ஆர்.கே.நகரில் போட்டியிட நான் தயார். ஆனால் ஆட்சி மன்றக் குழு கூடி எடுக்கும் முடிவின் அடிப்படையில் வேட்பாளரை சசிகலா அறிவிப்பார் என டிடிவி தினகரன் கூறினார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நடைபெற்றது. இதில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
அதிமுக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஓ.பி.எஸ். யார் என்று தெரிந்து விட்டது. சட்டமன்ற கூட்டத் தொடரின்போது எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நான் போட்டியிட தயாராக உள்ளேன். ஆனால் ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு செய்து, வேட்பாளர் யார் என்பதை பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பார்.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே எங்களது தொண்டர்கள் வெற்றிக்காக பாடுபட தொடங்கி விட்டார்கள். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரது கருத்தை மதிக்கிறேன். ஆனால் அனைவரும் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையை ஏற்று செயல்படவேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். அதனை மறைத்து மேடை போட்டு முதல்வரும் துணை முதல்வரும் ஏதேதோ பேசி வருகிறார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை கூறிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப மாட்டார்கள்.
இந்த ஆட்சி நீடிக்கும் என்று அதிகாரிகள், போலீசார் நினைத்து செயல்பட்டு வருகிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் நேற்றே நிலவேம்பு கசாயம் வழங்க இருந்தோம். ஆனால் இன்றுதான் அனுமதி வழங்கினர். அமைச்சர்களுடன் சேர்ந்து செயல்படும் அதிகாரிகள் மற்றும் போலீசார் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலை வரும் என்று தெரிவித்து கொள்கிறேன்’. இவ்வாறு கூறினார்.