/indian-express-tamil/media/media_files/2025/11/03/admk-2025-11-03-13-11-30.jpg)
RB Udhayakumar| Sengottaiyan| Edappadi Palaniswami| ADMK
சென்னை: முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் மூத்த தலைவருமான செங்கோட்டையன், அண்மையில் கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் செங்கோட்டையனைக் கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் செங்கோட்டையன் குறித்த அவருடைய விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன:
"எடப்பாடியாரை நம்பி யாரும் கெட்டதில்லை!"
"அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நம்பி இதுவரை யாரும் கெட்டதில்லை. மாறாக, அவரை நம்பாமல் கெட்டவர்கள் பலர் வரலாற்றில் சாட்சியாக இருக்கிறார்கள். செங்கோட்டையனின் பேச்சுகளில் சுயநல எண்ணமே வெளிப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமைதி, அடக்கம், உழைப்பாளி, நடுநிலை தவறாதவர் என்ற ஒரு பொய்யான பிம்பத்தின் கட்டமைப்பு உடைந்து விட்டது. அவருடைய பேச்சுகள் அனைத்திலும் சுயநல எண்ணமே வெளிப்படுகிறது. அவர் துரோகம் செய்தது ஆண்டவனுக்கும், அம்மாவுக்கும் மட்டுமே தெரியும்.
அம்மா இருக்கும் வரை அமைச்சராக முடியவில்லை; அதன் பின்னரே நீங்கள் பொறுப்பு பெற்றீர்கள். அப்போது தி.மு.க. அரசு மீது நீங்கள் ஒருமுறையாவது விமர்சனம் செய்தீர்களா? மாறாக, ஸ்டாலின் அரசைப் பாராட்டியதற்குச் சட்டமன்றப் பதிவே சாட்சி. இது எதிர்க்கட்சித் தொண்டர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.
அம்மா படம் இல்லாத மேடையில் பங்கேற்க மாட்டேன் என்று கூறிய நீங்கள், இன்று கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படம் இருக்கும் மேடையில் பங்கேற்றதற்கு மனசாட்சி சுடவில்லையா? உங்கள் நடுநிலை தவறி விட்டது.
எடப்பாடியார் இன்று 170 தொகுதிகளில் எழுச்சிப் பயணத்தை நடத்தி மக்களிடமிருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார். இதைக் கண்டு பொறாமை கொண்ட செங்கோட்டையன், ஈரோடுக்கு எடப்பாடியார் வருகை தரும் போது தானும் பங்கேற்க மாட்டேன் என்று கூறி வன்மத்தை வெளிப்படுத்தினார்.
அம்மா இருக்கும் போது உங்களின் அரசியல் அஸ்தமனத்துக்கு யார் காரணம் என்று அழுது கூறிய நீங்கள், இன்று அதே மனிதர்களிடமே அடைக்கலம் தேடிச் சென்றுள்ளீர்கள். இப்போது நீங்கள் தூக்கம் வரவில்லை என்று கூறுகிறீர்கள்; உண்மையில் உங்கள் அரசியல் வாழ்க்கைதான் தூக்கமின்றித் தவிக்கிறது.
எடப்பாடியாரை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை; பலர் வாழ்வு பெற்றுள்ளனர், அதற்கு நானே சாட்சி," என்று கூறி ஆர்.பி. உதயகுமார் தனது பதிவை நிறைவு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us