Real heroes of T23 operation & 3 other man eaters of Nilgiris : 22 நாட்கள்; கொட்டும் கனமழை; விடாது கண்களுக்கும் மூளைக்கும் வேலை கொடுத்த ஒற்றைப் புலி… தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைவர் மனதிலும் எழுந்த அந்த ஒரு கேள்வி, மனிதர்களை வேட்டையாடிய டி23-ஐ வனத்துறையினர் உண்மையிலேயே உயிருடன் பிடிப்பார்களா? என்பது தான்.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கள் - மனிதர்களுக்கு இடையேயான சந்திப்புகளும், இடையூறுகளும் தவிர்க்க முடியாத அசம்பாவிதங்களும் புதிதல்ல. ஆனால் ஒரே புலி 4 மனிதர்களை தாக்கி கொன்றுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதோடு, இது தொடர்பான முடிவை உடனே எடுக்க வனத்துறையினரை போராட்டங்கள் மூலம் கட்டாயப்படுத்தவும் செய்தது.
பொதுமக்கள் ஒரு பக்கம், வனவிலங்கு தாக்குதல் மறுபக்கம்… 22 நாட்கள் கூடலூர் தேவன்சோலை தேயிலை தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து என்ன? களத்தில் நின்று பணியாற்றி மக்களுக்கும், டி23 புலிக்கும் இடையே அரணாக பாடுபட்ட வனத்துறையினர் யார் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.
டி23 புத்திசாலி - மனம் திறக்கும் பொம்மன்
”டி23-ஐ இன்று, நேற்றில் இருந்து நான் பார்க்கவில்லை. அது 2 வயது குட்டியாக இருக்கும் போதில் இருந்தே நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். மிகவும் பலமான, டொமினெனட்டான புலிங்க அது… கேமரா ட்ராப் பொறுத்தப் போகும் போது நான் அதை பாத்துருக்கேன்; ஒன்னும் பண்ணாது… நாம ஒரு வழில வர்றோம்ன்னா அது வேறொரு வழில போய்ரும்…
அதே மாதிரி ரொம்பவும் புத்திசாலியான புலியும் கூட, அதற்கான பேட்டர்னே ரொம்பவும் வித்தியாசமாக தான் இருக்கும். காலைல 10 மணில இருந்து சாயங்காலம் 5 மணி வரை தான் வேட்டைக்கு போகும். அதுக்கு மேல ராஜா மாதிரி தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்துக்கும். ஒரு முறை அட்டாக் பண்ணுச்சுன்னா ரெண்டு, மூனு கில்லிங் ஒரே நேரத்துல பண்ணும். ஒன்ன மட்டும் அடிக்கிறது அது பழக்குத்துலையே இல்ல” என்று தனக்கும் டி23 புலிக்கும் இடையேயான உறவு குறித்து தெரிவிக்கிறார் முதுமலை வனச்சரகத்தில் பணியாற்றும் பொம்மன்.
பொம்மன் மட்டுமின்றி, மாதன், காலன் மற்றும் மசினக்குடி வனச்சரகத்தில் பணியாற்றும் மற்றொரு பொம்மன் ஆகிய 4 பேரும் இந்த புலியை தடம் அறியும் (Tiger Tracking) பணியில் முக்கிய பங்காற்றிய வேட்டைத் தடுப்பு பிரிவினர்.
22 நாட்கள் பணியில் இருந்த சவால்கள் என்ன என்று கேள்வி எழுப்பிய போது, “கூடலூரில் புலியை தேட ஆரம்பிச்ச போது நல்ல மழை. அந்த பகுதி முழுசா டீ எஸ்டேட் இருந்ததால புலிய தேடும் பணி ரொம்ப கஷ்டத்த தரல.. தேவன் எஸ்டேட் முழுக்கவும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் தான் அதிகம். அதனால் டி23-யோட பக்மார்க் கண்டுபிடிக்கிறது ஈசியா இருந்துச்சு. ஆனா அந்த புலி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நடந்து மசினக்குடி வந்த பின்னாடி ரொம்ப சவால். டெரெய்ன் முற்றிலுமா வேற. அப்பறம் இந்த பக்கமும் ஏற்கனவே நிறைய புலிக இருக்குறதால, எது டி23யோட கால்த்தடம் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் சவாலா தான் இருந்தது” என்றார் பொம்மன்.
