மைத்ரேயன் – தம்பிதுரை இடையிலான கருத்து மோதலுக்கு முகநூல் பதிவு மட்டும் காரணமல்ல. டெல்லி அதிகாரப் போட்டியே பிரதான காரணம் என்கிறார்கள்.
மைத்ரேயன், ஓ.பன்னீர்செல்வம் அணியின் ராஜகுருவாக கருதப்படுகிறவர். பாஜக.வில் இருந்து அதிமுக.வுக்கு வந்தவர் என்ற அடிப்படையில் பாஜக மேலிடத் தலைவர்களுடன் இன்னமும் நட்பில் இருக்கிறார் மைத்ரேயன். ஓ.பன்னீர்செல்வம் தனி அணி நடத்தியபோது, அவரது டெல்லி ‘மூவ்’களுக்கு இவரே பாலமாக இருந்தார்.
துணை முதல்வர் என்ற அடிப்படையில் கடைசியாக பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்தபோதும், உடன் இருந்தவர் மைத்ரேயன் மட்டுமே! இதிலிருந்து டெல்லி அரசியலில் ஓபிஎஸ்.ஸுக்கு மைத்ரேயனின் பங்களிப்பை புரிந்து கொள்ளலாம்!
அதேசமயம், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கடந்த பல ஆண்டுகளாக டெல்லி அரசியலில் தம்பிதுரையை முன்னிறுத்தினார். அதிலும் ஜெயலலிதாவின் கடைசி காலகட்டங்களில் மைத்ரேயனுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. இயல்பாக இதுவே தம்பிதுரைக்கும், மைத்ரேயனுக்கும் இடைவெளியை உருவாக்கியிருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணியின் ஆகப் பெரிய அதிகாரம் பொருந்தியவராக டெல்லியில் தம்பிதுரை முன்னிறுத்தப்பட்டார். அப்போது ஓபிஎஸ் அணி சார்பில் மைத்ரேயன் லாபி செய்தபோது, அந்த விரிசல் இன்னும் அதிகமானது. ஓபிஎஸ்.ஸுக்கு ஆதரவாக கணிசமான எம்.பி.க்களை ஒருங்கிணைப்பதில் மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.
ஆக, அதிமுக.வின் ஒரு அணி சார்பில் தம்பிதுரையும், இன்னொரு அணி சார்பில் மைத்ரேயனும் உலா வந்த காலம் அது! இரு அணிகளின் இணைப்புக்கு பிறகு, டெல்லியில் கட்சியின் அதிகாரபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க தம்பிதுரையையே இபிஎஸ் தரப்பு நம்பியது. ஆனால் தம்பிதுரையை சசிகலா ஆதரவாளராக ஓபிஎஸ் தரப்பு கருதியது. பாஜக மேலிடத்திலும் அப்படியே தகவல்கள் கூறப்பட்டன.
இதனால் பிரதமர் சந்திப்பு, தேர்தல் ஆணைய விவகாரங்கள் ஆகியவற்றில் தம்பிதுரை ஓரங்கட்டப்பட்டார். இரட்டை இலை விசாரணைக்காக டெல்லிக்கு செல்லும் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்று வரை மைத்ரேயன் இல்லத்தில் கூடுவது, அங்கே தனியாக மீடியாவை சந்திப்பது, அங்கிருந்து தனி அணியாக தேர்தல் ஆணையம் செல்வது ஆகியவற்றை இன்று வரை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அதே இரட்டை இலை மீட்புப் பணிக்காக செல்லும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து தனி அணியாக போகிறார்கள். டி.டி.வி.தினகரன் தரப்பு இன்னொரு அணியாக தேர்தல் ஆணையம் செல்கின்றனர். அதாவது, ‘நாங்கள் இணைந்துவிட்டோம்’ என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கவே இன்று வரை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் தனித்தனியாகத்தான் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி டெல்லி பாலிடிக்ஸ் ஏற்கனவே தம்பிதுரை-மைத்ரேயன் இடையே பூசலை உருவாக்கி வைத்திருக்கும் வேளையில், இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த தம்பிதுரை, ‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என மைத்ரேயன் கூறியது அவரது சொந்தக் கருத்து’ என்றார். தவிர, ‘எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இரட்டை இலை சின்னத்தோடு தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவோம்’ என்றார்.
நேற்று அமைச்சர் ஜெயகுமாரும்கூட கிட்டத்தட்ட இதே கருத்தையே கூறியது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் தூத்துக்குடியில் பேட்டி அளித்த ஓபிஎஸ் அணியின் சீனியர்களில் ஒருவரான பொன்னையனும்கூட, ‘மனங்கள் இணையவில்லை என்பது தவறு. மனப்பூர்வமாக இணைந்து பணியாற்றுகிறோம்’ என்றார்.
ஜெயகுமாருக்கும் பொன்னையனுக்கும் உடனடியாக மைத்ரேயன் பதில் கொடுக்கவில்லை. ஆனால் தம்பிதுரை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துவிட்டு அவரது வீட்டுக்கு போய்ச் சேரும் முன்பே முகநூலில் பொங்கிவிட்டார் மைத்ரேயன்.
மைத்ரேயன் சொல்வது, அவரே குறிப்பிடுவது போல தொண்டர்களின் கருத்தா? என்பது தெரியாது. ஆனால் தம்பிதுரை கூறுவது போல நிச்சயம் அது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல. ஓபிஎஸ் அணியிலும், டெல்லி அரசியலிலும் மைத்ரேயன் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் இதை அறிவார்கள்.