நடிகர் கமல்ஹாசனின் அரசியல் ஆக்ஷனுக்கு அணு உலை எதிர்ப்புப் போராளி சுப.உதயகுமாரன், மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோரின் ரீயாக்ஷன் இங்கே!
சுப.உதயகுமாரன்: ‘கடவுள் பிரமை (god complex) பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் முதல்வராகப் போகிறாராம். இதுதான் மேற்குறிப்பிட்ட நோயின் முக்கிய அறிகுறியே! எடுத்த எடுப்பிலேயே முதல்வர்தான் ஆவார்கள். தேவையான தகுதி, திறமை, அறிவு, ஆற்றல், அனுபவம் இருக்கிறதா என்று கடுகளவும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்தான் கடவுள் ஆயிற்றே!
இந்தத் திடீர் ஊழல் ஒழிப்பு அவதாரப் புருடரின் பின்னால் நடப்பது என்ன? கன்னட ரஜினி படம் இங்கே ஓடாது என்று தெளிவாகத் தெரிந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வகையறாக்கள் தயாரித்து வெளியிடும் “மண்ணின் மைந்தன்” படம்தான் இந்த கமல்ஹாசன். எச்.ராஜாவும், தமிழிசையும், இத்யாதிகளும் கமலை எதிர்ப்பது போன்று நடிப்பது திரைக்கதையின் ஓர் அம்சம். காவிகள் கமலை எதிர்ப்பது போல நடித்தால், நாம் வலிந்துபோய் ஆதரிப்போம் எனும் சதித் திட்டம்.

அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டி.வி. தொடங்கியபோது, அந்த அறிவிப்புகளுக்கு தன் குரலை ஈந்து, அந்த “தேசவெறி” திரைப்படத்துக்கு ஒப்புதலும், ஆதரவும் அளித்த மறைமுக ஆரியத்துவா நபர் இந்த கமல். ஆரியத்துவாவின் வட இந்திய பி-டீம் அன்னா ஹாசரே என்றால், தென்னிந்திய B-Teamதான் நடிகர் கமல். இவர்களுக்கு “ஊழல், ஊழல்” என்று உளறுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பல்வேறு மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவாரா, அவற்றுக்காகப் போராடுவாரா இவர்?
நடிகர் கமலை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்கள் பலரும் சொல்கிறார்கள், இவருக்கு எதைப் பற்றியும் ஆழமான அறிவோ, புரிதலோ கிடையாது என்று. ரசிகர்கள் கேட்க விரும்பும் ‘பஞ்ச் டயலாக்’ பேசுகிற நடிகர்கள் அரசியலுக்கு, ஆட்சிக்கு வந்தால், இப்போதுள்ள பொய்யர், புளுகர்களைவிட மோசமான பொல்லாதவர்களிடம் மாட்டிக் கொள்வோம், தோழர்களே!
கோவில் திருவிழாவில் கரகாட்டம் ஆடும் கலைஞர்களின் ஆட்டத்தை ரசிப்போம், ஊக்குவிப்போம், அத்தோடு நிறுத்திக் கொள்வோம். அவரை ஊருக்குத் தலைவர் ஆக்குவோம் என்று முட்டாள்தனமான முடிவெடுத்தால், ஏமாற்றமும், வேதனையுமே மிஞ்சும்.’
பேராசிரியர் அ.மார்க்ஸ்: ‘கமலஹாசன் முதலமைச்சராக ஆவதற்கு தயாராகிவிட்டாராம். தமிழக மக்களுக்காக இந்த முள் முடியைச் சுமக்கத் தயாராகிவிட்டாராம்…
இந்தியா டுடே க்கு அளித்த பேட்டியில் இந்த நபர் சொல்லியுள்ளது இன்று முதல் பக்கச் செய்தி..
என்னதான் இந்த ஆட்கள் எல்லாம் தமிழக மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டுள்ளனர் எனப் புரியவில்லை!

தமிழக மக்களின் உரிமைகள், தொழிலாளர், விவசாயிகள், தலித்கள், சிறுபான்மையினர் என்றெல்லாம் பேசிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருந்த இயக்கங்கள், தலைவர்கள் எல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக்கிங்க. முள் முடியைச் சுமக்க ஆள் ரெடியாயிட்டு..
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் இல்லை இது!’