புலிகள் மட்டுமின்றி யானைகள், சிறுத்தைகளை தடம் அறிந்து அவற்றை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பொம்மன். தெப்பக்காட்டின் பூர்வகுடிகளான குறும்பர் பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் 2009ம் ஆண்டு வேட்டைத் தடுப்பு காவலராக பணியில் சேர்ந்தார். 2012ம் ஆண்டில் இருந்து யானைகள் மற்றும் புலிகளை தடம் அறியும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 9 யானைகள், 3 சிறுத்தைகள் மற்றும் இதுவரை தமிழகத்தில் “Man-eater" வகை புலிகளாக அடையாளம் காணப்பட்ட (டி23) உட்பட நான்கு புலிகளின் தடம் அறியும் பணிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
”டெய்லியும் நாங்க என்ன வேலை பாக்குறோமோ அதே வேலையத் தான் நாங்க 22 நாளும் பாத்தோம். காட்டுக்குள்ள ரோந்து போகுற மாதிரி தான். அங்கன்னா புலி முன்னாடி இருக்கும். இந்த ஆப்பரேஷன்ல நாங்க புலிய தேடிட்டு போனோம். புலின்றதால ஆபத்து கொஞ்சம் அதிகம் தான். அதனால நாங்க ரொம்ப பாதுகாப்பு உணர்வோட வேல பாத்தோம்” என்றார் பொம்மன்.
கூடலூர் வனச்சரகத்தில் புலியை தடம் அறிய வனத்துறையினருடன் பணியர், குறும்பர், இருளர் மற்றும் காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேமரா ட்ராப் வைக்க, புலியின் தடங்களை கண்டறிய பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கூடலூரில் மக்கள் போராட்டம் ஏற்பட காரணம் என்ன?
13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று 2018ம் ஆண்டு முதல் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. வன ஓரங்களில் அமைந்திருக்கும் கிராமப் பகுதிகளிலும், மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும் வந்து சென்றது அந்த புலி. முதுமலை டைகர் 23 (MT23) என்று அதற்கு பெயரிடப்பட்டது. கடந்த செப்டம்பர் 24ம் தேதி அன்று சந்திரன் என்ற நபரை டி23 புலி தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புலியை உடனே பிடிக்க வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விரைவில் டி23 பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் மாற்றப்படும் என்று வனத்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி முடிக்கும் முன்னர் கோவை மருத்துவமனையில் சந்திரன் உயிரிழந்தார். அடுத்த நாள் மசினகுடியில் கால்நாடை மேய்த்துக் கொண்டிருந்த பசவன் என்ற நபரை புலி தாக்கிக் கொன்றது. மீண்டும் போராட்டத்தில் இறங்கிய மக்கள் புலியை கொல்ல வேண்டும் என்று போர்கொடி தூக்கினார்கள்.
ஒரு பக்கம் மக்கள் போராட்டம்; மற்றொரு பக்கம் 300க்கும் மேற்பட்ட வனத்துறையினர், பல்வேறு பழங்குடியின மக்கள் புலியை பிடிக்க தீவிர பணிகள். திடீரென இறந்தவரின் உடலை வாங்க மறுத்த அவரின் உறவினர்கள் உதகை-கூடலூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய, டி23 விவகாரம் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய விவாதமாக மாறியது. Hunt-Down - என்ற வார்த்தையின் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதனை கூறவும் மக்கள், புலியை சுட்டுப் பிடிப்பார்கள் என்று நினைத்தனர். ஆனால் வனவியல் பாதுகாப்பு சட்டம் 1972 என்பது அனைத்து விதமான முயற்சிகளும் தோல்வி அடையும் போது இறுதியில் புலியை கொன்று பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறை மேல் அதிகாரி ஒருவர் கூறினார்.
புலியை உயிருடன் பிடிக்க கொடுத்த உத்தரவு மகிழ்ச்சி அளித்தது - ட்ராக்கர் காலன்
“புலியை உசிரோடதான் பிடிக்கணும்னு சொன்னப்போ எங்களுக்கு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ஏன்னா, எந்த ஒரு உசுரா இருந்தாலும் அது சுதந்தரமா வாழ்றதுக்கான உரிமை இருக்குது” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறினார், இந்த புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட மற்றொரு ட்ராக்கர் காலன்.
