிருந்து 10 மீட்டராக விரிவுபடுத்தி இருவழிப் பாதையாக்குவது தான் இத்திட்டத்தின் பணியாகும். இச்சாலையில் 2 பெரிய பாலங்கள், 16 சிறிய பாலங்கள், 366 குறும்பாலங்கள் மற்றும் 2 தொடர்வண்டி மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். இதுதவிர, திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி, ஊத்தங்கரை உள்ளிட்ட 9 இடங்களில் 43.42 கி.மீ. நீளத்திற்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். ஆந்திரத்தை சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 2010-ம் ஆண்டில் வகுக்கப்பட்டு, 2011-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று மாதத்திற்கு 12.50 விழுக்காடு வீதம் இரு ஆண்டுகளில் பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால், திட்டப்பணிகள் தொடங்கி 64 மாதங்கள் ஆகியும் இன்னும் 64% பணிகள் கூட முடிக்கப்படவில்லை; வெறும் 53% பணிகள், அதாவது 94 கி.மீ. நீளப்பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.

அந்தப் பணிகள் கூட முழுமையாக முடிவடையவில்லை. கடந்த 64 மாதங்களில் மாதத்திற்கு 2.75 கி.மீ வீதம் பணிகள் முடிக்கப்பட்டிருந்தால் கூட இந்நேரம் திட்டம் நிறைவடைந்திருக்கும். உண்மையில் இந்த சாலை நான்கு வழிப்பாதையாக நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதலில் 4 வழிச்சாலையாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம் பின்னர் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால், இருவழிப் பாதையைக் கூட முழுமையாக அமைக்காமல் பல பணிகள் பாதியில் நிற்கின்றன.

இத்திட்டம் நிறைவேற்றப்படாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இத்திட்டத்திற்கான ஒப்பந்தத் தொகை ரூ.624.24 கோடி போதுமானதல்ல என்பதால், அதை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர்கள் தான் பணிகளை கிடப்பில் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளோ இதை மறுப்பதுடன், திட்டப்பணிகளுக்குத் தேவையான கருங்கல் ஜல்லி, மண் உள்ளிட்ட பொருட்களை எடுக்க அனுமதி அளிப்பதில் மாநில அரசு இழுத்தடிப்பு செய்வதால் தான் தாமதமாவதாக கூறுகின்றனர்.

ஆனால், திண்டிவனம்- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் தாமதமாவதற்கு தமிழக அரசு காரணமல்ல என்று தமிழக முதலமைச்சரும், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தாமதத்திற்கு யார் காரணம் என்பது ஒருபுறமிருக்க இதனால் மக்களும், திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர்.

வழக்கமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் இச்சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை& கிருஷ்ணகிரி இடையிலான சாலை பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. திண்டிவனம்- திருவண்ணாமலை இடையிலான சாலை போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை.

திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான 170 கி.மீ. தொலைவை சாதாரணமாக இரண்டரை மணி நேரத்தில் கடக்க முடியும். ஆனால், இப்போது இந்த தூரத்தைக் கடக்க 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வது சாகசப் பயணமாகவே இருக்கும். மழைக் காலங்களில் இரவு நேரத்தில் பயணம் செய்தால் விபத்துக்குள்ளாவதை தவிர்க்கவே முடியாது. இந்த சாலைத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை நூற்றுக்கணக்கானோர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

திண்டிவனம் தொடங்கி கீழ்ப்பென்னாத்தூர் வரையிலான பகுதியில் மட்டும் சாலை, பேரடிக்குப்பம், வல்லம் ஏரிக்கரை, கலையூர், செஞ்சி வட்டச்சாலை, செஞ்சி காப்புச் சாலை, மேல்பாப்பம்பாடி ஏரிக்கரை, கீழ்ப்பென்னாத்தூர் வட்டச்சாலை ஆகிய இடங்களிலும், கீழ்ப்பென்னாத்தூருக்கு அப்பால் சோமாசுபாடி, மல்லப்பம்பாடி, காரியமங்கலம், பக்ரிபாலயம், அரசங்கன்னி, ஆனந்தவாடி ஆகிய இடங்களிலும் இருவழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கவில்லை. இதனால் இப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

இதேபோல், உளுந்தூர்ப்பேட்டை & சேலம் இடையிலான 136 கி.மீ நீள நான்குவழிச் சாலையில் எட்டு இடங்களில் புறவழிச்சாலைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. அயோத்தியாப்பட்டினம் புறவழிச் சாலையில் 5.72 கி.மீ, வாழப்பாடி புறவழிச்சாலையில் 3.75 கி.மீ, ஆத்தூர் புறவழிச்சாலையில் 7.5 கி.மீ, சின்ன சேலம் புறவழிச்சாலையில் 4.18 கி.மீ, கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் 4.50 கி.மீ, தியாகதுருகம் புறவழிச்சாலையில் 3.65 கி.மீ, எலவனாசூர் புறவழிச்சாலையில் 3.35 கி.மீ, உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் 2.22 கி.மீ தொலைவுக்கும் இருவழிச் சாலைகளாகவே உள்ளன.

நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் இருவழிச் சாலைகளிலும் அதேவேகத்தில் செல்வது தான் இத்தகைய விபத்துக்களுக்கு காரணம். இருவழிச் சாலைகளாக உள்ள மொத்தம் 39 கி.மீ. நீள புறவழிச்சாலைகளில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 220 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதிலிருந்தே இது மரணப்பாதையாக மாறியிருப்பதை அறிய முடியும். இந்த புறவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் அவை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிட்டன.

சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூர் முதல் வாலாஜா வரையிலான சாலை ஆறுவழிப் பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், வாலாஜா முதல் சென்னை வரையிலான பாதை நான்கு வழியாகவே இருக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உண்மையில் திருப்பெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் அந்தப் பகுதியில் எட்டு வழிச் சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட ஆறு வழிச்சாலை கூட இன்னும் அமைக்கப்படாதது மத்திய, மாநில அரசுகளின் தோல்வியைக் காட்டுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் 2014-ம் ஆண்டு அவர் பதவியேற்றதில் இருந்து ஓராண்டிற்குள் இந்த பணிகளை முடித்திருக்கலாம். ஆனால், பலமுறை நினைவுபடுத்தியும் ஏனோ அவரும் இந்த திட்டத்தில் அக்கறை காட்டவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவசியமான இந்த மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ramdadoss urges tindivanam krishnagiri highway project need to be completed soon

Best of Express