தமிழகத்தில் உள்ள வங்கிகளில் இன்று முதல் ரூ.200 நோட்டுகளை வினியோம் செய்யப்பட இருக்கிறது. வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த ரூ.200 நோட்டுகளை வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு பரிந்துரையின் படி புதிய ரூ.200 நோட்டுகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி, புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டது. ரூ.2000 நோட்டுகளை சிரமமின்றி மாற்றும் வகையில் இந்த ரூ.200 நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.200 நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்து வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இன்று முதல் புழக்கத்திற்கு கொண்டு வரப்படுகிறன்றன.
சென்னை ரிசர்வ் வங்கிக்கு ஏற்கெனவே புதிய ரூ.200 நோட்டுகள் கொண்டுவரப்பட்டுவிட்டன என்ற போதிலும், தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளுக்கு இந்த புதிய நோட்டுகளை பிரித்து கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ரிசர்வ் வங்கியிலேயே இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட வங்கிகளுக்கு மட்டும் ரூ200 நோட்டுகள் முதற்கட்டமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று முதல் தமிழகத்தில் ரூ.200 நோட்டுகள் புழக்கத்திற்கு வருகின்றன.
சொந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும்போது மட்டுமே இந்த புதிய ரூ.200 நோட்டுகளை பெற முடியும். வங்கிக் கணக்கு இல்லாமல் தனியாக சென்று இந்த ரூ.200 நோட்டுகளை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதே விதிமுறை தான் அடுத்து வினியோகம் செய்யப்பட இருக்கும் ரூ.50 நோட்டுகளுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த புதிய ரூ.200 நோட்டுகளை ஏ.டி.எம் இயந்திரங்களில் பெறுவதற்கு சுமார் ஒரு மாத காலம் ஆகலாம் என தெரிகிறது. முன்னதாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.2000 மற்றும் ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்தும் வகையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகளை ஏ.டி.எம்-ல் பெறும் வகையில் கூடுதலாக சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இதற்கு சுமார் ஒரு மாத காலமாகலாம் என்று கூறப்படுகிறது.