17 வருடங்களாக வேட்டைத் தடுப்பு காவலராக பணியாற்றி வரும் காலன் டி23 பற்றி கூறினார். “இந்த புலியை மேன் - ஈட்டர்ன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லங்க… ஏன்னா, இது தாக்கி உயிரிழந்த எல்லாருமே இந்த பக்கம் காட்டின் “பஃபர்” பகுதில மாடு, எருமை மேய்க்கிறவங்க தான். மாடு ஒரு பக்கமா மேஞ்சுட்டு இருக்கும் போது, மேய்க்குறவங்க கொஞ்சம் அசதியா உக்காந்துருப்பாங்க. தன்னுடைய எரைன்னு நெனைச்சு புலி அடிச்சிருக்கும். எப்பவுமே மனசுல வச்சுக்கங்க, நிக்கிற மனுசங்கள புலி அடிக்கவே அடிக்காது. இதுக்கு முன்னாடி Man-eater -ன்னு சொன்ன புலி உண்மையாலுமே மனுசங்கள தேடி வேட்டையாடுச்சு. இது மத்த புலிகளுக்கும் டி23க்கும் இருக்குற வித்தியாசம்” என்று கூறினார்.
புலியோட கால்த்தடத்தின் அளவு தான் அதோட வயச தீர்மானிக்குது. அந்த வயச வச்சு தான் நாம் தேடுற புலி எதுன்னு சொல்ல முடியும். மூன்று வயது புலியா இருந்தா 12 x 12 செ.மீ அளவுக்கு கால்தடம் இருக்கும். 15x15 செ.மீ அளவுன்னா அது ரொம்ப வயசான, பெரிய புலி; டி23யோட கால்தடமும் இந்த சைஸ் தான்.
புலி தன்னோட இடத்துக்காக வேறொரு புலியோட சண்ட போட்டு முகம், உடம்பு முழுசா சரியான காயம். ரொம்பவும் தளர்ந்தும் போய்ருச்சு. 250 கிலோ இருக்கும். தேடுற வேலைய ரொம்ப தீவிரபடுத்துனுதால சாப்பிடாமவே இருந்தது புலி. அதான் மயக்க ஊசி போட்டதும் கொஞ்சம் நேரம் பிடிபடாம இருந்தது. ஆனா கடைசில அத பிடிச்சுட்டோம்” என்று கூறினார் காலன். இதற்கு முன்பு தமிழகத்தில் Man-eater ஆக அடையாளம் காணப்பட்ட நான்கு புலிகளையும் தடம் அறியும் பணியில் இவரும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டி23-ஐ மைசூரில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார்.
என் யானை என்னை நம்பியது
நாங்கள் வாழைத்தோட்டம், மாவனல்லா பகுதியில் ரிவால்டோ யானையை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பார்த்துக் கொண்டிருந்தோம் என்று தன்னுடைய யானை உதயனை கைகாட்டுகிறார் பாகன் சுரேஷ். 23 வயதான மக்னா யானை உதயன் மற்றும் உதயனால் 2016ம் ஆண்டு சேரம்பாடியில் பிடிக்கப்பட்ட காட்டு யானை ஸ்ரீநிவாசனும் டி23 புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“அக்டோபர் 3ம் தேதி அன்று நாங்கள் மசினகுடி செக்போஸ்ட்டிற்கு வந்தோம். புலியை ட்ராக் செய்யும் நபர்கள், அதன் இருப்பிடம் உறுதி செய்யப்பட்ட பிறகு எங்களுக்கு தகவல் தருவார்கள். பிறகு நாங்கள் யானையுடன் அங்கே செல்ல வேண்டும். உதயனின் அம்பாரியில் வனத்துறை அதிகாரி, மருத்துவர் என ஒரு குழு பயணித்தது. அக்டோபர் 15ம் தேதி அன்று புலி இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட பிறகு நாங்கள் அங்கே சென்றோம். முதலில் புலியை பார்த்ததும் உதயன் பயந்துவிட்டான். முதல் இரண்டு முறை உறுமிய போது உதயன் பின் வாங்கினான். ஆனால் அதன் பிறகு புலியின் வேகத்திற்கு ஈடு கொடுத்து மேடேறிய யானையின் மேலே இருந்து டாக்டர் ராஜேஷ் மயக்க ஊசி செலுத்தினார்” என்று கூறினார் சுரேஷ்.
புலி தாக்கும் என்ற நிலை வந்தால் யானை தப்பித்துவிடும். ஆனால் யானையின் மேல் அமர்ந்திருக்கும் அதிகாரிகளின் உயிருக்கு நான் பொறுப்பு எடுத்துக் கொண்டேன். எக்காரணம் கொண்டும் புலியை கோபப்படுத்தும் ஒரு செயலும் நிகழக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். ஆரம்பத்தில் பயமாக தான் இருந்தது. உதயனை நான் நம்பினேன். உதயன் என்னை நம்பினான். இந்த குழுவை நம்பினான். டி23 உயிருடன் பிடிபடுவது சாத்தியமானது என்றார் சுரேஷ்.
டி23 தேடும் பணி முடிவுற்ற நிலையில் ஸ்ரீநிவாசன் தன்னுடைய பாகன் மாதன் மற்றும் கவாடி கேத்தனுடன் அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு திரும்பி சென்றுவிட்டது.
புலி எங்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டது
ஒரு புலியின் ஹோம் ரேஞ்ச் என்பது 40 முதல் 100 கி.மீ இருக்கும். வாழ்விடம் தொடர்பான டெர்ரிட்டரி போட்டியில் டி121 புலியிடம் தோல்வி அடைந்த டி23 அதன் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. அந்த போட்டியில் தாக்குதலுக்கு ஆளான டி23 புலியின் வலது கண்ணில் பலத்த காயம். மேலும் வயது மூப்பின் காரணமாக இடது பக்கத்தில் இருந்த கோரப்பல்லையும் டி23 இழந்துவிட்டது. இது போன்ற சூழலில் மிகவும் எளிதில் கிடைக்கும் உணவைத் தான் வேட்டையாடும். புலிக்கு இந்த பகுதி முழுமையும் அத்துப்படி என்பதால் எங்கே கால்நடை விலங்குகள் உள்ளன என்பதை நன்றாக ஆராய்ந்துள்ளது.
வன ஓரங்களில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கு சென்று கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. நாம் எப்படி புலியின் நடவடிக்கைகளை கூர்ந்து ஆய்வு செய்தோமோ அப்படியே புலியும் எங்களை ஆய்வு செய்தது. நாங்கள் கீழே இருக்கிறோம் என்று தெரிந்து கொண்ட புலி தேயிலைப் புதரில் இருந்து ஒரு நாள் முழுவதும் வெளியேறவே இல்லை. அதே போன்று கூண்டு வைக்கப்பட்ட இடத்தின் அருகிலும் அந்த புலி வரவே இல்லை என்று கூறினார் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் அசோகன்.
வனத்துறையினர் நம்பிக்கை
ஒவ்வொரு நாளும் இன்று இந்த புலி சிக்கிவிடும் என்ற பிரார்த்தனையோடு தான் துவங்கியது. மாட்டிறைச்சி, எருமை இறைச்சி என்று கொண்டு போய் கொடுத்துவிட்டு கூண்டுக்குள் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் புலி மிகவும் புத்திசாலி. எனவே தப்பி ஓடிவிட்டது. இது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்று கூற முடியாது. ஆனால் என் வாழ்வில் மறக்கவே இயலாத ஒரு ஆப்பரேஷன் இது என்று கூறினார் கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன்.
22 நாட்கள் கடுமையான தேடுதல் பணிகளுக்கு பிறகு கூட்டரபாரா பகுதியில் அக்டோபர் 15ம் தேதி அன்று உயிருடன் பிடிக்கப்பட்ட புலி பிறகு சாமுண்டி வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கே புலிக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், காயங்களில் இருந்து தேறி வருகிறது டி23. விரைவில் தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பாராட்டு
அக்டோபர் மாதம் 22ம் தேதி அன்று சென்னை உச்ச நீதிமன்றம், டி23-ஐ உயிருடன் பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டியது. புலியை சுட்டுப்பிடிக்கும் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சஞ்சீப் பானர்ஜீ மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதன்மை அமர்வு, நிபுணர்கள் உதவியுடன் மனிதர்களை வேட்டையாடும் பெரிய பூனை இனத்தை சேர்ந்த விலங்களுகளின் தன்மையை ஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.
புலியை பிடிப்பதில் கால தாமதம் ஏன்?
புலியை பிடிக்க ட்ரோன்கள், கும்கி யானைகள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், மோப்ப நாய்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் புலியை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னணி என்ன என்று அறிய முற்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர்களின் விருப்பதிற்கு இணங்க, அவர்களின் பெயர்கள் இங்கே இணைக்கப்படவில்லை
கேரள வனத்துறை, என்.ஜி.ஓக்கள்-ன்னு நிறைய பேர், புலியை பிடிக்கின்றோம் என்ற பெயரில் புதர்களில் பட்டாசு கொளுத்தி போடுவது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபட்டார்கள். கூட்டம், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது நிச்சயமாக புலியை மனிதர்கள் வாசமே இல்லாத இடத்திற்கு இட்டுச்செல்லும். 200 பேர் - 250 பேர் இருந்ததால் புலியை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
கூடலூரில் இருந்து மசினக்குடிக்கு புலி செல்வதற்கு முன்பு யாருடைய கண்ணிலும் இரண்டு நாட்களுக்கு படவே இல்லை.
இரண்டாவது வனத்தின் அமைப்பு. கூடலூர் பகுதி முழுமையும் தேயிலை தோட்டங்களால் நிரம்பியுள்ளது. ட்ரோன்களை கொண்டு எளிதில் புலியின் இருப்பிடத்தை அறிய முடிந்தது. ஆனால் புலி மசினகுடி பகுதிக்கு வந்த பிறகு அது மிகவும் கடினமாகிவிட்டது. அதிகம் புதர்களை கொண்டுள்ள இந்த பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதலை தீவிரப்படுத்த இயலவில்லை. மேலும் கொட்டும் மழை என்பதால் புலிகளின் காலடி தடத்தை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.
மோப்ப நாய்களை பயன்படுத்தியும் கூட ஒரு காரணமாக கூறலாம். புலிகளுக்கு, சிறுத்தைப் புலிகளுக்கு நாய்கள் என்றால் விருப்ப உணவு. அதவை, ராணா, டைகர் போன்ற மோப்ப நாய்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. புலி இருக்கும் இடத்தை நெருங்குவதற்கு முன்பே நாய்கள் விலகி ஓடத் துவங்கிவிட்டது. இதுவும் ஒரு வகையில் நேர விரையம் தான் என்றனர் அவர்கள்.
நீலகிரியில் மனிதர்களை கொன்ற புலிகள்
2014ம் ஆண்டு முதல் தான் நீலகிரி பகுதியில் புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் ஆரம்பமானது. அந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அன்று மாலை சோலடா பகுதியைச் சேர்ந்த கவிதா (33) அவருக்கு வீட்டுக்கு வெளிப்புறத்தில் காணாமல் போனார். அடுத்த நாள் அவரின் பாதி உடல் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து 58 வயது மதிக்கத்தக்க சின்னப்பன் என்பவரை அட்டபெட்டு என்ற பகுதியில் புலி தாக்கி கொன்றது. 8ம் தேதி அன்று மாலை முத்துலட்சுமி (38) என்ற பெண் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது குந்தசப்பை என்ற பகுதியில் புலி தாக்கி கொன்றது. இந்த மூன்று சம்பவங்களைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு தொட்டபெட்டா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சங்கர். ஜனவரி 22ம் தேதி அன்று சிறப்பு தேடுதல் படை அந்த புலியை சுட்டுப் பிடித்தனர். அவர்கள் அந்த புலியை பிடிக்க முயன்ற போது தாக்கியதால் புலி கொல்லப்பட்டது என்று கூறப்பட்டது.
இரண்டாவது நிகழ்வு 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கியது. 30 வயது மதிக்கத்தக்க மகாலட்சுமி என்ற இளம் பெண்ணை 10 வயது ஆண் புலி தாக்கிக் கொன்றது. அதே நாள் மாலை ரெஜிஸ் என்ற நபர் கொல்லப்பட்டார். மேற்கொண்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு 10 கேமரா ட்ராப்கள் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு பலப்பள்ளி, பெருமாள்பள்ளி ராஜன் எஸ்டேட்டில் வனத்துறையின் சுட்டுப் பிடித்தனர்.
2016ம் ஆண்டு இதே தேவர்சோலா பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் புலி தாக்கி உயிரிழந்தார். 8 நாட்கள் கழித்து அந்த புலியை வனத்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
தமிழ்தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.